tamilnadu epaper

பாகிஸ்தான் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்... அமெரிக்காவை நிராகரித்த இந்தியா: வெளியான புதிய தகவல்

பாகிஸ்தான் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்... அமெரிக்காவை நிராகரித்த இந்தியா: வெளியான புதிய தகவல்

புதுடெல்லி,


பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளை குறி வைத்து, இந்தியா கடந்த 6-ந்தேதி அதிகாலையில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால், இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் உருவானது.


எனினும், 4 நாட்களாக இருந்து வந்த போர் பதற்ற சூழல், நேற்று முடிவுக்கு வந்தது. இதன்படி, இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டன. இந்த போர் நிறுத்தம் நேற்று மாலை 5 மணி முதல் அமலுக்கு வந்தது. எனினும், அதற்கு முன்பே அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டு விட்டன. அமெரிக்காவின் மத்தியஸ்த முயற்சி நடவடிக்கையால் இந்த தீர்வு ஏற்பட்டது என்ற வகையில் கூறினார்.



இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளே பேசி போர் நிறுத்தத்திற்கான முடிவை எடுத்தது என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி தற்போது புதிய தகவல் வெளிவந்து உள்ளது. கடந்த 9-ந்தேதி மற்றும் 10-ந்தேதி காலையில், இந்தியாவில் இருந்து நரகத்திற்கு இணையாக தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தியாவின் இந்த வான்வழி தாக்குதல் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.


அப்போது அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மார்கோ ரூபியோ, பாகிஸ்தானின் ராணுவ தலைமை தளபதி அசிம் முனீர் உடன் பேசி விட்டு, மத்திய வெளியுறவு துறை மந்திரி எஸ். ஜெய்சங்கரை தொடர்பு கொண்டார். அவரிடம், பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது என ரூபியோ கூறியுள்ளார்.


அப்போது, இரு நாடுகளின் டி.ஜி.எம்.ஓ.க்கள் (ராணுவ செயல்பாடுகளுக்கான இயக்குநர் ஜெனரல்) இடையே மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும். வேறு யாரும் அதில் தலையிட கூடாது என இந்தியா சார்பில் தெளிவாக தெரிவிக்கப்பட்டது.


பாகிஸ்தானின் டி.ஜி.எம்.ஓ. மே 10-ந்தேதி மதியம் 1 மணியளவில் இந்திய டி.ஜி.எம்.ஓ.வை தொடர்பு கொண்டு நேரம் கேட்டார். இதில், குறிப்பிட வேண்டிய விசயம் என்னவென்றால், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உட்கட்டமைப்புகள் மீது வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டன என கடந்த மே 7-ந்தேதி அந்நாட்டு டி.ஜி.எம்.ஓ.விடம் இந்தியா தெரிவித்தது.


ஆனால், அதற்கு அவரிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை. விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்திய பின்னரே அவர் நேரம் கேட்டு இந்தியாவை தொடர்பு கொண்டார் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.