சென்னை, ஏப். 25–
நெல்லை கோ – ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் மட்டும், 40 முதல், 80 சதவீதம் வரையிலான, சிறப்பு தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடையையொட்டி, கோ – ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில், புதிய வடிவமைப்பிலான காட்டன், பருத்தி, பட்டுப் புடவைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. தயாரிப்பு பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வரும் நிலையில், அடுத்த மாதம் முதல் வாரத்தில், ‘கோடை சிறப்பு விற்பனை’ துவக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஓராண்டிற்கு மேலாக நிலுவையில் உள்ள அனைத்து வகை ஆடை ரகங்களையும், 40 முதல், 80 சதவீதம் சிறப்பு தள்ளுபடியில் விற்க, அந்நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி, சென்னை எழும்பூரில் உள்ள டி.வி.பி.எம்., விற்பனை நிலையம்; கோவை மருதம் விற்பனை நிலையம்; திருநெல்வேலியில் உள்ள பொருநை மற்றும் காந்திமதி விற்பனை நிலையங்களில், 40 முதல் 80 சதவீதம் வரையிலான சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி இருப்பு இருக்கும் வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.