பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளை தமிழ் வார விழாவாக கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது .
சுப்புரத்தினம் என்னும் இயற்பெயர் கொண்ட பாரதிதாசன், புதுச்சேரியில் 1891-ம் ஆண்டு ஏப்ரல் 29-ந்தேதி கனகசபை, இலக்குமி அம்மையாருக்கும் மகனாய் பிறந்தார். இளமையிலேயே பிரஞ்சு, தமிழ் மொழிகளை பயின்றார். 16-வது வயதில் கல்லூரியில் சேர்ந்து பயின்று தமிழ்புலமை தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். தனது 18-ம் வயதில் அரசு பள்ளியில் தமிழாசிரியராக பணியில் சேர்ந்தார். மகாகவி பாரதியாரிடம் கொண்ட அன்பால் தன் பெயரை பாரதிதாசன் என வைத்துக்கொண்டார். 1920-ம் ஆண்டில் பழனி அம்மையார் என்பவரை மணந்து கொண்டார்.
தமிழுக்கு அமுதென்று பேர்- அந்தத்தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர், உயிரை, உணர்வை வளர்ப்பது தமிழே. தமிழை என்னுயிர் என்பேன், போன்ற கவிதை வரிகள் பாரதிதாசனின் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்துவன. எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என பாடி மக்களிடையே தமிழ் உணர்வை வளர்த்தவர் பாரதிதாசன். தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன் என முழங்கினார். தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை என வருந்தினார். அவரை பாவேந்தர் பாரதிதாசன் என்று அழைத்தனர்.
பிரபல எழுத்தாளரும், திரைப்படக் கதாசிரியரும், பெரும் கவிஞருமான பாரதிதாசன், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக, 1954-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946-ம் ஆண்டு ஜூலை 29-ந் தேதி அறிஞர் அண்ணாவால், கவிஞர் "புரட்சிக்கவி'' என்று பாராட்டப்பட்டு, ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். பாரதிதாசன், நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். 1964-ம் ஆண்டு ஏப்ரல் 21-ந்தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்'' என்ற நாடக நூலுக்கு, 1969-ல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.
இத்தகைய மாமனிதரின் பிறந்தநாளை தமிழ் வார விழாவாக ஏப்ரல் 29 முதல் மே 5 ஆம் தேதி வரை கொண்டாட தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.