tamilnadu epaper

பண்பு பாராட்டும் உலகு

பண்பு பாராட்டும் உலகு


பண்பொன்றே உனை ஏற்றும் ஏணி

இதை அறிய செவி சாய்ப்பாய் வா நீ

பண்போடு உன் வாழ்வை நடத்து

பரிவோடு அனைவரையும் அரவணைத்து


நேயத்தை நேசித்தால் அதுவன்றோ குணம்

மனிதத்தைப் பூசித்தால் அதுவன்றோ மனம்

மாற்றானுக்கு மனம் இரங்கினால் அதுவன்றோ அன்பு

மண்ணோடு புதைத்தாலும் மணக்க வேண்டும் பண்பு


தீய எண்ணங்களை அடியோடு நீக்கி

தரும சிந்தனைகளை வாழ்வோடு ஆக்கி

தன்னலத்தை துளியும் இல்லாமல் போக்கி

பிறர் போற்ற வாழ்வதுவே பண்பெனும் ஊக்கி


உடன் பிறந்தவராய் அனைவரையும் அணைத்து

நல்ல இதயத்தால் அனைவரையும் இணைத்து

நீங்காத நல்லொழுக்கத்தினை நினைத்து

வாழ்வில் வீறுநடை போடு பண்பினைப் படைத்து


அகிலத்தை அள்ள வேண்டும் அன்பு

மரணத்தை வெல்ல வேண்டும் பண்பு

பண்பைத்தான் பாராட்டும் உலகு

தீயது இருந்தால் அதைவிட்டு நீ விலகு


உன் வாழ்வை அர்த்தப்படுத்துவதே இது

இதை விடுத்தால் புகழ் சேர்ப்பது எது

பரிவோடும் பாசத்தோடும் எல்லோரிடமும் பழகு

உழைப்போடும் கடமையோடும் ஓயாமல் ஒழுகு !



-கவிஞர் மு.வா.பாலாஜி

ஓசூர்.