tamilnadu epaper

பதிலடி

பதிலடி


அன்று விசேஷ

தினம். கோயிலில் கூட்டம் அதிகம்


     வட்டச் செயலாளர் வராகசாமி மனைவி பங்கஜமும்

கைக்குழந்தையுடன் படு பந்தாவாக காரில் வந்து இறங்கினர். அன்றைய அன்னதானத்தின் முழு செலவும் அவர்களுடையது என்பதால் பந்தா சற்று தூக்கலாகவே இருந்தது .


     காரிலிருந்து இறங்கி கோயிலுக்குள் சென்றவர்களை அங்கிருந்த பிச்சைக்காரர்கள் கும்பல் சூழ்ந்தது.கிழிந்த உடையும்

கலைந்த தலையுமாக கூச்சலிட்டபடி வந்தவர்களை காண பங்கஜத்துக்கு அருவருப்பாக இருந்தது.


  அடியாளான கபாலியிடம் அவர்களை அங்கிருந்து விரட்டும்படி கூறினாள். பிச்சைக்காரர்களிலேயே வயதானவளாகத் தெரிந்த கிழவி "ஐயா சாப்பிட்டு நாலு நாள் ஆகுது. சாப்பிட ஏதாவது கொடுத்தீங்கன்னா உங்களுக்கு புண்ணியமாப் போகும்"என்று கெஞ்சியதையும் பொருட்படுத்தாமல் அங்கிருந்து விரட்டுவதிலேயே குறியாக இருந்தான் கபாலி .


      சாமி தரிசனம் முடிந்து ஆற அமர வந்தவர்கள் அனைவருக்கும் சிறு சிறு தொன்னைகளில் புளியோதரையையும் சர்க்கரைப் பொங்கலையும் வழங்கிக் கொண்டிருந்தாள் பங்கஜம்.


      கோயிலில் இருந்த அனைவரும் சென்றபின் அண்டாக்களில் மீதமிருந்த பிரசாதத்தை வேண்டா வெறுப்பாக பிச்சைக்காரர்களை வரச் சொல்லி முகத்தைச் சுளித்தபடி கொடுத்தாள்.


       "கபாலி ! நாங்க முன்னாடி காரில் போறோம். நீ இந்த அண்டாக்களை எல்லாம் டெம்போவில் ஏற்றிக்கிட்டு ப வந்துடு " என்று கூறியவாறே கை விரல்களை கவனித்த பங்கஜம் அப்போதுதான் தன் விரலில் இருந்த மோதிரம் காணாமல் போனதை உணர்ந்தாள்.


    "ஏங்க! நம்ம கல்யாண நாளுக்கு நீங்க வாங்கித் தந்த மோதிரத்தை காணலங்க.கொஞ்சம் லூசா இருக்கேன்னு நூல் சுத்தி போட்டுக்கிட்டு வந்தேன்.எங்கே விழுந்துச்சோ தெரியலே"


    "கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உனக்கு? வந்த இடத்துல அதுவும் கோயிலில் இந்த மாதிரி

நடந்திருக்கு. யாரைன்னு போய் கேட்பே? முடிஞ்ச வரையிலும் தேடி பார்க்கலாம் "என்று சொல்லிவிட்டு

தன் அடியாட்களை விட்டு கோவில் முழுவதும் தேடச் சொன்னான் வராக சாமி .


    தான் சென்ற இடங்களை எல்லாம் தேடிப் பார்த்துவிட்டு உதட்டை பிதுக்கிய படி வெளியே வந்த பங்கஜத்தின் சிந்தனையை கலைத்தது அந்தப் பிச்சைக்காரக் கிழவியின் குரல் .


      "இப்போ எதுக்கு கூப்பிட்டே? உங்களுக்குத்தான் முதலிலேயே

சாப்பிட எல்லாம் கொடுத்தாச்சே.

இன்னும் உனக்கு என்ன வேணும் ஏன் இப்படி தொந்தரவு செய்றீஙக? 

என்று அவள் மேல் வெறுப்பை

உமிழ்ந்தாள்.


   "இல்லம்மா நீங்க கொடுத்த

பிரசாதத்தை சாப்பிடலாம்னு கையில எடுத்தப்போ இது கிடைச்சது. .இதையா தேடுறீங்கன்னு பாருங்க" என்று சொல்லியபடியே மோதிரம் இருந்த பிரசாதத்தை பங்கஜத்திடம் கொடுத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தாள் அந்தக் கிழவி.     

    பங்கஜம் தலை கவிழ்ந்திருந்தது.



மு.மதிவாணன்

குபேந்திரன் நகர்

அரூர் 636903

9080680858

9159423090