கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் இப்படி ஊரைச் சுத்துறியேடா ஏதாவது வேலைக்கு போகலாமில்லையா?
உனக்காக வாங்கிய கடனை எப்படி அடைப்பது? வெளியே தலை காட்ட முடியலை!"
வீட்டுக்குள் நுழையும்போதே மகன்" />
"கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் இப்படி ஊரைச் சுத்துறியேடா ஏதாவது வேலைக்கு போகலாமில்லையா? உனக்காக வாங்கிய கடனை எப்படி அடைப்பது? வெளியே தலை காட்ட முடியலை!" வீட்டுக்குள் நுழையும்போதே மகன் சூரியைத் திட்டிய படியே நுழைந்த அப்பாவைப் பார்த்து நக்கலாக பக்கத்தில் நின்றிருந்த அம்மாவின் காதுக்குள் "ஆமா! பெரிய அஜித் குமார் இவரு! தலயக் காட்டுன உடனே விசில் பறக்கப்போகுது!" என்றவுடன் அம்மா குளுக் கென்று சிரிக்க, 'எதே!" என அப்பா முறைக்க விழுந்தடித்து தெருவுக்குள் ஓடினான் சூரி. ஓடியவன், நேராக தியேட்டர் வாசலில் அவனுக்காகக் காத்திருந்த காதலி பூமிகாவிடம் வந்தான். சூரி க்கும் உருப்படியான வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டு தானிருக்கிறான். கிடைக்கிற வேலையைப் பார்க்கலாமென்றால் சம்பளம் போதவில்லை. திரைப்படம் முடிந்து வெளியே வரும்போது "சூரி! எங்கள் வீட்டில் மூன்று பெண் பிள்ளைகள். நான் தான் மூத்தவள். எனக்கு சீக்கிரம் மனம் முடித்தால் தான் அடுத்தடுத்த தங்கைகளை காலா காலத்தில் கரை சேர்க்க முடியும் என எங்கள் வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். உங்கள் வீட்டில் சொல்லி என்னைப் பெண் பார்க்க எப்போ வரப்போற நீ?" என்று பூமிகா சீரியஸாகவே கேட்டாள். பூமி காவின் அப்பா பெரிய ஃபைனான்சியர். பூமிகா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் இந்த முறை ஏதும் விளையாட்டுத்தனம் பண்ணாமல் அவளையே ஆழமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் சூரி. அடுத்த நாள், "அப்பா! எனக்கு கல்யாணம் செய்து வையுங்க! " என்று தடாலடியாக சூரி தேங்காய் உடைத்தது போல சொல்லவும் எப்போதும் சிரிக்கும் அம்மா கலவரமாக சூரி அப்பாவைப் பார்க்க அவரோ கலகலவென சிரித்தபடி, "நீ இன்னும் வேலைக்கே போகல! உனக்கு யார்டா பொண்ணு கொடுப்பாங்க? " என்று பொறுமையாகக் கேட்டார் சூரி அப்பா. "நான் ஒரு பொண்ணை ஒன்றரை வருடமாகக் காதலிக்கிறேன். உங்களுக்கு மிகவும் நம்பிக்கையானவரும் அண்ணா வின் திருமணத்தை அக்கறையுடன் பொறுப்பேற்றுக் கொண்டு சிறப்பாக நடத்தி கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு மேல் இருவரும் சிறு பிரச்சினை கூட இல்லாமல் இருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் உங்கள் நண்பர் மற்றும் திருமண புரோக்கருமான ரகுராமனிடம் விட்டுவிடுங்கள். அவர் எல்லாம் விசாரித்து ஓ. கே. என்றால் உங்களுக்கு சம்மதம் தானே!" என்று அவன் பேசுவதைக் கேட்டு விட்டு "நீ சீரியஸாகவே சொல்றியா? வருமானம் இல்லாமல் எப்படி குடும்பம் நடத்துவ? விளையாட்டுத்தனமான காரியம் இல்லை கல்யாணங்கிறது! உனக்கு சம்பாத்தியம் இல்லாமல் கடனை எப்படி அடைக்க முடியும்?" "எனக்குக் கல்யாணம் பண்ணி வையுங்கள். கடனே இருக்காது!" என்று சூரி சொல்ல மாறி மாறி சொற்போரே ஏற்படும் அபாயத்தில் இருக்கும் போது அப்பாவின் நண்பர் ரகுராமன் உள்ளே யதார்த்தமாக வந்தார். என்ன பிரச்சனை என்பதை ஓரளவு யூகித்து விட்ட