ஆபீசில் இருந்து வீட்டுக்கு வந்த மாதவன் எப்போது குளித்துவிட்டு வருவான் என்று
காத்திருந்த மனைவி மாலினி அவனிடம் பொங்கி வெடித்தாள்
"குதிரைக்கு கடிவாளம் கட்டின மாதிரி நேரா ஆபீசுக்கு போக வேண்டியது..திரும்பி நேரா வர வேண்டியது.வீட்டுல என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு ஒண்ணும் கண்டுக்கிறது இல்லே.."
என்று கத்தி கூச்சல் போட்டாள்.
அவள் எங்கே சுத்தி வருகிறாள் என்பது மாதவனுக்கு நன்றாகவே புரிந்தது. எல்லாம் அவன் தங்கை
சுபா பற்றிய விஷயம்தான்.
சுபாவுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. இந்த ஒரு வருடத்தில் புகுந்த வீட்டில்
அவள் இருந்தது ஆறு மாதம் கூட இருக்காது.அங்கே ஒரு வாரம் இருந்தால் இங்கே வந்து பத்து நாள் டேரா போட்டு விடுவாள். இத்தனைக்கும் வசதியான வாழ்க்கை. மாப்பிள்ளையோ சொக்கத் தங்கம்.
சுபா பேச்சுக்கு மறு பேச்சு பேச மாட்டார்.இருவரும் அன்னியோன்னிய தம்பதிகள்.
அப்படி இருக்கும்போது இவள் ஏன் அப்படி செய்கிறாள்? பார்ப்பவர்கள் கணவன் மனைவிக்கிடையில் ஏதோ பிரச்னை என்றுதானே நினைப்பார்கள்?
"இது எல்லாம் நல்லதுக்கு இல்லைங்க. அவளுக்கு புத்திமதி
சொல்லி அவ வீட்டுக்கு அவளை அனுப்பி வைக்கற வழியை பாருங்க" என்று மாலினி கூறியதை எண்ணியவாறு படுத்துக் கிடந்த மாதவன் அப்படியே தூங்கி போனான்.
இரவு. தண்ணீர் குடிக்க சமையலறை பக்கம் சென்ற மாலினிக்கு
சுபா யாருடனோ போனில் பேசுவது தெளிவாகக் கேட்டது. "என்னடி மீனா ..எல்லோரும் கேட்கிற மாதிரியே நீயும் கேக்குற ..என் அண்ணன் வீட்டுக்கு நான் வரக்கூடாதா ..?
சரி .. நீ என் உயிர்த்தோழி என்கிறதால சொல்றேன் இதை உன் மனதோடு வச்சுக்கோ. என் அண்ணனுக்கு கல்யாணம் ஆகி நாலு வருஷம் ஆகுது. ஆனா இன்னும் என் அண்ணி வயித்துல ஒரு புழுவோ
பூச்சியோ கிடையாது அவங்க ரெண்டு பேருக்குமே குழந்தைங்கன்னா அவ்வளவு இஷ்டம்..என் அண்ணன் என்னை தங்கச்சியா பாக்காம சொந்த மகளாட்டம் தான் வளர்த்தார் . நான் இந்த மாதிரி அடிக்கடி அவர் வீட்டுக்கு வர்றதுனால அவருக்கு குழந்தை இல்லையேங்கிற ஏக்கம் கொஞ்சமாவது குறையும் இல்லே..
இது என் கணவருக்கும் தெரியும்.
இதெல்லாம் அவங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கும் வரைக்கும்தான்.அதுக்கப்புறம்
ஒரு வருஷத்துக்கு ஒரு தடவை இங்கு வந்தா அதிகம் .."
கேட்டுக் கொண்டிருந்த மாலினியின் கண்கள் கலங்கியது.
மு.மதிவாணன்
குபேந்திரன் நகர்
அரூர் 636903
9159423090
9080680858