தூத்துக்குடி, மே 15–
‘
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவது அவசியம்’ என, தி.மு.க., – எம்.பி., கனிமொழியிடம், ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மற்றும் கிராம மக்கள் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்க தலைவர் தியாகராஜன் தலைமையில், ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராம மக்கள் மற்றும் ஆதரவாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி குறிஞ்சி நகரில் உள்ள எம்.பி., கனிமொழி அலுவலகத்தின் முன் திரண்டனர். பின்னர் கனிமொழியை சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நம்பி, 20,000 தொழிலாளர்கள், 64 ஒப்பந்ததாரர்கள், அவர்களை நம்பி, 3,500 ஒப்பந்த தொழிலாளர்கள் இருந்தனர். இந்த ஆலையை நம்பி பல்வேறு சிறிய ஆலைகளும் இயங்கி வந்தன.
கனரக வாகனங்கள், டிப்பர் லாரிகள் வாங்கி தொழில் செய்தோம். ஆலை மூடப்பட்டுள்ளதால் கடும் கடன் நெருக்கடியில் இருக்கிறோம்.
பொய் பிரசாரம்
இந்த ஆலையால் புற்றுநோய் வருகிறது என திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்யப்பட்டது. ஆலைக்குள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு புற்றுநோய் வரவில்லை. ஸ்டெர்லைட் ஆலையால் எவ்வித சுற்றுச்சூழல் பாதிப்பும் கிடையாது.
ஸ்டெர்லைட் ஆலை இயக்கப்பட்டு வந்த காலங்களில் காப்பர் ஏற்றுமதி செய்யப்பட்டது. தற்போது ஆலை மூடப்பட்டதால் காப்பர் தேவைக்கு வெளிநாடுகளில் இறக்குமதி செய்யும் நிலை உள்ளது. இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத சில அன்னிய சக்திகள் போராட்டம் நடத்தியவர்களுக்கு தாராளமாக நிதியுதவி அளித்து, அவர்களை ஊக்கப்படுத்தினர்.
ஒரு ஆலைக்கு எதிரான போராட்டம் நடக்கும் போது, சட்டம், ஒழுங்கை காப்பாற்ற வேண்டியது ஆளும் அரசின் கடமை. அப்போதைய தமிழக அரசு கவனக்குறைவாக இருந்ததால் போராட்டம் வன்முறையாக மாறியது. அதையே காரணம் காட்டி, 2018ல் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
ஸ்டெர்லைட் நீண்ட காலமாக மூடப்பட்டிருப்பதால், வேலையிழந்த தொழிலாளர்கள் வறுமையில் உள்ளோம். ஆலையை நம்பியிருந்த 3,500 தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
‘அழுத்தம் தர வேண்டாம்’மனுவை பெற்றுக்கொண்ட கனிமொழி, முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார். தொடர்ந்து பேசியவர், ‘உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அணுகி தான் ஆலையை திறக்க ஆணை பெற வேண்டும். தமிழக அரசு இதில் எதுவும் செய்ய முடியாது. அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம். ஒரு நிறுவனத்தை மூடியதால் வேலைவாய்ப்பு இல்லை எனக்கூற வேண்டாம். மாவட்டத்தில் விரைவில் துவங்க உள்ள மற்ற தொழிற்சாலையில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்’ என உறுதி அளித்தார்.