ரகுராமன், சூரி அப்பாவிடம், "நண்பா! உன் பையன் துடிப்பானவன்தான். இவ்வளவு கான்ஃபிடெண்ட்டாக சொல்றானே! பொழுதுபோக்காக காதலிக்கும் இந்த காலத்து பசங்களுக்கு மத்தியில் காதலித்தவளைக் கை பிடிக்க இவ்வளவு தைரியமாக, உறுதியாக அதுவும் உன்னிடமே பேசுகிறான் என்றால் சூரி நிச்சயம் சாதிப்பான். நான் பொறுப்பாக இருந்து விசாரித்து நல்ல குடும்பமாக இருந்தால் மூத்தவன் திருமணம் போல் சிறப்பாக செய்வோம். நம் பக்கம் கல்யாணச் செலவு பெரிதாக வராதபடி நான் முடிக்கிறேன். முதலில் பெண் வீட்டாரை யார் எனப் பார்க்கிறேன். வா சூரி!"என்று சூரியோடு கிளம்பினார் ரகுராமன். ரகுராமன் முதல் வேலையாக சூரியை அழைத்துக் கொண்டு பூமிகா அப்பாவைப் பார்க்க சென்றார். ரகுராமனும், பூமிகாவின் அப்பாவும் பால்ய சிநேகிதர்கள் என்பது அங்கே சென்றதும் தான் அவர்களுக்கேத் தெரிந்தது. இருவரும் கட்டித் தழுவி வெகுநேரம் பேசிவிட்டு ரகுராமன் தான் வந்த காரியத்தையும், சூரியும், பூமிகாவும் மனதார விரும்புவதையும், காதலுக்காக வைராக்கியமாக அப்பாவிடம் சூரி பேசியதையும், பூமிகாவை கை பிடிக்க உண்மையாக இருப்பதையும் விபரமாகக் கூறினார். பூமிகாவின் அப்பாவும் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருப்பதால் நெருங்கிய நண்பர் உத்திரவாதம் கொடுப்பதாலும் யோசித்துச் சொல்வதாக இருவரையும் உபசரித்து அனுப்பி வைத்தார் பூமிகாவின் அப்பா! ஒரு வாரம் கழித்து பூமிகாவின் அப்பா காதல் திருமணத்திற்கு பச்சைக் கொடி காட்டினார். பூமிகாவின் போட்டோ பார்த்த சூரியின் பெற்றோருக்கு பூமிகாவை மிகவும் பிடித்துவிட்டது. ஆனால் இரு சம்மந்திகளும ஒருவரையொருவர் இன்னும் பார்த்துக் கொள்ள வில்லை. அந்த நாளும் வந்தது. இரண்டு குடும்பத்திற்கும் பலமான பாலமாக ரகுராமன் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட்டார். நிச்சயதார்த்தம் உறுதிசெய்யப்பட்டு இரு வீட்டாரும் நேரடியாக சந்தித்துக் கொண்டனர். சூரியின் அப்பாவும், பூமிகாவின் அப்பாவும் ஒருவரையொருவர் பார்த்து அதிர்ச்சியாயினர். பூமிகாவின் அப்பாவிடம் தான் சூரி அப்பா வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். அங்கே வந்த ரகுராமன் இருவரிடமும், "நண்பர்களே! தன் காதலியும் கிடைக்க வேண்டும். அதே நேரத்தில் தன் அப்பாவின் கடனும் அடைக்க வேண்டும். அதனால் ஆரம்பத்திலேயே இருவரிடமும் யார் சம்மந்தி என்று தெரியப்படுத்தாமல் நல்ல விஷயம் நடக்க வேண்டும் என்பதற்காக நானும் சூரியும் நடத்திய கல்யாண வைபோக நாடகம் இது. வரதட்சிணை வேண்டாம். பூமிகாவை தான் சம்பாதித்து தான் காப்பாற்ற வேண்டும். அதற்குப் பதிலாக அப்பாவின் கடனை தள்ளுபடி செய்தது போல் இருக்கட்டும் என சூரி நினைத்தது சரியாகப் பட்டது எனக்கு! தவறு என்றால் எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள்!" ரகுராமன் இவ்வாறு உருக்கமாகப் பேசியதும் இரு சம்மந்திகளும ரகுராமன் இறுகக் கட்டிக் கொண்டனர். இரண்டு மாதங்கள் கழித்து பெரிய ஃபைனான்ஸ் கம்பெனி ஒன்றில் முக்கிய பொறுப்பில் சூரி அமர்த்தப்பட்டு சம்பாதிக்கத் துவங்கினான். சூரியின் அப்பா முதன்முறையாக அவனைப் பார்த்து ஆனந்தமடைந்தார். பூமிகாவும் சூரியும் நல்லதொரு வாழ்க்கையைத் துவக்கினர். -பிரபாகர்சுப்பையா மதுரை- 12. Breaking News:
லவ் டுடே