tamilnadu epaper

பெரியோர் சொல் கேள்.

பெரியோர் சொல் கேள்.


சந்தோஷ் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன்..தனது பள்ளி கோடை விடுமுறைக்காக தனது தாத்தா,பாட்டி வீட்டிற்கு அப்பா அம்மா உடன் சென்றான். அங்கு தாத்தா பாட்டியுடன் நேரத்தை செலவழிக்காமல் எப்பொழுதும் அலைபேசியிலேயே தனது நேரத்தை செலவழித்தான். ஏதேனும் தாத்தா பாட்டி... அன்பின் காரணமாக தன் பேரனிடம் இப்படி செய்யாதே...!அப்படி செய்யவேண்டும்...! என்று ஏதேனும் ஆலோசனை கூறினால்..." எனக்கு எல்லாம் தெரியும்" என்று கூறுவான். உங்களை விட எனக்கு அதிகமாக தெரியும்.என்னிடம் செல்போன் உள்ளது. எனக்கு தேவைப்படுவதை நான் அதில் தேடிக் கொள்வேன் என்று அலட்சியமாக பதில் அளித்தான். இதை கவனித்த அவனது அப்பா அவனுக்கு சில விஷயங்களை புரிய வைக்க எண்ணினார். 


ஒரு நாள் தோட்டத்தில் தோட்டக்காரர் விறகு வெட்டிக் கொண்டிருந்தார். அருகில் சந்தோஷ் விளையாடிக் கொண்டிருந்தான். இதுதான் சரியான நேரம் என்று எண்ணிய சந்தோஷின் அப்பா.. விறகு வெட்டிக் கொண்டிருப்பவரிடம் சென்று கோடாரியை வாங்கி தான் விறகு வெட்டுவதாக கூறினார்.

 அதை கவனித்த தாத்தா,. வேண்டாம் மகனே...! இது உனக்கு தெரியாத வேலை இது வேண்டாம் என்று தடுத்தார் ஆனால் எனக்கு எல்லாம் தெரியும் என்று வெட்ட ஆரம்பித்தார். அவர் வெட்டுவதை 

 பார்த்த சந்தோஷின் தாத்தா.. வேண்டாம் மகனே அவசரப்படாதே... இது கூரான ஆயுதம். தவறி நம் மீது பட்டால் அடிபட்டு விடும் என்று தடுத்தார். ஆனாலும் சந்தோஷின் அப்பா எனக்கு எல்லாம் தெரியும்... என்னிடம் செல்போன் உள்ளது. அதை பார்த்து எப்படி வெட்ட வேண்டும் என்று எனக்குத் தெரியும் என்று கூறி வெட்ட ஆரம்பித்தார்.

 மீண்டும் தாத்தா... கோடாரியை இப்படி நேராக பிடிக்கக் கூடாது கொஞ்சம் சாய்வாக பிடித்து வெட்ட வேண்டும் என்று கூறினார். எனக்கு எல்லாம் தெரியும் என்று கூறி மீண்டும் வெட்ட ஆரம்பித்தார். கோடரி நழுவி காலில் விழுந்து சிறு வெட்டு காயம் ஏற்பட்டது. இதனைப் பார்த்த சந்தோஷ ஓடி வந்து பார்த்து அழுதான். சந்தோஷின் தாத்தா... நான் எத்தனை முறை சொன்னேன்...கேட்டாயா..? என்று கூறிக் கொண்டே முதலுதவி செய்தார்.

 இதோ பார் சந்தோஷ், இதற்குத்தான் நாம் பெரியவர்கள் சொல் கேட்க வேண்டும். எல்லாம் நமக்குத் தெரிந்திருந்தாலும் அவர்களின் அனுபவமும் நமக்கு தேவை. என் அப்பாவின் பேச்சை நான் கேட்டிருந்தால் எனக்கு இந்த காயம் ஏற்பட்டிருக்காது. எவ்வளவுதான் புத்தகத்தில் படித்து தெரிந்து கொண்டாலும் ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு அனுபவ அறிவை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் நமக்கு நல்லது என்று கூறி அவனுக்கு புரிய வைத்தார்.


 சந்தோஷ்... இனி நான் எல்லாம் எனக்குத் தெரியும் என்று கூறி பிறரின் பேச்சை அலட்சியப்படுத்த மாட்டேன்... கல்வி அறிவுடன் கூடிய அனுபவ அறிவும் வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன் அப்பா என்று கூறி தன் அப்பாவை கட்டிக் கொண்டான். 


 முனைவர்.உமாதேவி பலராமன்,

 117 பைபாஸ் சாலை,

 திருவண்ணாமலை, 606601.