பேருந்து விட்டு இறங்கி திருமோகூர் போகத் திரும்பின அக்கணம், அந்த முதியவர் என் கண்ணில் தென்பட்டார். தளர்ந்த நடை. , கையில் ஊன்று கோலுடன்.தோளில் தொங்கும் ஜோல்னா பை. நரசிங்கம் திருமோகூர் வளவில் திசை தெரியாமல் வெறித்த பார்வையுடன், மலங்க மலங்க விழித்த வண்ணம்,அந்த முதியவர் தட்டுத் தடுமாறலுடன் அந்த பிரதான சாலையில் நடுவே நின்று கொண்டிருந்தார். சற்று அருகே சென்று பார்க்க என் நண்பன் கோவிந்தராஜனின் தந்தை என்பதை அறிந்து கொண்டேன்." அப்பா! இங்கு ஏன் இப்படி தனியாக நின்று கொண்டு இருக்கிறீர்கள்" என்று வினவினேன். ஒரு கணம் என்னைப் பார்த்து முறுவலித்தவர், அடுத்த கணம் என்னை அறியாதவர் போல் " யாரப்பா! நீ? கோவிந்தராஜன் யார்" என்று திருப்பிக் கேட்க; நான் என் அலைபேசியில், கோவிந்தராஜனை தொடர்பு கொள்ள முனைய; திடுக்கிட்ட அந்த முதியவர் கண்ணீருடன் " "வேண்டாம்" என்பது போல் தலையசைத்து; கை குவித்தார்."நேற்றே என்னை நரசிங்கம் மலையடிவாரத்தில் விட்டுப் போனவனே உன் நண்பன் கோவிந்தராஜன் தான். பென்ஷன் வரும்படி ஏதும் இல்லாத நான் அவனுக்குத் தேவையில்லாத பாரம் ஆகிவிட்டேன். உன்னால் முடிந்தால், என்னை திருச்சி போகும் பேருந்தில் ஏற்றி விடு. அங்கு ஒரு அநாதை இல்லம் இருக்கும் முகவரி என்னிடம் உள்ளது. நான் அங்கு போய் என் மீதி நாட்களை கழிக்கிறேன். என்னை என் போக்கில் விடு" என்றார். நான் திகைப்புடன் அவரை பேருந்தில் ஏற்றி விடுவதைப் தவிர என்னால் அப்போது எதுவும் செய்ய இயலவில்லை.
-சசிகலா விஸ்வநாதன்