கோயிலுக்குப் போய்விட்டு உள்ளே வந்து அமர்ந்து மனைவி கௌரியை அழைத்து கௌரிம்மா ஒரு டீ எடுத்துட்டு வாயேன் என்றான் ரகு.
டீ எடுத்துக்கொண்டு வந்து தந்துவிட்டு உள்ளே போனாள் கௌரி.
டீ சூடாக இருந்தது. உள்ளே போய் இன்னுனொரு டம்ளர் எடுத்து வந்து டீயை ஆற்ற ஆரம்பிக்கும்போது வாசலில் குரல் கேட்டது.
ரகு.. என்றழைத்த குரலைக் கேட்டவுடள் வாசலைப் பார்த்து லேசாக அதிர்ந்தான் ரகு. வாசலில் கையில் சிறு புத்தகத்துடன் வரதராசன் நின்றுகொண்டிருந்தார்.
வாங்க என்றழைப்பதா என்று ஒரு கணம் தடுமாறி.. வாங்க ஐயா என்றான்.
உள்ளே வந்தவர் யோவ்.. என்னய்யா ரெண்டு நாளா கடைத்தெருப் பக்கமே காணவில்லை.. உன்னோட புத்தகம் உனக்கு வேண்டாமா? இந்தா கொடுத்துட்டுப் போக வந்தேன் என்றபடி அமர்ந்தார். குரல்கள் கேட்டு உள்ளிருந்து வந்த கௌரி வரதராசனைப் பார்த்ததும் முகம் மாறினாள். சட்டென்று மாற்றத்தை மறைத்து வாங்க சார்.. என்றாள்.
இந்தாங்க ஐயா டீ சாப்பிடுங்க என்று ஆற்றிய டீயைத் தந்தான்.
வேண்டாம் ரகு.. நீ சாப்பிடு நான் சாப்பிட்டுத்தான் வந்தேன். என்றார். அப்புறம் என்ன சேதி என்றார் பேச்சைத் தொடர்வதற்காக.
செய்தி ஒண்ணும் இல்லிங்க ஐயா.. கொஞ்சம்வேலைகள் அதான் கடைத்தெரு பக்கம் வரவில்லை. நீங்கள் போங்கள் நான் பதினோரு மணிக்கு வந்துவிடுகிறேன் என்று அவரை அனுப்புவதிலேயே குறியாக இருந்தான்.
சற்று நேரம் பேசிவிட்டுக் கிளம்பிப் போனார் வரதராசன். அதுவரை கௌரியும் எட்டிப்பார்க்கவில்லை.
ரகு சங்கடமாக உணர்ந்தான். கௌரியிடம் இது குறித்து எதுவும் பேசவில்லை. கௌரியும் எதுவும் கேட்கவில்லை.
வங்கியில் உயர் பதவியில் இருந்து பணியோய்வுப் பெற்றவர் வரதாரசன். வயது எழுபத்தெட்டாகிறது. நல்ல பேச்சாளர். இலக்கியங்கள் நன்கு படித்தவர். அந்த வழியில் ரகுவிற்கு அவர் பழக்கம். என்றாலும் பழகிய கொஞ்ச நாள்களிலேயே அவரைக் குறித்து நண்பரொருவர் சொன்ன செய்தி அதிர்வாக இருந்தது. அதன்பின் அவர் மேலிருந்த மதிப்பும் நட்பும் குறையத் தொடங்கிவிட்டது. ஏன் பழகினோம் என்ன எண்ணத் தொடங்கிவிட்டான் ரகு. அதன்பின் அவரைக் கவனித்தபோது அது உண்மையென்று உணரத்தொடங்கியதும் மெல்ல அவரிடமிருநது விலகுவது தெரியாமல் விலக ஆரம்பித்தான். இப்போது வீடுவரை வந்தது அவனுக்கு அதிர்வாக இருந்தது.
பதினோரு மணிக்குக் கடைத்தெருவிற்குப் போனான். வரதராசன் அங்கிருந்தார் வாய்யா ரகு என்றார் சிரித்தபடி.
ஐயா கொஞ்சம் தனியா வாங்க உங்ககிட்டப் பேசணும்.. என்றதும் தனியாக வந்தார். என்னய்யா ரகசியம்? என்றார்.
இனிமே வீட்டுக்கு எல்லாம் வராதீங்க ஐயா.. கடைத்தெருவிலேயே சந்திக்கலாம். இங்கேயே பார்த்துப் பேசிட்டுப்போயிடலாம்..
ஏய்யா என்ன விஷயம்? என்றார்.
இல்லங்க ஐயா.. எங்கப்பா எங்களை எல்லாம் ஒழுக்கமா வளர்த்து ஆளாக்கியிருக்காங்க.. அப்படித்தான் இதுவரை வாழ்ந்திட்டிருக்கேன். வறுமை இருந்தது. வளமையும் இப்ப இருக்கும் எப்படிவும் ஒரே மாதிரிதான். உங்க வயசுக்கு உங்களோட செயல் சரியானது அல்ல. உங்களோட பலவீனமா இருக்கலாம். ஆனா உலகத்துப் பார்வைக்கு அது ரொம்ப மோசமான பண்பு. நான் பழகிட்டதால குறிப்பா சொல்றேன். உங்களுக்குப் புரிஞ்சிருக்கும். உங்களத் திருத்தற வயசு எனக்கு இல்ல. நான பலமுறை பார்த்து உணர்ந்த விஷயம் இது. உங்க குடும்பத்துலே இத ஏத்துக்கலாம். ஆனா எங்க தெருவுலே எங்க குடும்பத்துக்குன்னு ஒரு மதிப்பும் மரியாதையும் இருக்கும். அதைக் கெடுத்துக்க முடியாது. எதை வேணாலும் இழக்கலாம் ஐயா மானத்தை இழந்துட்டு வாழமுடியாது. அதனால இனிமே வீட்டுக்கு வராதீங்க.. பிடிக்கலேன்னா நாம நிறுத்திக்கலாம். பழகிய நட்பாலே இதைச் சொல்றேன் என்றான் ரகு.
எதுவும் பேசாமல் நின்றிருந்தார் வரதராசன். அவர் திருந்துவாரா என்பது பற்றி ரகு எண்ணவில்லை. இனி வீட்டிற்கு வரமாட்டார் என்பது நிம்மதியாக இருந்தது.
ஹரணி, தஞ்சாவூர்.