tamilnadu epaper

நீத்தார்க் கடன்

நீத்தார்க் கடன்


 சிந்தாமணிப் படித்துறையில் இன்று கூட்டம் மிக அதிகம். காரணம் தை அம்மாவாசை.  

திருச்சி மாவட்டமே வந்துவிட்டதா என்ன?

காலையிலிருந்தே நூற்றுக் கணக்கான தர்ப்பணங்கள். நீத்தார்க் கடன் தீர்க்கும் மகன்கள்.. மகள்கள்.. சொந்தங்கள். கரைமீறிப்பாயும் அகண்ட காவேரிக்கரை களைகட்டியது. அதோ அங்கே ஸ்ரீரங்கம் கோபுரம்.. இந்தப் பக்கம் காவேரி ஆற்றுப் பாலம். நடுவ கவலையின்றி ஓடுகிறாள் காவேரி.


சாஸதிரிகள்.. ஆங்காங்கே அமர்ந்தே மந்திரங்கள் சொல்ல.. எள்ளு நீர் இரைத்தனர் மக்கள். நீத்தார் கடனாற்றினர். 


சங்கரன் மட்டும் வேடிககைப் பார்த்தப்படி படிக்கட்டில் அமர்ந்திருந்தான். அவன் பையிலோ முழுதாக ஆயிரம் ரூபாய். இதை வைத்து இறந்து போன தன் தாய் தகப்பனுக்கு தர்ப்பணம் செய்ய காத்திருக்கிறான்.


வீட்டிற்கு மூத்தவன். 

ஆயினும் என்ன பொறுப்பற்றவன். தான்தோன்றி.. குடித்துக் கெட்டான். இரண்டு தம்பிகள் இரண்டு தங்கைகள். இருந்தும் தாய் தந்தை மறைந்தபின் தனியானான். சாஸ்திரம் சம்பிரதாயம் அறியான். அறிந்தும் ஆர்வமில்லான். 


ஏதோ கிடைத்த வேலையை செய்து கூலியாளாக.. சமையல் வேலைக்காரனாக உலவுகின்றான்.


ஆண்டாள் தெருவில் ஒரு சிறிய அறை. ஏதோ வாழ்க்கை வண்டி ஓடுகிறது. கல்யாணம் இல்லை. காட்சியும் இல்லை. 


அவன் உறவினர்கள் தம்பி தங்கைகள் நல்ல நிலையில் இருந்தும் கண்டு கொள்வதில்லை. பணமில்லை என்றால் உறவும் இல்லை. பாசமும் இல்லை. 


அவன் மனதிலும் ஒரு ஆசை. இந்த தை அம்மாவாசைக்கு சிந்தாமணிக் கரையில் தாய் தந்தைக்கு நீத்தார் கடன் செய்ய வேண்டும்.


அவனுக்குத் தெரிந்த சந்தானம் ஐயரிடம் சொன்னான். அவரும் பேஷா.. செய்யலாமே. சரியாக பத்து மணிக்கு காவேரி கரைக்கு வந்துடு! காரியத்துக்கு பொருள் தட்சணை என ஆயிரம் ரூபாய் எடுத்துண்டு வா.. என்றார். இதோ காலையிலே வந்து கடன் வாங்கி வைத்த ஆயிரம் ரூபாயோடு காத்திருக்கிறான்.


தாயும் தந்தையும் அவன்மீது அன்பைப் பொழிந்தவர்கள். சிறு வயதில் சீராட்டி வளர்த்தனர். படிப்புதான் வரவில்லை. வேலைக்குச் சென்றான். சகவாசம் சரியில்லை கெட்டான் சங்கரன். என்ன செய்ய? ஒருநாள் கனவுகளோடு பெற்றவர்கள் கரைந்து போயினர். தம்பி தங்கைகள் மறந்து போயினர். வசதியற்ற குடும்பம். அடுப்பில் வெந்து பிழைப்பான். மூச்சு முட்டக் குடிப்பான். இருப்பினும் நீத்தார் கடன் தீர்க்க துடித்தான்.


சாலையைப் பார்த்தப்படி படிமேலே அமர்த்திருந்தான். ஆட்டோக்கள் டெம்போகள் இருசக்கர வாகனங்கள் பரபரத்தப்படி ஓடின 

காவேரியும் ஓடிக் கொண்டிருக்கிறாள். 


அப்போது டமார் என்று ஒரு சத்தம். ஐயோ அம்மா அப்பா என்ற ஒரு முதியவர் அலறுகிற சத்தம். டெம்போ ஒன்று வேகமாக வந்து அந்த முதியவர் மேல் ஏறி நின்றது. துடிதுடித்தார். குருதி வழிந்து ஓடியது. 


கூட்டம் சேர்ந்தது. மயக்கத்தில் முதியவர். ஐயோ பாவம் என்று பார்வையாளர்கள். ஒருவரும் உதவிட முன் வரவில்லை. 

சங்கரன் எழுந்தான். நடந்தான் கூட்டத்தை விலக்கினான். அந்த முதியவரைத் தூக்கி ஒரு ஆட்டோவை நிறுத்தி பெரிய ஆஸ்பத்ரிக்கு செல்கின்றான். எதிரே சந்தானம் ஐயர் வந்து கொண்டிருந்தார்.


அவனோ கண்டு கொள்ளவில்லை. முகமறியா பெரியவரை காப்பாற்ற செல்கின்றான். தர்ப்பணம் இல்லை. சடங்குகள் இல்லை. காரியம் இல்லை. அந்த பெரியவர் உடல்நலம்பெற.. தாயுமானவரை வேண்டிக்கொண்டே செல்கிறான். இதுவும் ஒருவகையில் நீத்தார் கடனன்றோ..! அதனை ஆமோதிப்பிது போல காவேரி ஓடிக்கெண்டிருக்கிறாள்.


  -*வே.கல்யாண்குமார்.*