tamilnadu epaper

புதுக்கணக்கு

புதுக்கணக்கு

திவாகரிடம் சவால் விட்டாலும் அருணுக்கு பயமாகத்தான் இருந்தது. போதாக்குறைக்கு அவன் நண்பர்கள் எல்லாம் அருணால் நிச்சயம் பாஸ் பண்ண முடியாது என்று திரும்ப திரும்ப சொல்லி அவனை மேலும் பயமுறுத்தினார்கள். இந்த முறையும் கணிதத்தில் பாஸ் மார்க் எடுக்கவில்லை என்றால் அம்மாவிடம் பேச்சு வாங்க வேண்டியிருக்கும். ரேங்க் போயிடும்.. என்ன செய்வதென்றே அவனுக்கு புரியவில்லை. வீட்டுக்கு போனதும் புத்தகப்பையை வீசிவிட்டு சோர்வாக அமர்ந்துக்கொண்டான். நாளைக்கு கணிதத் தேர்வு. என்னவோ தெரியவில்லை அவனுக்கு கணக்கு மட்டும் வருவதே இல்லை. லேசாய் ஜூரம் அடித்தது. அப்பாவின் மறைவிற்கு பிறகு ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வேலை செய்யும் அம்மா வந்தவுடன் அவனை தொட்டுப்பார்த்துவிட்டு விசாரித்தாள். அவன் கணக்குல பாஸ் பண்ண முடியுமான்னு தெரியலைம்மா பயமா இருக்கு என்றான். அம்மா அவன் தலையை கோதியபடி சொன்னாள் நாலு பசங்க சொன்னா உன்னால முடியாதுன்னு அர்த்தமா... அதுக்கே பயந்துடறதா. டேய் அருண் ஒரு வீரனை யாராலையும் ஜெயிக்க முடியாதுன்னு சவால் விட்டாங்களாம்.. அவனையும் ஜெயிச்சு காட்டறேன்னு ஒருத்தன் வந்தானாம். அவன் எப்படி ஜெயிச்சான் தெரியுமா ... ஒரு ரெண்டு மூணு பேரை அனுப்பி அந்த குத்து சண்டை வீரன் கிட்ட ஏன் சோர்வா இருக்க உடம்பு சரியில்லையா போட்டில கலந்துக்க முடியுமான்னு தொடர்ச்சியா கேட்க வச்சானாம். அப்படி கேட்க கேட்க அந்த வீரனுக்கே ஒரு சந்தேகமும் போட்டில ஜெயிக்க முடியுமான்னு பயமும் வந்து கடைசியா சோர்வடைஞ்சு தோத்து போயிட்டானாம். அப்படி நம்ம சுத்தி இருக்கிறவங்க நம்மாள முடியாதுன்னு பயமுறுத்தினா பயந்துடக்கூடாது. முடியும் முடியும்னு நினை. முடியாதுன்னு சொல்ற யார் பேச்சையும் கேட்காதே..சரியா..போ . போய் கணக்கு போட்டுப்பார். உன்னால பாஸ் பண்ண மட்டுமில்ல பஸ்ட் வரவும் முடியும்... அம்மா சொல்ல சொல்ல அவனுக்குள் புதுத்தெம்பு வந்தது..கணக்கு புத்தகத்தை தைரியமாக கையில் எடுத்தான். இப்போது கணக்கு புதிதாக மட்டுமல்ல புரிவதாகவும் தெரிந்தது.

 .-பெ.நாகமாணிக்கம்