tamilnadu epaper

மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா

மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா


மல்லாந்து படுத்திருந்தேன்;

பக்கத்தில் யாருமில்லை;


எட்டி பார்க்கும் தூரமட்டும் 

எத்திசையிலும் எவருமில்லை;


குழுவாய் கூடு திரும்பும் 

பறவை கூட்டம் 


பொழுது சாய்வதை 

நழுவும் மேகங்களூடே

ஒன்றோடொன்று

விவரித்தபடியே விரைந்தன


ஓயாமல் உரையாடி

 அன்பில் உருகிய

தன் செல்ல 

அலைமகளுக்கு


மெல்ல 

விடைகொடுத்த 

நிலவழகியும்

புன்னகையுடன் 

மேகரதத்தில்

பயணித்தே 


வான சிம்மாசனத்தில்

ஒய்யாரமாய்

 அமர்ந்தாள்!


அசைந்தாடும்

வண்ணமலர்களின் 

அழைப்பை


கன்னத்தில்

முத்தமிட்டபடியே

காதோரம்

 செய்தி

சொன்னத்

தென்றலை 


வாழ்த்தியபடியே

தேன் விருந்துண்ண 

இசைபாடி பறந்தன

பொன்வண்டினங்கள்!


அங்கிருந்தும்

இங்கிருந்தும் 

கருமேகங்களை

கூட்டி சேர்த்தபடி


இரவு கன்னியை

இடைவெளியின்றி 

இழுத்து

போர்த்தி

கொண்டிருந்தது

பூவரசியின்

அன்புக்கு 

அடிபணியும் 

வான்படை!


வியந்து விரிந்த 

கண்கள் 

மயங்கி சாய்ந்தன


வீடு 

திரும்பி வந்தாலும் 

திரும்பவில்லை


அங்கேயே

தங்கிவிட்ட 

எந்தன் ஆழ்மனதின்

ஆச்சரியங்கள்;


இயற்கையின் 


மௌனத்தில் 

இத்தனை 

விந்தையான

அர்த்தங்களா!!


-ரேணுகாசுந்தரம்