tamilnadu epaper

பந்திக்கு முந்து

பந்திக்கு முந்து


 நானும் வருகிறேன் கண்ணன் எனக்கும் நண்பன்தான். அவனோடு நான் தெருவில் விளையாடியிருக்கிறேன் என்று சொன்னபடி மாதவனோடு கிளம்பினான் அவன் மகன் வினோத்தும் கண்ணன் திருமணத்திற்கு.

 பதினைந்து கிலோ மீட்டரில் உள்ள பெண்வீட்டார் திருமணம். ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலை முகூர்த்தம் வைத்திருந்தார்கள். 

 மாதவனும் வினோத்தும் திருமண மண்டபத்து வாசலுக்குப் போனபோது மணி ஒன்பதே முக்கால் ஆகியிருந்தது.

 கண்ணனின் அப்பா தனபாலன் இருவரையும் பார்த்ததும் அப்படியே ஓடிவந்து கட்டிக்கொண்டு வாங்க சாப்பிட்டு மேல போகலாம் என்றார். மேலே திருமணம் தரைதளத்தில் சாப்பாடு.

 இல்லை மேல போய் கண்ணனைப் பார்த்துவிட்டு வந்துவிடுகிறோம் என்று மாதவன் சொல்ல பிடிவாதமாய் மறுத்து தனபாலன் முதலில் சாப்பிடுங்க.. அப்புறம் போய் பார்க்கலாம் என்று அனுப்பிவிட்டார்.

 சாப்பாட்டுக் கூடத்திற்குள் போய் பந்தியில் உட்கார்ந்தார்கள் இருவரும். உணவு பரிமாறிக்கொண்டிருந்த பையன் இவர்கள் அருகே வந்து.. டிபன் முடிஞ்சிடிச்சி.. இனிமே மதியச் சாப்பாடுதான் என்றான் பட்டென்று முகத்தில் அடித்தாற்போல..

 மாதவனுக்கு நல்ல பசி. சாப்பிட்டு சர்க்கரை மாத்திரை போடவேண்டும். இல்லையெனில் வெடவெடவென்றாகிவிடும். 

 வேறுவழியில்லை என்று எழுந்தார்கள். வினோத் கேட்டான்.. அப்பா.. காபி சாப்பிடுறீங்களா? 

 வேண்டாம். காபி சாப்பிட்டால் பசியடங்காது என்று வெளியேறி வரும்போது உள்ளிருந்து ஒரு வயதானவர் ஓடிவந்தார்.. சார்.. இருங்க.. உங்க ரெண்டுபேருக்கும் நான் சாப்பாடு போடறேன் என்றார்.

 மறுபடியும் கீழே இறங்கிவந்து உட்கார்ந்தார்கள்.

 அவரே விறுவிறுவென்று இலையைப் போட்டு.. இரண்டு இட்லியும் பொங்கல் கொஞ்சமும் வைத்து இது போதுமா என்றார்?

 தாராளமா இதுபோதும் என்று மாதவனும் வினோத்தும் சாப்பிட ஆரம்பித்தார்கள். தேங்காய்ச் சட்டினி, காரச் சட்டினி, சாம்பார் எல்லாவற்றையும் போட்டார்.. சாப்பிட்டுவிட்டு மேலே வந்தார்கள்.

 நேராக மணவறைக்குப் போய் கண்ணனுக்கு வாழ்த்து தெரிவித்து மொய் கவரைக் கொடுத்துவிட்டுப் புகைப்படத்திற்கு நின்றுவிட்டு கீழே இறங்கிவந்து நாற்காலிகளில் உட்கார்ந்துகொண்டார்கள்.

 அப்பா.. மாத்திரையைப் போடுங்க.. நான் தண்ணீர் பாட்டில் எடுத்துட்டு வரேன் என்று போனான். போனவன் வரவேயில்லை. கொஞ்ச நேரங்கழித்து வந்தான்.

 என்னடா வினோத்.. ஒரு தண்ணீர் பாட்டில் எடுத்துட்டு வர இவ்வளவு நேரமா?

 இல்லப்பா.. அங்க சமையல் கட்டுலே ஒருத்தரு மயக்கம் போட்டு விழுந்துட்டாரு.. என்றான்.

  ஏன் என்னாச்சு?

  காலையிலேர்ந்து சாப்பிடாம பந்தி வாடிச்சிருக்காரு.. வயசானவரு.. விழுந்துட்டாரு..

 மாதவன் மாத்திரையைப்போட்டுத் தண்ணீர் குடித்ததும் கண்ணனின் அப்பா வந்தார்.. சாப்பிட்டீங்களா? என்றார்.

 ம் சாப்பிட்டோம் என்றார்கள்.

 எல்லாம் தீர்ந்துபோச்சு.. இட்லியும் பொங்கலுந்தான் சாப்பிட்டிருப்பீங்க.. இருந்து மதியச் சாப்பாடு சாப்பிட்டுப்போங்க.. நிறைய வெரைட்டி செஞ்சிருக்கோம் என்றார்..

 பரவாயில்லை.. இன்னும் ரெண்டு மூணு கல்யாணம் இருக்கு கிளம்பறோம்..

 இல்லை.. முன்னமே இலையைப் போட்டிருப்பாங்க.. ஒரு வயசானவரு பந்தி வாடிச்சு மயக்கம் போட்டுவிழுந்திட்டாரு.. காலையிலேர்ந்து வெறும் வயித்தோட வாடிச்சிருக்காரு.. அவருக்குச் சர்க்கரையாம்.. என்றார்.

  அய்யோ.. உடனே சாப்பிட்டிருக்கலாம்ல.. என்றான் மாதவன்.

 இல்லை.. யாரோ ரெண்டு பேரு வந்துட்டாங்களாம்.. அவங்களத் திருப்பி அனுப்பக்கூடாதுன்னு தனக்கு எடுத்து வச்சிருந்த டிபனைப் போட்டிருக்காரு என்றார் கண்ணனின் அப்பா. 

 மாதவன் ஒருகணம் அதிர்வோடு வினோத்தைப் பார்த்தார்.


-ஹரணி,

தஞ்சாவூர்.