tamilnadu epaper

முடிவு

முடிவு

-பாலசந்தர் மண்ணச்சநல்லூர்
 
தமிழ் மாறன் சுத்தமாக பொறுமை இழந்தான் , வாரிசு இல்லாத தன் பெரியப்பாவின் மரணத்தை எதிர்பார்த்து எந்த பயனும் இல்லை. இதய நோயாளியான அவர் நல்ல உணவு , உடற் பயிற்சிகளால் வாழ் நாட்களை நீட்டித்துக்கொண்டே போவது அவனுக்கு வெறுப்பை தந்தது , அவரது மரணம் அவனுக்கு கோடிக் கணக்கான சொத்துக்களை பெற்றுத்தரும். எத்தனை வருடங்கள் வெறும் மேனேஜராகவே  அவரது கம்பனியில் இருப்பது? ஓனராக வேண்டாமா? பணத்திற்கோ செல்வாக்கிற்கோ பஞ்சம் இல்லை ஆனாலும் தமிழ் மாறனுடைய மனம் அமைதி அடைய வில்லை. அந்த நிறுவனத்தின் முழுச் சொத்தையும் அடைய நினைத்தான்.

தமிழ் மாறன் சில பல திட்டங்களை தீட்டி அவரை தீர்த்துகட்ட நினைக்கும் போதெல்லாம் அவன் உள் மனது எச்சரித்தது, ஏதேனும் அவருக்கு நிகழ்ந்து விட்டால் முதல் சந்தேகம் திவாகர் மேல் தான் வரும். மிகுந்த கவனத்தோடு செயல் பட வேண்டும். ஒவ்வொரு அடியும் மிகக் கவனமாக வைக்க வேண்டும் என்று தீர்மானித்து இருந்தான். பெரியப்பவிடமும் மற்ற ஊழியர்களிடையும் நல்ல பேர் எடுத்து இருந்தான். தனது பலவீனங்களோ அல்லது தீய பழக்கங்களோ யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டான்.

தனது நிழலுலக நண்பர்களுடான தீய பழக்கங்களினால் கடன் அதிகமானது. அதில் ஒருவன் , தமிழ் மாறனிடம் தனிமையில் இருக்கும் போது , சில மாத்திரைகளைக் கொடுத்து , மாறா இது ஃபாரின் மாத்திரை , இதை எப்படியாவது உங்க பெரியப்பாவிற்கு பாலில் அல்லது கூல் டிரிங்க்ஸில் கலந்து கொடுத்துடு, சில நிமிடத்திலேயே அவருக்கு மாரடைப்பு வந்திடும் , யார்னாலயும் கண்டு பிடிக்க முடியாது , இயற்கையான மரணமா இருக்ககும். தமிழ்மாறனுக்கு முகம் பிரகாசமானது, இந்த தருணத்தை அவன் எதிர்பார்த்து காத்து இருந்தான்.

ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் பெரியப்பாவை அவரது வீட்டில் சந்தித்து ஒரு மணி நேரம் அவருடன் பொதுவாகவும் , கம்பனி விஷயங்களையும் பேசுவான், இந்த ஞாயிற்று கிழமை காலை அவனுக்கு உற்சாகமாக இருந்தது. அவனது மிகப்பெரிய கனவு நிறைவேறப் போகிறது. மாத்திரைத்தூளை ஞாபகமாக எடுத்துக் கொண்டான்.

இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக , காலை அவருடனே டிஃபன் சாப்பிட்டான். டிஃபன் சாப்பிட்ட சிறிது நேரம் கழித்து , சூடாக பால் சாப்பிடுவார் பெரியப்பா , டிஃபன் சாப்பிடும் போதே சட்னியை தன் சட்டையில் படும் படி தவற விட்டான், சமையல்காரன் சுப்பையா டேபிளை சுத்தம் செய்ய வந்தான், சமையல் அறையில் ஒரு வாஷ்பேசினில் தமிழ் மாறன் சட்டையை சுத்தம் செய்யும் சாக்கில் பொடிசெய்து வைத்த மாத்திரைத்தூளை சுப்பைய்யாவிற்கு தெரியாமல் காஸ் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த பாலில் கொட்டினான்.

படபடப்பைக் காட்டிக்கொள்ளாமல் வந்து சேரில் அமர்ந்தான் , பெரியப்பா , தமிழ் மாறன் போனவாரம் சோலார் எனர்ஜியைப் பற்றி ஆர்டிகிள் ஒண்ணு பார்த்தேன், இரு எடுத்துட்டு வர்ரேன், உள்ளே சென்றார் பெரியப்பா. சுப்பையா  சமையல் அறையில் இருந்து டம்ளரில் பாலுடன் வெளிப்பட்டான். அசம்பாவிதம் நடக்கும் போது தமிழ் மாறன் இருக்க விரும்பவில்லை, ரெஸ்ட் ரூம் போயிட்டு வர்ரேன் சுப்பையா  , பெரிப்பா கேட்டா சொல்லு என்று சொல்லி விட்டு சென்றான்.

தமிழ் மாறன் மெல்ல ஐந்து நிமிடம் கழித்து ரெஸ்ட் ரூமில் இருந்து வந்தான், வரும் போது இயல்பாக கிச்சன் ஸிங்கில் பால் டம்ளர் கிடப்பதை பார்த்துக்கொண்டான். பெரியப்பா பிஸினஸ் டுடேவில் ஆர்டிகளை தேடிக்கொண்டு இருந்தார். திவாகரின் மனது மகிழ்ச்சியில் மிதந்தது. மாத்திரை இனிமேல் தான் வேலை செய்யும் என்று எண்ணினான் , நேரத்தை கடத்த சுப்பையா  ஒரு காப்பி எனக்கு கொடு என்று தமிழ்மாறன்‌ கேட்டான்.

பெரியப்பாவை பார்த்தான் .
அவர் தனது மார்பை நீவி விட்டுக்கொண்டு ஆர்டிகளின் சில வரிகளை குறிப்பெடுத்தார். அவருக்கு லேசாக வியர்த்து விட்டது.  மாறா வேர்க்குது.
என்றார்.
ஆமா பெரியப்பா வெயில் காலைலேயே பட்டைய உரிக்குது.என்று கூறிய தமிழ் மாறன் மனது துள்ளியது , மாத்திரை தனது வேலையைத் துவங்கி விட்டது என்று நினைத்தான்.

சில நிமிடத்தில் ஆவி பறக்க காஃபியுடன் வந்தான் சுப்பையா தமிழ் மாறன் மெதுவாக காஃபியை உறிஞ்சி முடித்தான்.

தம்பி… காஃபி டேஸ்ட் கம்மியாத்தான் இருக்கும், -என்றான் சுப்பையா.
 ஏன் ? என்பது போலப் பார்த்தான் தமிழ் மாறன். இன்னைக்கு பெரியய்யா பால் வேணாம்னு சொல்லிட்டார், அதை ஃப்ளாஸ்க்குல ஊத்தி வச்சிருந்தேன், சக்கரை போட்ட பால் தம்பி , நீங்க வேற காஃபி கேட்டீங்களா, அதை இன்னொரு முறை காய்ச்சி காஃபி கலந்தேன் , ரெண்டு தடவை காய்ச்சினதாலே டேஸ்ட் கம்மின்னு நினைக்கிறே....ன்...

நினைக்கிறே....ன்.....ன்... என்று சுப்பையா சொல்லுவது மிகச் சன்னமாகக் கடைசியாகக் கேட்டது தமிழ் மாறனுக்கு.