tamilnadu epaper

புதுச் சட்டை

புதுச் சட்டை

 

  "மீனாட்சி... இங்க வாம்மா....ஃஏத்திக்கு என்னமோ கேட்டியே...ம்ம்ம்... " உங்க வீட்டுக்காரரோட பழைய சட்டை ஏதாச்சும் இருந்தா குடுங்கம்மா... என் புருஷன் ஒரே சட்டையை... அதுவும் கிழிஞ்ச சட்டையைத்தான் தினமும் போட்டுக்கிட்டுப் போறார்"ன்னு சொன்னியே?" முதலாளியம்மா கேட்க.

 

  "ஆமாம்மா" என்றாள் வேலைக்காரி மீனாட்சி.

 

  "பழைய சட்டை வேணாம் மீனாட்சி!... அவருக்காக வாங்கியது புதுச்சட்டை ஒண்ணு இருக்கு... கலர் பிடிக்கலேன்னு அவர் ஒரு தரம் கூட அதைப் போடலை... அதை வாங்கிக்கிறியா?"

 

   சந்தோஷமாய்த் தலையாட்டினாள் மீனாட்சி.

 

   அன்று மாலை வீட்டிற்குச் சென்று அந்தப் புதிய சட்டையைக் கொடுத்தால் தன் கணவன் முகம் எந்த அளவிற்கு பிரகாசமாகும் என்பதை இப்போதிருந்தே கற்பனை செய்து ரசிக்கலானாள் மீனாட்சி.

 

  மாலை, வீட்டிற்குச் செல்லும் பஸ்க்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தாள் மீனாட்சி.

 

அப்போது, அந்தப் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அத்தனை ஆண்களின் பார்வையும் ஒரே பக்கமாய் திரும்பியிருக்க, அந்தப் பார்வை ஏதோவொன்றை ஊன்றிக் கவனித்துக் கொண்டிருக்க, இவளும் அந்தத் திசையில் பார்த்தாள்.

 

மனநிலை பாதிக்கப்பட்ட பதினான்கு... பதினைந்து வயதுள்ள ஒரு சிறுமி முற்றிலுமாய்க் கிழிந்து போன ஒரு அழுக்குச் சட்டை அணிந்திருக்க, அது அவளது மார்பு பகுதியை சரியானபடி மறைக்காமல் கண்காட்சி ஆக்கிக் கொண்டிருந்தது.

 

 அங்கிருந்த அத்தனை ஆண்களின் பார்வையும் அதை ரசித்துக் கொண்டிருந்தது.

 

  ஆடிப் போனாள் மீனாட்சி. 'அடப்பாவிகளா... பைத்தியக்காரியைக் கூடக் காமப் பார்வைதான் பார்ப்பீங்களா?"

 

  அவளை அப்படியே விட்டு விட்டுச் சென்றால் நிச்சயம் அவள் யாரோ ஒரு காமுகனால் கறைப் படுத்தப்படுவாள், என்பதை யூகித்த மீனாட்சி வேக வேகமாய் அந்தப் பைத்தியக்காரியை நோக்கிச் சென்று, தன் முதலாளியம்மா கொடுத்த அந்தப் புதுச் சட்டையை அவளுக்கு அணிவித்தாள்.

 

 "ஹய்யா... புதுச் சொக்கா... புதுச் சொக்கா" சிறுமி அதை சந்தோஷமாய் அணிந்து கொண்டு கூவ, அங்கிருந்த ஆண்கள் மொத்தமும் மீனாட்சியை எரித்து விடுவது போல் பார்த்தனர்.

 

 இரவு, தன் கணவரிடம் தான் செய்த அந்தக் காரியத்தை மீனாட்சி அப்படியே ஒப்பிக்க, "மீனாட்சி... உண்மையை சொல்லட்டுமா?... நீ அந்தச் சட்டையை எனக்குக் கொண்டு வந்து கொடுத்திருந்தால் நான் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருப்பேனோ?... அதைவிட அதிக மகிழ்ச்சியை இப்ப உணர்கிறேன் மீனாட்சி" என்றான் அவன்.

 

(முற்றும்)

 

முகில் தினகரன், கோயமுத்தூர்.