‘‘அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா உட்பட மற்ற நாடுகள் விதிக்கும் வரியை போலவே அமெரிக்காவும் வரி விதிக்கும். இந்த நடைமுறை ஏப்ரல் 2-ம் தேதி முதல் அமலுக்கு வரும்’’ என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜன.20-ம் தேதி 2-வது முறையாக அதிபராக பதவியேற்றார். அதிபர் பதவியேற்ற பிறகு அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் முதல் முறையாக கடந்த செவ்வாய்க்கிழமை ட்ரம்ப் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது: அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா 100 சதவீத வரி விதிக்கிறது. இதேபோல் மற்ற நாடுகளும் அதிக வரி விதிக்கின்றன. இது நியாயமற்றது. ஆட்டோமொபைல் பொருட்களுக்கு 100 சதவீதத்துக்கும் அதிகமாகவே இந்தியா வரி விதிக்கிறது. ஐரோப்பிய யூனியன், இந்தியா, சீனா, பிரேசில், மெக்சிகோ, கனடா போன்ற நாடுகள், நாம் விதிக்கும் வரியை விட அதிக வரிகளை விதிக்கின்றன. அதை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எனவே, மற்ற நாடுகள் எவ்வளவு வரி விதிக்கின்றனவோ, அதே அளவுக்கு அமெரிக்காவும் வரி விதிக்கும். இந்த நடைமுறை ஏப்ரல் 2-ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
அமெரிக்க பொருட்களுக்கு மற்ற நாடுகள் அதிக வரி விதிப்பது பல ஆண்டுகளாக உள்ளது. இப்போது நாம் நடவடிக்கை எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. வர்த்தக கொள்கைகளில் அமெரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கும் சமமற்ற நிலை உள்ளது. அதை சரி செய்வதற்குதான் பரஸ்பரம் வரி விதிக்கும் முறையை அமல்படுத்த நினைக்கிறேன்.
மோடியிடம் தெளிவுபடுத்திவிட்டேன்: புதிய வரி விதிப்பு முறையில் இந்தியாவுக்கு விலக்கு அளிக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் தெளிவுபடுத்தி இருக்கிறேன். இந்த விஷயத்தில் யாரும் என்னிடம் விவாதம் நடத்த முடியாது. மற்ற நாடுகள் அவர்களுடைய சந்தைகளில் இருந்து அமெரிக்காவை விலக்கி வைக்க பணமற்ற கட்டணங்களை (non-monetary tariffs) செயல்படுத்தினால், நமது சந்தைகளில் இருந்து அந்த நாடுகளை தள்ளி வைக்க பணமற்ற தடைகளை உருவாக்குவோம். இவ்வாறு அதிபர் ட்ரம்ப் பேசினார்.
அதிபர் ட்ரம்பின் இந்த அறிவிப்பு வர்த்தக உலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் ஏப்ரல் 2-ம் தேதிக்கு பிறகு அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு வரி விதிப்பு அதிகரிக்கும். இதன்மூலம் வர்த்தகம் பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது.
ஐரோப்பா மீது விமர்சனம்: உக்ரைனுக்காக செலவிட்டதை விட ரஷ்யாவிலிருந்து எண்ணெய் எரிவாயுவை வாங்க ஐரோப்பிய நாடுகள் அதிகம் செலவிட்டுள்ளதாக வும் ட்ரம்ப் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து, அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்று நிகழ்த்திய உரையின் போது அதிபர் ட்ரம்ப் கூறியதாவது: ரஷ்யாவுடனான போரில் இருந்து உக்ரைனை பாதுகாப்பதற்காக, எவ்வித வழிமுறையும் இல்லாமல் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. இதை மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடர வேண்டுமா? இந்த போரில் வாரந்தோறும் சுமார் 2 ஆயிரம் பேர் கொல்லப்படுகின்றனர். அவ்வாறு கொல்லப்படுகிறவர்கள் ரஷ்யா, உக்ரைன் நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள்தான். அமெரிக்கர்கள் அல்ல. ஆனாலும் இந்த போரை நிறுத்த வேண்டும்.
350 பில்லியன் டாலர்: உக்ரைனுக்காக நாம் 350 பில்லியன் டாலரை செலவிட்டுள்ளோம். ஆனால் ஐரோப்பிய நாடுகள் 100 பில்லியன் டாலர் மட்டுமே செலவிட்டுள்ளன. இதில் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்று பாருங்கள். அதேநேரம், ரஷ்யாவுடனான போரில் இருந்து உக்ரைனை பாதுகாப்பதற்காக செலவிட்டதை விட, ரஷ்யாவில் இருந்து எண்ணெய், எரிவாயுவை வாங்குவதற்குதான் ஐரோப்பிய நாடுகள் அதிகம் செலவு செய்துள்ளன.
உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி எனக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அதில், அமைதி பேச்சு வார்த்தைக்கு தான் தயாராக இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார். ரஷ்யாவும் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார் என்று தெரிவித்துள்ளது. இவ்வாறு அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டார்.