பட்டுக்கோட்டைராஜா
-இடதுகையால் பியூன் ரெங்கசாமி,``குட்-மார்னிங் சார்.” என்றான். அவனுக்கு வலது கையில் பாதியைத்தான் ஆண்டவன் கொடுத்திருந்தான். ஊனமுற்றோர் பிரிவில் பணிக்கு வந்தவன். அது பரவாயில்லை. இந்தத் தலைமை அஞ்சலக அதிகாரி நான்.
-புதிதாய்த் தேர்வு செய்யப்பட்டுப் பணியில் சேர்ந்திருந்த ஆர்த்தி, நித்யா இருவரும் யாருக்குமே ’வணக்கம்’ சொல்வதில்லை-நான் உள்பட…!
-பணியிலிருந்த மற்றவர்கள் காலையில் அலுவலகம் வந்ததும் ஒருவருக்கொருவர் `வணக்கம்’ சொல்வதைப் பார்த்தும் அவர்களுக்கு உறைக்கவில்லை. `எதற்கு வணக்கம் சொல்லவேண்டும்?’ என்கிற திமிர்; அல்லது `வணக்கம் சொல்லி என்னவாகப் போகிறது?’என்கிற அலட்சியம்தான் காரணம். ஆனால் அலுவலக ஒழுக்கமென்று ஒன்றைக் கடைப்பிடிக்க வேண்டுமல்லவா?
-பணியில் மூத்தவர்கள் மனம் புழுங்கினார்களே தவிர, யாருமே அவர்களிடம் எடுத்துச் சொல்லத் தயங்கினார்கள். பதிலுக்கு எடுத்தெறிந்து பேசி விடுவார்களோ என்று பயம். என் காதுக்கும் செய்தி வந்தது.
-இந்த விஷயத்தை அவர்களிடம் வெளிப்படையாய்ச் சொல்லாமல் நாசூக்காய் உணர்த்த வேண்டும். என்ன செய்யலாம்? யோசித்தேன். ஒரு வழி தோன்றியது. அடுத்த நாள் காலையிலிருந்தே அதை அமல் படுத்தத் தொடங்கினேன்.
-ஒவ்வொரு நாளும் கௌரவம் பாராது அவர்களின் இருக்கைக்கு நானே எழுந்து சென்று, ``குட் மார்னிங் ஆர்த்தி,குட் மார்னிங் நித்யா.” என்று சொல்லிவிட்டு வந்து என் இருக்கையில் அமர்வதை வழக்கமாக்கினேன். அதற்கு நான்கே நாட்களில் நல்ல பலனும் கிடைத்தது.
`ஆர்த்தி, நித்யா இருவரும் எல்லோருக்கும் தாமாகவே ``குட்-மார்னிங்’ சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.