அப்பா.... ஏன் இப்படி இரண்டு நாளா டல்லா உட்கார்ந்திருக்கீங்க..
உங்களுக்கு என்ன பிரச்சினை? சொல்லுங்க....
அம்மா....! அப்பாவுக்கு
என்ன ஆச்சு? அவரு ஏன் இப்படி உம்முன்னு உட்கார்ந்திருக்காரு...
அது வந்துப்பா... அவருக்கு கிராமத்து நினைப்பு வந்துடுச்சு.
அம்மா! அவருக்கு என்ன குறை...என் பொண்டாட்டி ஏதாவது மரியாதை குறைவா நடந்துகிட்டாளா....
சொல்லுங்கம்மா...!
ரகுபதி... அதெல்லாம் ஒன்னுமில்லை....நீ கண்டதை யோசிக்காத.....போய் வேலைய பாரு...
ராகவன் - சுமதி தம்பதியருக்கு ஒரே மகன் ரகுபதி சென்னையிலுள்ள பிரபல கம்பெனியில் பொறியாளராக வேலை செய்கிறான்.
ராகவன் கம்மங்குடி கிராமத்தில் தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து கொண்டே, ரகுபதியை எஞ்சினியராக படிக்க வைத்தார். படித்து முடித்த மூன்று மாதங்களிலேயே ரகுபதிக்கு சென்னையில் வேலை கிடைத்துவிட
தனது அப்பாவையும், அம்மாவையும் தான்
வேலை பார்க்கும் சென்னைக்கே அழைத்துச் சென்று விட்டான்.
சில மாதங்களிலேயே ரகுபதிக்கு வைதேகியுடன் திருமணம் நடைபெற்றது. வைதேகி எம்.ஏ இலக்கியம் படித்தவள். கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணி புரிகிறாள்.
ரகுபதி எப்போதும் தனது அப்பா அம்மாவிடம் மரியாதையாக நடந்து கொள்வான்.அதேபோன்று வைதேகியும் தனது மாமனார் மாமியாரிடம் அன்பாகவும்,பண்பாகவும் நடந்து கொள்வாள்.
விடுமுறை நாட்களில்
ரகுபதி தனது மனைவியுடன் அம்மாவையும் அப்பாவையும் அழைத்துக் கொண்டு
கடற்கரைக்கும், பெரிய ஹோட்டலுக்கும் சென்று வருவது வழக்கமாக இருந்தது.
இந்த நிலையில் தற்போது இரண்டு நாட்களாக,ராகவன் சோர்வாக இருப்பதைக் கண்டு ரகுபதிக்கு என்னவோ போலாகிவிட்டது.
அப்பா...எதா இருந்தாலும் எங்கிட்ட சொல்லுங்கப்பா..என்னால முடிஞ்சதை நான் செய்யறேன்...
உடம்புக்கு எதாவது செய்யுதா... வாங்க...டாக்டருகிட்ட போவோம் என்றும் கூப்பிட்டு பார்த்தான்..
ரகு...!
அதெல்லாம் ஒன்னுமில்லப்பா...!
எனக்கு இந்த நகர வாழ்க்கை புடிக்கவேயில்லப்பா..
என்னப்பா சொல்றீங்க....!
ஆமாம்பா...இது நகர வாழ்க்கையில்லப்பா.
எனக்கு பொழுது நகராத வாழ்க்கையா இருக்குப்பா....
என்னப்பா... என்னென்னவோ சொல்றீங்க....
ரகு... சென்னை வாழ்க்கை எனக்கு அறவே புடிக்கலப்பா!
ஏம்பா....அப்படி என்ன சென்னை உங்களுக்கு புடிக்காமப் போச்சு!
ரகு...இருபத்து நாலு மணி நேரமும் கடிகாரம் சுத்துதோ இல்லியோ... இங்க வாகனங்கள் சுத்திகிட்டே இருக்கு...
பறக்கும் ரயில், மின்சார ரயில்னு ஒருபக்கம், டவுன் பஸ் மாடிபஸ்னு விதவிதமா வாகனங்கள் மக்களை அள்ளிக் கிட்டு போயிகிட்டேயிருக்கு!
மழை வெயில்னு பார்க்காம இருபத்து நாலு மணிநேரமும் சென்னை சுத்திகிட்டே இருக்கு!
இந்த சுத்திகிட்டே இருக்கற ஊர்ல என்னால இருக்க முடியாதுப்பா... நானும் அம்மாவும் கிராமத்துக்கே போயிடறோம். சென்னை வாழ்க்கை எங்களுக்கு புடிக்கலப்பா.. இங்க இருந்தா வியாதிதான் வரும்...நிம்மதி வராது...
ஏம்பா... இப்படி சொல்றீங்க...
இல்லப்பா... நீயும் வைதேகியும் இங்கேயேயிருந்து வேலையை பாருங்க...!
நானும் அம்மாவும் கிராமத்துலயிருந்துகிட்டு விவசாயத்தையும் கவனிச்சுகிட்டு அமைதியா இருக்குறோம்பா.. அதுதான் எனக்கும் அம்மாவுக்கும் நல்லது... சென்னை வாழ்க்கை எனது பழக்க வழக்கத்துக்கு சரிபடாதுப்பா...அதனால என்னையும் அம்மாவையும் நாளைக்கே கிராமத்துல கொண்டு விட்டுடுப்பா....அப்பப்ப வந்து எங்களை கவனிச்சுகிட்டா போதும்..
சரிப்பா.... நாளைக்கு போகலாம்பா....!
மறுநாள் காலை உணவை முடித்ததும்
ரகுபதி தனது அப்பாவையும், அம்மாவையும் அழைத்தான்.ஊருக்கு போகலாமா என்றான்...சரி,காருல போயி உட்காருங்க..
ராகவனும் சுமதியும் காரில் உட்கார்ந்தனர்.
கூடவே வைதேகியும் பெட்டியுடன் ஏறினாள்.
ஏம்பா...வைதேகியும்
வரனுமா! அவ இங்கேயே இருக்கட்டுமே.... என்றார் ராகவன்.
மாமா... கொண்டு வந்து விடறதுக்கு நான் வரலை... நானும் உங்க கூடவே கிராமத்துல இருக்கப் போறேன்....
என்னம்மா சொல்ற...
அப்பா... நீங்களும் அம்மாவும் கிராமத்துல தனியா இருப்பீங்கன்னுதான் என்கூட உங்களை கூட்டிகிட்டு வந்தேன்.
இப்ப உங்களுக்கு சென்னை புடிக்கல... கிராமத்துக்கு போறேன்னு பிடிவாதம் பிடிக்கறீங்க...
உங்களுக்கு எப்படி பிடிவாதம் இருக்கோ.., அதேமாதிரி எங்க இரண்டு பேருக்கும் பிடிவாதம் இருக்குமுல்ல....ஆமாம்பா... நாங்க ரெண்டு பேரும்,நீங்க எங்க இருக்கீங்களோ அங்கேயே வந்து இருக்கிறோம்.கிராமத்துலேருந்து தினசரி கார்ல சென்னைக்கு வேலைக்கு போயிக்கிறோம்...என்று சொன்ன ரகுபதி யை ராகவனும் , சுமதியும் அதிசயமாக பார்த்தனர்.
+++++++++++++++++++
ஆக்கம்:
நன்னிலம் இளங்கோவன்,
மயிலாடுதுறை.