tamilnadu epaper

பஞ்சாபில் அமைதியை சீர்குலைக்க முயற்சி: முதல்வர் பகவந்த் மான் குற்றச்சாட்டு

பஞ்சாபில் அமைதியை சீர்குலைக்க முயற்சி: முதல்வர் பகவந்த் மான் குற்றச்சாட்டு

பஞ்சாபில் அமைதியை சீர்குலைக்க முயற்சி நடைபெறுவதாக அம்மாநில முதல்வர் பகவந்த் மான் குற்றம் சாட்டியுள்ளார்.


பஞ்சாபின் அமிர்தசரஸ் கந்த்வாலா பகுதியில் உள்ள தாகுர்த்வாரா கோயிலில் நேற்று முன்தினம் இரவு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. பைக்கில் வந்த இருவர் கோயில் மீது வெடிகுண்டை வீசியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.


இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் நேற்று கூறுகையில், "பஞ்சாபில் அமைதியை சீர்குலைக்க தொடர்ந்து முயற்சி நடைபெறுகிறது. போதைப் பொருள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், தாதாக்களின் அத்துமீறல் ஆகியவை இதன் ஒரு பகுதியாக உள்ளது. பஞ்சாபை சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த மாநிலமாக காட்ட முயற்சி நடைபெறுகிறது.


ஹோலி பண்டிகையின்போது மற்ற மாநிலங்களில், ஊர்வலங்களில் போலீஸார் தடியடி நடத்த வேண்டியிருந்தது. ஆனால் பஞ்சாபில் இதுபோன்று எதுவும் நடைபெறவில்லை. பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளது” என்றார்.


முன்னதாக அமிர்தசரஸ் காவல்துறை ஆணையர் ஜி.பி.எஸ்.புல்லர் கூறுகையில், “கோயில் குண்டுவெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவ இடத்தில் தடயவியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் பிடிப்போம். பஞ்சாபில் குழப்பம் ஏற்படுத்த பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு சதி செய்கிறது. இளைஞர்களை தவறான பாதையில் கொண்டுசெல்ல முயற்சிக்கிறது. அதன் வலையில் சிக்கி வாழ்க்கையை இழக்க வேண்டாம் என இளைஞர்களை எச்சரிக்க விரும்புகிறேன்" என்றார்.