tamilnadu epaper

பஞ்சாங்கம் பார்ப்போமா...?

பஞ்சாங்கம் பார்ப்போமா...?


  நல்ல நாள் பார்த்து, நல்லவேளை பார்த்து, காரியத்தை தொடங்குவது நம்மில் பலருக்கு வழக்கமாக உள்ளது. இந்த நாள் கிழமை பார்ப்பதற்கு பெரிதும் கை கொடுப்பது பஞ்சாங்கம் தான். அதாவது ஐந்து விதமான கருத்துகளை உள்ளடக்கியது என்பது பஞ்சாங்கத்தின் பொருள்.


  அது ஒவ்வொரு நாளும் எந்தெந்த மணி நேரத்தில் நல்ல செயல்களை செய்யலாம், நல்ல காரியம் செய்யலாம் என்பதையெல்லாம் விநாடி சுத்தமாக தரக்கூடியது. இதோ பஞ்சாங்கம் பற்றிய சில சுவாரஷ்யமான தகவல்கள்!


  பாம்பு படத்துடன் பிரபலமாக ஒரு பஞ்சாங்கம் வெளிவருவது நமக்கெல்லாம் நன்கு தெரியும். அது போல பல்லி பஞ்சாங்கம், கருடன் பஞ்சாங்கம் என்றும் பஞ்சாங்கங்கள் வெளிவருகின்றன.


  அந்த காலத்து பத்திரிகையான சுதேசமித்திரன் நிறுவனம், நாளிதழ் மற்றும் வார இதழ் வெளியிட்டதுடன் ஆண்டுதோறும் பஞ்சாங்கமும் வெளியிட்டது. 1940 முதல் 1968 வரை சுதேசமித்திரன் பஞ்சாங்கம் வெளிவந்தது.


  'டாக்டர் தாமஸ் லெ மேன்' என்பவர் ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர். இவருக்கு நம் நாட்டின் பஞ்சாங்கத்தை பற்றி அறிந்துக்கொள்ள ஆவல் வந்தது. அதனால் அவர் சென்னைக்கு வந்து பிரபல ஜோதிடர் எம்.வி.சுப்ரமணியம் என்பவரிடம் பஞ்சாங்கத்தை பற்றி கற்று தேர்ந்தார்.


  நமது பஞ்சாங்கம் இரண்டு வகையானது. சூரியனை அடிப்படையாக வைத்து குறிக்கப்படுவது ஒரு வகை. சந்திரனை அடிப்படையாக வைத்து குறிக்கப்படுவது மற்றொரு வகை! 


  சூரியனை அடிப்படையாகக் கொண்ட பஞ்சாங்கங்களை அஸ்ஸாம், மேற்கு வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு, கேரளம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பின்பற்றுகின்றனர். மற்ற மாநிலங்களில், சந்திரனை அடிப்படையாக வைத்து கணிக்கப்பட்ட பஞ்சாங்கங்கள் பயன்படுத்தப்படுகின்றன.


  பஞ்சாங்கம் குறிப்பது என்பது நம் நாட்டில் யுகம் யுகமாக இருந்து வரும் பழக்கம். அந்த காலத்தில் பஞ்சாங்கம் கணித்தவர்கள் ஓலைச் சுவடிகளில் எழுதி வைத்து வந்தார்கள். அச்சடித்த பஞ்சாங்கம் தமிழில் வெளிவரத் தொடங்கியது. 1887ஆம் ஆண்டில்தான்! மனோன்மணி விலாச அச்சுக்கூடத்தார் தயாரித்த அந்த முதல் அச்சடித்த பஞ்சாங்கம் ஒண்ணே கால் அணா விலையில் ( அதாவது இன்றைய மதிப்பில் எட்டு காசு) வெளிவந்தது.


நம் நாட்டில் மத்திய அரசே ஒரு அரசாங்கப் பஞ்சாங்கம் வெளியிடுகிறது. 'ராஷ்டிரிய பஞ்சாங்கம்' என்று அஸ்ஸாமி , உருது, தெலுங்கு, தமிழ், ஒரியா, கன்னடம், மலையாளம் என்று பல இந்திய மொழிகளில் இது வெளிவருகிறது.


  ஆலயங்களில் தமிழ்ப்புத்தாண்டு நாளில் பஞ்சாங்கம் படிப்பார். இதனை 'பஞ்சாங்க படனம்' என்பர். 'படனம்' என்றால் 'படித்தல்' என்று பொருள். பஞ்ச- அதாவது ஐந்து அங்கங்களைக் கொண்டது பஞ்சாங்கம் ஆகும். அவை வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் இவற்றின் கணிப்பை விரிவாக விளக்குவதே பஞ்சாங்கம். எல்லாச் சடங்குகளுக்கும் பஞ்சாங்கம் துணையாக நிற்கிறது.



 -சின்னஞ்சிறுகோபு,

  சிகாகோ.