tamilnadu epaper

மறக்கப்பட்ட போராளி நீரா ஆர்யா*

மறக்கப்பட்ட போராளி நீரா ஆர்யா*

 

 

உளவாளியாக இருப்பது அவ்வளவு எளிதானது அல்ல. நாட்டுக்காக உயிரையே தியாகம் செய்தாலும்... அதற்கான அங்கீகாரமோ, அடையாளமோ கிடைக்காது. ஒருவேளை எதிரி நாட்டவரிடம் சிக்கிக்கொண்டால் சித்திரவதை அனுபவித்து மரணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதுவே, சுதந்திரத்திற்கு முன் என்றால் இன்னும் கொடுமை... அப்படி நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றி உளவு வேலை பார்த்த நீரா ஆர்யா எனும் துணிச்சலான பெண்ணின் வாழ்க்கை வரலாறு தான் இது.

 

 இந்தியாவும், இந்திய வரலாறும் மறந்த ஒரு வீரமங்கை நீரா ஆர்யா. அவர் நினைத்திருந்தால் கடைசி வரை ஆடம்பர வாழ்க்கை அனுபவித்து, தனது கடைசி நாள் வரை மாடமாளிகையில் வாழ்ந்திருக்கலாம்.

 

ஆனால், அவர் தேர்வு செய்தது தேசமும், சுதந்திரமும். கட்டிய கணவருடன் போராடி, தனது தலைவரான சுபாஷ் சந்திர போஸ் உயிரை காத்து, சிறைச்சாலையில் பல கொடுமைகளை அனுபவித்து, தனது கடைசி காலக்கட்டத்தில் ஐதராபாத்தில் பூவிற்று, சாலையோரத்தில் தனது சிறிய குடிசையில் உயிரிழந்து கிடந்தார்.

 

 *தொழிலதிபரின் மகள்:* 

 

நீரா ஆர்யா பிறந்தது 1905ம் ஆண்டு மார்ச் மாதம் 5ம் நாள். இவர் உத்திர பிரதேச மாநிலம், பாகுபத் மாவட்டத்தில் பிறந்தவர். நீராவின் தந்தை சேத் சஜூமால் ஒரு பிரபலமான தொழிலதிபர். தனது மகள் கொல்கத்தாவில் கல்வி பயில வேண்டும் என்று விரும்பிய சேத், நீராவை கொல்கத்தா அனுப்பி வைத்தார்.

 

கொல்கத்தாவில் கல்வி பயின்ற வந்த போது, தனது இளம் வயது முதலே இந்திய சுதந்திர போராட்டம் மீது ஈர்ப்பு ஏற்பட்ட நீரா, இந்திய தேசிய இராணுவமாக இயங்கி வந்த அசாத் ஹிந்த்-ல் சேர்ந்தார். அசாத் ஹிந்தின் பெண்கள் படையான ராணி ஜான்சி படையில் சேர்ந்து பணியாற்றி வந்தார் நீரா. இப்படியாக தான் நீரா ஆர்யாவின் இராணுவ பணி துவங்கியது.

 

 *பிரிடிஷ் இராணுவ அதிகாரியுடன் திருமணம்,:* 

 

நீரா திருமண வயதை எட்டிய போது, அவருக்கு ஏற்ற மணமகனை தேடிக்கொண்டிருந்த அவரது தந்தை சேத், பிரிட்டிஷ் இராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்த ஸ்ரீகாந்த் ஜெய் ரஞ்சன் தாஸ் என்பவருக்கு நீராவை திருமணம் செய்து வைத்தார். ஸ்ரீகாந்த் சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் ஆப் இந்தியா என்ற பொறுப்பில் வேலை செய்து வந்தார்.

