tamilnadu epaper

நறுக்கென்று ஒரு குட்டு

நறுக்கென்று ஒரு குட்டு


 அது ஒரு மேனிலைப் பள்ளி. மழலையர் வகுப்புத் தொடங்கி மேனிலை வகுப்புகள் வரை அங்கே இருக்கின்றன.

 காலையில் பிள்ளைகள் உள்ளே போகும்போதும் மாலையில் வீட்டிற்குத் திரும்பும்போதும் பரபரப்பாக இருக்கும். பெற்றோர்கள் பள்ளியின் நுழைவுவாயிலில் உள்ள கேட்டைத் தாண்டி உள்ளே போகக்கூடாது. கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள பள்ளி. எல்லாமும் சரிதான்.

 புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தலைமையாசிரியை அங்கையர்க் கண்ணி ரொம்பக் கண்டிப்பானவர். அதே சமயம் அன்பானவருங்கூட. அடிக்கடி ஆசிரியர்களை அழைத்துப் பிள்ளைகளிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று அறிவுறுத்திக்கொண்டே இருப்பார்.

 அன்று காலையில் தங்கள் பிள்ளைகளை விடப் பள்ளிக்கு வந்தார்கள் ராகவியும் நிர்மலாவும். ராகவி தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிகிறாள். நிர்மலா ஒரு கல்லூரியில் வேதியியல் பேராசிரியையாகப் பணிபுரிகிறாள்.

        ராகவியின் மகன் வினோத் ஒன்றாம் வகுப்புப் படிக்கிறான். கடந்த இரண்டு நாள்களாக நல்ல காய்ச்சல். இப்போது சரியாகிப் பள்ளிக்கு வந்திருக்கிறாள். வினோத் களைப்பாக இருந்தான். ஆகவே அவன் பள்ளிப் பையை ராகவி தூக்கிக்கொண்டு வந்தாள்.

  பள்ளி நுழைவு வாயிலுக்கு வந்தபோது அந்தப் பள்ளியின் ஆசிரியை கண்மணி நின்றுகொண்டு பிள்ளைகளை உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தாள். போங்க சீக்கிரம் என்று பிள்ளைகளை ஓட வைத்துக் கொண்டிருந்தாள்.

 ராகவி அவளை அணுகி.. மேடம்.. ரெண்டு நாளா என்னோடப் பையனுக்கு நல்ல காய்ச்சல். அதனால இன்னிக்கு ஒரு நாளைக்கு அனுமதியுங்க.. அவன் வகுப்புவரை கொண்டு போய் பள்ளிப்பையை வச்சிட்டு வந்துடறேன்.. என்றாள்.

 நோ.. நெவர். அதெல்லாம் முடியாது. ரூல்ஸ்னா ரூல்ஸ்தான்.. நீங்க உள்ளப் போகமுடியாது.. என்றவள் வினோத்தைப் பார்த்து.. டேய்.. உன்னால பேக்கைத் தூக்கமுடியுமா ? முடியாதா? என்று அதட்டியதும் வினோத் பயந்துபோய் பையை முடியாமலும் தூக்கிக்கொண்டான்.. போ.. உள்ளார என்று அதட்டிவிட்டு.. பாத்திங்களா அவனாலப் பையத் தூக்கமுடியுது.. போங்க என்றாள். ராகவி எதுவும் சொல்லமுடியாமல் கவலையோடு திரும்பி வந்தாள். இப்படித்தான் டீச்சர்ஸ் இருக்காங்க.. பிள்ளைகளோட மனநிலை புரியாத இவங்கள்லாம் டீச்சரா இருந்து என்ன பிரயோஜனம்.. என்றாள் நிர்மலா.

         அன்று மாலை ராகவியும் நிர்மலாவும்.. பிள்ளைகளை அழைக்க வந்து காத்திருந்தாரகள். பள்ளிமணி ஒலித்ததும் பிள்ளைகள் வர ஆரம்பித்தார்கள்.. கண்மணி வாசலுக்கு வந்து பிள்ளைகளைப் போங்க சீக்கிரம் என்று அனுப்பிக்கொண்டிருந்தாள்.. அப்போது பள்ளியின் தலைமையாசிரியை அங்கையர்க்கண்ணியும் உடன் நின்றுகொண்டிருந்தாள்..

 நிர்மலாவின் பையன் வரும்போதே நிர்மலாவை தூரத்தில் இருந்து பார்த்ததுமே.. அம்மா என்று கத்தியபடியே ஓடிவந்தான். அவன் ஓடி வருவதைப் பார்த்ததும் கண்மணி அவனைச் சட்டென்று நிறுத்தி அவன் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்தாள்.. எதுக்கு இப்படி ஓடிவரே? மெதுவா வந்தா என்னடா? என்றதும் அவன் வலி தாங்கமுடியாமல் அம்மா என்று கத்தியபடி அழ ஆரம்பித்தான்..

 என்ன மிஸ்? என்று கோபமாக நிர்மலா உள்ளே நுழைய முற்பட அப்போது ஒன்று நடந்தது இதைப் பார்த்துக்கொண்டிருந்த.. அங்கையர்க்கண்ணி வேகமாகக் கண்மணி அருகே போய் அவள் தலையில் பலமாக ஓங்கி ஒரு குட்டு வைத்தாள்.. கண்மணி எதிர்பார்க்கவில்லை.. வலி.. அம்மா.. என்றபடி திரும்பியவள்.. என்ன மிஸ்? என்று வலியோடு பார்த்தாள்.

 வலிக்குதா உனக்கு? அறிவில்லே? இப்படியா பசங்கக் கிட்ட நடந்துக்குவே.. அம்மாவப் பார்த்தாப் புள்ளங்க ஓடாதா? நீயெல்லாம் டீச்சர் வேலைக்கே லாயக்கு இல்லை.. கம் டு மை ரூம்.. என்றபடி உள்ளே போனாள்.

 ராகவிக்கு அதைப் பார்க்க நிம்மதியாக இருந்தது.


-ஹரணி, தஞ்சாவூர்.