tamilnadu epaper

யோகலெட்சுமி

யோகலெட்சுமி

 

*அந்த அதிகாலை நேரம் சுந்தரராமன் வீட்டு வாசலில் ஊரே கூடி நின்றது.

     சுந்தரராமனின் மனைவி தலைவிரி கோலமாக ஓலமிட்டு அழுது கொண்டிருக்க ...

சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பியிருந்த அவர்களது மகன்கள் இருவரும் விரக்தியை மறைத்து சகஜமாக சிரிக்க முயன்று...தோற்று கண்கள் கலங்க நின்றனர்.

     இருபது வருடங்களுக்கு முன்னால் இந்த நகரத்தில் பிரபல காண்டிராக்டராக...கதர்வேட்டிச்சட்டை..மைனர்ச்செயின்..ராயல் புல்லட் சவாரி ..கட்டுடற்கட்டு என கம்பீரமாக வலம்வந்தவரான சுந்தரராமன்...இன்று மலங்க மலங்க விழித்தபடியே சோம்பிய குழந்தையாக குறுகி உட் காத்திருக்கிறார்.

    "என்னப்பா...ஆச்சு...ஏன் எல்லாரும் ஒரு மாதிரியாக இருக்கீங்க.?.." குடும்ப நண்பர் வேலுத்தம்பி அக்கரையாய் கேட்க...

  "மாமா...அப்பா தன் சம்பாத்தியம் எல்லாத்தையும் 'லாட்டரிச்சீட்டு'ல தொலைச்சதும்...அதுனால புத்தி பேதலிச்சு குடும்பமே அவதிப்பட்டதும் எல்லோருக்கும் தெரியும்..ஏதோ எங்க திறமைக்கு படிச்சு இப்ப வெளிநாட்டுல. லட்சலட்சமா சம்பாதிக்கறோம்...

அதே லட்சக்கணக்குல செலவழிச்சும் அப்பாவை பழைய நிலமைக்கு கொண்டுவர முடியல...அப்ப ஒரு சாமியார் சொன்னாரு...'பணத்துமேல உசுரா இருந்த மனுசன்...ஒரு பெட்டி பணத்தை ஒரு ரூம்ல வச்சு ..அவரை உள்ளே தள்ளி கதவை வெளியே பூட்டிடுங்க...முடிஞ்சா கட்டில் மேல பணக்கட்டுகளை பரப்பி அதுமேல பெட்ஷீட்டை விரிச்சி படுக்க வையுங்க...புத்தி தானா தெளிஞ்சிடும்'னாரு..அதை நம்பித்தான் செஞ்சோம்.." என்றார்கள் சுந்தரராமனின் மகன்கள்.

   "இப்ப..என்னப்பா ..ஆச்சு?" 

"நீங்களே..வந்து பாருங்க மாமா" என்றபடி கதவைத்திறக்க....

காகிதங்கள் எரிந்த நெடியும்..கரிச்சாம்பலுமாக முகத்தில் அடிக்க...அங்கே....

  "ஒன்னு கீழ்க்கட்டுக்கு போட்டிருக்கனும்...இல்ல மேல்கட்டுக்காவது அடிச்சிருக்கனும்..வரிசை நம்பர் பார்த்து எடுக்க தெரியுதா மச்சான் இந்த பசங்களுக்கு...ஆசைக்கு ஆறுதல் பரிசு அம்பது ரூவாக்கூட நிக்கல மச்சான்.அதான் பீடை ஒழியட்டும்னு எல்லா சீட்டுகளையும் கொளுத்தி சாம்பலாக்கிட்டேன்.!" என்றபடி வேலுத்தம்பியிடம் பாதி எரிந்த ரூபாய்கட்டுகளையும்...யோகலெட்சுமி பேப்பரையும் நீட்டினார் சுந்தரராமன்.*

-------------------

*அரும்பூர்.க.குமாரகுரு,மயிலாடுதுறை*