 

திருமணமான ஆரம்ப நாட்களிலேயே நீரா ஆர்யாவுக்கும் - ஸ்ரீகாந்த் ஜெய்க்கும் இடையே உரசல்களும், மனக்கசப்பும் உண்டானது. இவர்கள் இருவரும் கருத்தியல் ரீதியாக நேரெதிர் கோட்டில் பயணித்து வந்தனர்.

 

ஒருக்கட்டத்தில் ஸ்ரீகாந்த் ஜெய் நீராவுக்கும் சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் இயங்கி வந்த அசாத் ஹிந்த்க்கும் இடையே இருந்த தொடர்பினை கண்டறிந்தார். உடனே, நீராவிடம் அசாத் ஹிந்த் தலைவர்கள் மற்றும் நேதாஜி குறித்த தகவல்கள் தன்னிடம் கூறுமாறு வற்புறுத்தினார். ஆனால், நீரா அதற்கு மறுப்பு தெரிவிக்க இருவருக்கும் இடையேயான சண்டை பெரிதானது.

 

 **நேதாஜியை காப்பற்ற தன் கணவரை கொலை செய்த நீரா ஆர்யா:* 

நீரா அசாத் ஹிந்த்-காக பிரிட்டிஷ் அதிகாரிகளின் வீட்டில் உளவு வேலை பார்த்து வந்தார். ஒரு நாள் முக்கியமான தகவல்கள் பகிர சுபாஷ் சந்திர போஸ் அவர்களை நேரில் சந்திக்க நீரா பயணித்த போது, அவரை பின்தொடர்ந்து சென்ற ஸ்ரீகாந்த், சுபாஷ் சந்திர போஸ் இருப்பிடத்தை கண்டுபிடித்தார்.

 

அப்போது ஸ்ரீகாந்த் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுபாஷ் சந்திர போஸின் வாகன ஓட்டுநர் குண்டடிப்பட்டார். அச்சமயத்தில் வேறுவழியின்றி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை காப்பாற்ற, தன் கணவர் ஸ்ரீகாந்தை கொலை செய்தார் நீரா ஆர்யா.

 

 **சிறையில் தன் மார்பை இழந்த நீரா:* 

 

ஸ்ரீகாந்தை கொலை செய்த குற்றத்திற்காக நீராவிற்கு சிறைத்தண்டனை அளித்தது பிரிட்டிஷ் நீதிமன்றம். நீராவை கொடுமை செய்து எப்படியாவது சுபாஷ் சந்திர போஸ் இருப்பிடத்தை கண்டுபிடிக்க பிரிட்டிஷ் அரசு முயன்று வந்தது. ஆனால், தேச பக்தி நிறைந்த நீரா திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

 

சுபாஷ் சந்திர போஸ் இருப்பிடத்தை மட்டும் கூறினால், பெயில் அளித்து ஜெயிலில் இருந்து விடுவிப்பதாகவும் அறிவித்தனர். ஆயினும், நீரா ஆர்யா இணங்க மறுத்தார். இதனால், ஒரு கட்டத்தில் தனக்கு நேர்ந்த கொடுமைகளின் விளைவாக நீரா தனது மார்பகங்களையும் இழக்க நேர்ந்தது. ஆயினும் தனது நிலைப்பாட்டில் இருந்து நீரா ஆர்யா மாறவில்லை.

 

 *நீரா ஆர்யாவின் இறுதி காலம்:* 

 

இந்தியாவிற்காக பல தியாகங்களை செய்த நீரா ஆர்யா தனது கடைசி நாட்களில் ஐதராபாத் தெருக்களில் பூ விற்று கொண்டிருந்தார் எனவும், அப்போது இவர் ஒரு சிறிய குடிசையில் வசித்து வந்தார் எனவும் கூறப்படுகிறது. 1998ம் ஆண்டு ஜூலை மாதம் 26ம் நாள் சார்மினார் பகுதியில் நீரா ஆர்யா உயிரிழந்தார்.

 

சிவ.முத்து லட்சுமணன்

போச்சம்பள்ளி