tamilnadu epaper

பாவ மன்னிப்பு

பாவ மன்னிப்பு

 

பரபரப்புடன் குழப்பமாய் வந்த வெள்ளுடைப் பெண்மணியைக் கண்டு திகைத்து, சுதாரித்தார் அந்த சர்ச்சின் பாதிரியார்.

 

”சாமி..எனக்கு பாவ மன்னிப்பு வேண்டும்” என கூறிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் குறிப்பிட்ட இடம் சென்று மண்டியிட்டார்.

 

ஊழியர்களுக்கு அப்போதைய உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டு, பிரத்தியேகமான இருக்கையில் சென்று அமர்ந்தார் அருட்தந்தை.

 

நாற்பதில் இருக்கும் அந்தப் பெண்மணி தன் முழுச் சுமைகளை, வெகு கவனமாய் இறக்கினார்.

 

“நாங்கள் கூடுவாஞ்சேரியில் வசித்தோம். எனக்கு இரு பெண்கள். என் பெற்றோர் ஃபிரான்சில் இருப்பதால் குழந்தைகள் ஆரம்பக் கல்வி முதல் அங்கேயே படிக்கின்றனர்..

 

கணவர் காலையில் போனால் இரவு லேட்டாக வருவார். தாம்பத்தியத்திலும்

அவருக்கு பெரிய ஆர்வம் இருந்ததில்லை. சினிமா, தேவாலயம், மால் என எங்கும் அழைத்துச் செல்ல மாட்டார். இருவருக்கான பேச்சும் ரொம்ப குறைச்சல்.

 

இதனிடையே எதிர் பிளாட் கட்ட பில்டர் ஒருவர் புல்லட்டில் வந்தார். அவர்

என்னை எப்படியோ வசியம் செய்து விட்டார். இது கணவருக்கு அரசல் புரசலாகத் தெரிந்து திருவொற்றியூருக்கு ஜாகை மாறினோம்.

 

அங்கும் பில்டர் தொடர்பு நீடிக்கவே அவர் கம்பெனி அருகிலேயே வாடகை வீடு பார்த்து வைத்தார். கள்ளக் காதல் போதை மாதிரி..விடாது கருப்பு..

 

நேற்று எங்களைக் கையும் களவுமாய்ப் பார்த்து விட்டார். ஆனாலும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

 

எனக்கு மனசு கேட்கவில்லை; குற்ற உணர்ச்சி தொந்தரவு செய்தபடி

இருந்தது..வேறு வழியின்றி..” என கூறியபடி சரிந்து மரித்தார்.

 

அருட்தந்தை திகைத்தபடி வெளிறிப் போனார்.

 

அந்தப் பெண் சர்ச்சுக்கு வருவதற்கு முன்பே விஷம் குடித்து விட்டு வந்தது மருத்துவ ஆய்வறிக்கையில் தெரிந்தது.

 

பாதிரியார் இப்படி ஒரு நிகழ்வைத் தன் வாழ்நாளில் கண்டதில்லை!

-பி. திலகவதி, சென்னை.