தனிமை சில நேரங்களில் இனிமையாக இருக்கிறது சில நேரங்களில் வெறுமையாக இருக்கிறது.
மனதுக்குள் ஆயிரம் பிரச்சனைகள் ஓடும் போது மண்டைய பிச்சுக்கலாம் போல தோணும் அப்படிப்பட்ட நேரங்களில் தனிமை தேவைப்படுகிறது.
அச்சமயங்களில் எதிர்மறையான சிந்தனைக்குள் மனம் விழுந்தால் வாழ்வின் மீது விரக்தி உண்டாகிறது.
கசந்த மனதில் துயரம் எழும்புகிறது புத்துணர்ச்சி இல்லாத உணர்வுக்குள் வாழ்வு இருள் சூழ்ந்ததாய் காணப்படுகிறது.
நம்பிக்கையற்ற தன்மையில் வாழ பிடிக்காமல் மரணத்தை நோக்கி பயணிக்கிறது மனம் நேர்மறையாய் பேசும் மனிதர்களை, நண்பர்களை, உறவினர்களை பெற்றிருப்பவர்கள் பாக்கியவான்கள்.
இதுவரை தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த என்னுடைய பெயர் சேகர் என்னைப் போல எத்தனையோ பேர், எத்தனையோ துறைகளிள், பல பிரச்சனைகளை குடும்பத்திலும், வேலை ஸ்தலங்களிலும் சந்தித்து கொண்டு இருக்கலாம்.
பிரச்சனைகளில் பல கேள்விகள் எழும்பி நின்று பதில் கிடைக்காமல் வாழ்க்கை பயமாய் காணப்படலாம்.
ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் பகல் என்றால் இரவு என்று ஒன்று உண்டு இரவு என்பது தொடர்ச்சி அல்ல இரவுக்குப் பிறகு விடியல் இருக்கிறது.
அடுத்து என்ன செய்ய வேண்டும் என தெரியாமல் நம் மனதை அலை கழிப்பது இரவு வாழ்வில் ஒரு அடி அடுத்து எடுத்து வைக்க முடியாது இனி அவ்வளவுதான் எனும் நினைவை கொண்டு வருவது இரவு.
அப்படிப்பட்ட நேரத்தில் நாம் அதிகமாக சிந்திக்க கூடாது எல்லாம் இறைவன் பார்த்துக் கொள்வான் எனும் நம்பிக்கையில் பிரச்சனையை நோக்கி பார்க்க கூடாது மாற்றி யோசிக்க வேண்டும்.
நான் மாற்றி யோசிக்காமல் வேறு ஒரு முடிவுக்கு சென்றிருந்தேன் அப்பொழுது விடியலை குறித்து ஒரு சிந்தனை எனக்கு இல்லை அவநம்பிக்கையில் சுழன்று கொண்டிருந்தது மனது. கவிமுகில் சுரேஷ் தருமபுரி