tamilnadu epaper

பெரிய மனுஷி

பெரிய மனுஷி

 

    மார்கழி மாதம் என்பதால் பெரும்பாலான வீட்டு வாசல்களில் தினம் தினம் கோலம் போட்டு அசத்தி வந்தனர் பெண்கள். குறிப்பாக அந்த தெருவில் மார்ஜா கூடுதல் அக்கறை செலுத்தி கோலம் போடுவதில் ஆர்வம் காட்டினாள். அதே சமயம் நம்மை விட யாரு நல்லா கோலம் போட போறா என்ற தலைக்கணம் வேறு அவளுக்கு .

      மார்ஜாவின் பக்கத்து வீடு ஏழ்மையான குடும்பம் . கோலமாவு விற்று ஜீவனம்

செய்பவர்கள். அந்த வீட்டு பொண்ணு கீர்த்தனாவுக்கு பதிமூன்று வயதாகிறது ரொம்ப நாளாகவே தன் வீட்டு வாசலில் கலர் கோலம் போடவேண்டும் என்ற ஆசை. 

       "அம்மா... வாசல்ல கோலம் போட கொஞ்சம் கலர் மாவு எடுத்துகிட்டா..."

அம்மாவிடம் கீர்த்தனா கேட்க,

    "ஏண்டி நம்ம குடும்பம் இருக்குற நிலமைக்கு கோலம் ஒரு கேடா..."

அதட்டினால் அம்மா.

       "ஆசையா புள்ள கேக்குறா... அவகிட்ட ஏண்டி மல்லுக்கு நிக்கிற... " கோவிந்தன்

மனைவி மல்லிகாவை அதட்டிவிட்டு " உனக்கு எவ்வளவு கோல மாவு தேவையோ எடுத்துக்கம்மா..." மகள் கீர்த்தனாவை சமாதான படுத்தினான் கோவிந்தன்

           " சரி கீர்த்தனா உன் ஆசைக்காக நாளைக்கி ஒரு நாள் மட்டும் கலர் கோலம் போட்டுக்கோ...தினமும் போடணுன்னு ஆச படாத...இந்த கோலமாவ வித்துதான் நம்ம பொழப்பு ஓடுது..." அம்மா குடும்ப சூழலை எடுத்து சொல்ல, அவளும் ஏற்றுக் கொண்டாள். மறுநாள் காலை கீர்த்தனா வாசலில் கோலம் போட்டாள்.

               தெருவிற்கு வருவோர் போவோர்

எல்லாம் நின்று ரசிக்கும்படியான கோலத்தை போட்டு அசத்தியிருந்தாள்.

பார்த்த மார்ஜாவுக்கு ஒரு பக்கம் பொறாமை, ஒரு பக்கம் பொங்கலுக்கு நடக்க போகும் கோல போட்டியில் அந்த பொண்ணு கலந்து கொண்டால் தான் முதல்பரிசு வாங்க முடியாதே என்ற பயம்.

            கீர்த்தனாவை அழைத்து பேசினாள்,

"நீ நல்லா கோலம் போடுற... உன் திறமைய

வளத்துக்க...நீ ஒன்னும் கவலப்படாத...

நான் நிறைய கோலமாவு வாங்கி தரேன்

உங்க அம்மாவுக்கு தெரியாம எங்க வீட்டு 

காம்பவுண்டுக்கு உள்ளே கோலம் போட்டு

பழகிக்கோ..." சூட்சமமாக பேசி,அவளை

கோலம் போட வைத்து அதையே தான் போட்ட கோலம் என காட்டி முதல் பரிசும் 

வாங்கிவிட்டாள்.

           இந்த சூழ்ச்சி கீர்த்தனாவுக்கு தெரிந்தும் காட்டிக்கொள்ளாமல் பெரிய

மனுஷியாக நடந்துகொண்டாள்.

 

சுகபாலா,

திருச்சி.