வேறு வழியில்லை.
அம்மாவின் ஞாபகமாக வைத்திருந்த மூக்குத்தியை அடகுவைத்தே ஆகவேண்டும். அதைத்தவிர அடகுவைக்க கனகாவிடம் வேறு எதுவுமில்லை.
தான் வேலை பார்க்கும் நாலைந்து வீடுகளிலும் கடன்கேட்டுப் பார்த்தாகிவிட்டது. பெயர்ந்தபாடில்லை.
தன் மகனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட இன்றே கடைசிநாள்.
கணவன் சாலை விபத்தில் இறந்தபிறகு அப்படி ஒரு வறுமை.
வழக்கமாக அடகுவைக்கும் கடைக்குச் சென்று மூக்குத்தியை அடகு வைத்தாள்.
ரசீதுடன் பணத்தைப் பெற்றுக்கொண்டு டவுன் பஸ் பிடித்து வீட்டுக்குத் திரும்பியவள் அதிர்ந்தாள்.
தனக்குமுன்னே அங்கு காத்திருந்தார் அந்த அடகுக்கடை முதலாளி.
முகத்தில் கேள்விக்குறியுடன் கனகா அவரைப் பார்க்க-
“இன்னைக்கு ஏப்ரல் 3 ஆம் தேதி. எங்க அம்மாவோட பிறந்த நாள். ஒவ்வொரு ஏப்ரல் 3 ஆம் தேதியும் மூணாவதா அடகு வைக்க வர்ற கஸ்டமருக்கு நகையைத் திருப்பிக் கொடுத்துடுவோம் இன்ப அதிர்ச்சியாக...அந்தப் பணமும் உனக்குதான்மா. எங்க அம்மாவோட பிறந்தநாள் பரிசு!” என்றவாறு அவளிடம் மூக்குத்தியைக் கொடுத்தார்.
ஆனந்தக் கண்ணீர் விட்டாள் கனகா!
*-ரிஷிவந்தியா,தஞ்சாவூர்.*