"ஒரு வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் பண்ணிக் குடுத்த என் அக்கா கணவனை விட்டுட்டு திரும்பி வந்து இப்ப எங்க வீட்லதான் இருக்கிறா. நீங்க வர்ற நேரத்துல இங்கே இருக்க வேண்டாம்னு கோயிலுக்குப் போயிருக்கா… " -தன்னைப் பெண் பார்க்க வந்த பிரகாஷிடம் திவ்யா சொன்னதும் தூக்கி வாரிப் போட்டது அவளது பெற்றோர் கல்யாணிக்கும் ராகவனுக்கும்.
திவ்யாவின் அக்கா புஷ்பா கல்யாணம் ஆகி ஒரு வருஷத்திலேயே கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தெரடர்பு என்று அவனுடன் வாழாமல் திரும்பி வந்துவிட்டது உண்மைதான்.
ஆனாலும் திவ்யாவைப் பெண் பார்க்க வருபவர்களிடம் மூத்த மகள் புஷ்பாவைப் பற்றி இப்போதைக்கு எதுவும் சொல்ல வேண்டாம் என்று நினைத்திருந்தார்கள் கல்யாணியும் ராகவனும். விஷயம் தெரிந்தால் திவ்யாவின் கல்யாணம் பாதிக்கலாம் என்பதால், மாப்பிள்ளை வீட்டார் வரும்போது, புஷ்பாவைக் கோயிலுக்கு அனுப்பி வைத்திருந்தார்கள்.
திவ்யாவின் கல்யாணத்துக்குப் பிறகு மாப்பிள்ளை வீட்டாருக்குத் தெரிந்தால் ஏதாவது சொல்லி சமாளிக்கலாம் என்றும் திட்டம் போட்டிருந்தார்கள்.
‘ஆனால்... யாருக்காக அந்த உண்மையை மறைக்க வேண்டும் என்று நினைத்தார்களோ, அந்த திவ்யாவே மாப்பிள்ளை வீட்டாரிடம் இப்படி சொன்னால்?’
கல்யாணியும் ராகவனும் கையைப் பிசைந்து கொண்டு நிற்க...
"உங்க அக்கா புஷ்பாவைப் பற்றி கேள்விப்பட்டுத்தான் இங்கே உங்களை பெண் பார்க்க வந்தோம். என்னோட அண்ணன் புஷ்பாவைப் பற்றி கேள்விப்பட்டு அவங்களைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டான். அப்படியே உங்களை நானும் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டு பொண்ணு பார்க்க வந்தேன்..." –மாப்பிள்ளை பிரகாஷ் சிரித்தபடியே சொன்னான்.
‘ஆஹா... உண்மையா வெளிப்படையா இருக்கிறதுல இப்படியொரு நல்லது இருக்கா?’ உள்ளூற சந்தோஷப்பட்ட கல்யாணியும் ராகவனும் ஒருசேரச் சொன்னார்கள்...
"புஷ்பாவைப் பற்றி சொல்லாம விட்டதுக்கு எங்களை மன்னிச்சுக்குங்க! புஷ்பா விரும்பினா ரெண்டு கல்யாணத்தையும் ஒண்ணாவே நடத்த தயாரா இருக்கோம்!"
-கீர்த்தி