tamilnadu epaper

வாங்க எழுதலாம்...வாங்க பேசலாம்

வாங்க எழுதலாம்...வாங்க பேசலாம்

வாங்க வாங்கன்னு நம்மை ஒருவர், ஒரு குடும்பம் வரவேற்று உபசரிக்கும் போது அதில் கிடைக்கும் மகிழ்ச்சி,சந்தோஷம் அளவிட முடியாத அளவுக்கு இருக்கும்.  கல்யாணம், மற்றும் எந்த ஒரு சுப நிகழ்சிகளும் ஒரு நாள் அதிகபட்சம் இரண்டு நாட்கள் நடக்கும். அது இயல்பு.  தினம் தினம்  குடும்ப நிகழ்ச்சி போல நடப்பது நம் தமிழ்நாடு இ பேப்பரில் மட்டும்தான்.வாங்க வாங்கன்னு சந்தோஷமா நம்மை அழைத்து மரியாதை கொடுத்து மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்வது சாதாரண விஷயமல்ல. நமக்கானது நம் இல்லத்திற்கானது இது மட்டுமே.

 

 

"ஆண்டுக்கு  ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது  சுபதினம். அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுபதினம்." சீர்காழி கோவிந்தராஜன் தன்னுடைய கணீர் குரலில் பாடும் பாடல் நினைவுக்கு வருகிறது, 'தமிழ்நாடு இ பேப்பர்' ஐ தினசரி அதிகாலை படிக்கும்போதெல்லாம்.  முழுக்க முழுக்க வாசகர் நலனுக்காக தொடங்கப்பட்ட பேப்பர் என்று அடித்துச் சொல்லலாம். என் கவிதையை, என் நகைச்சுவையை, என் கதையை  எந்த பத்திரிக்கையும் பிரசுரிக்க மாட்டேங்குறாங்க...என்று ஏங்கிய பல உள்ளங்களுக்கு தளம் அமைத்துக் கொடுத்து இது உங்கள் 'அரங்கேற்ற வேளை' என்று அழைப்பு விடுத்து தொடர்ந்து அமர்க்களப்படுத்தி வருகிறார்கள்.  'நீங்க எழுதுங்க நாங்க பிரசுரம் செய்கிறோம்' -  இதுதான் தாரகமந்திரம்.  'அ' வில் தொடங்கிய பலர் 'ஆ'ச்சரியப்படும் அளவிற்கு முன்னேறி உள்ளார்கள், 'இ' பேப்பரில்.

 

நாம் எல்லோரும் எங்கோ ஒரு மூலையில் இருந்து இ பேப்பரில் உணர்வுபூர்வமாக கைகோர்த்து நிற்கிறோம்.  என் பெயர் உங்களுக்கு தெரியும் உங்கள் பெயர் எனக்குத் தெரியும்.  வெறும் எழுத்தில் தெரிந்த எழுதுபவர் பெயர் இப்போது போட்டோ மூலமாகவும். 'நீதானா...மன்னிக்கவும்...நீங்க தானா அந்த குயில் என்று கேட்க வைத்தது.  முன்பு சிலருக்கு சிலரை மட்டும் தெரியும். இப்போது பலருக்கு பலரை தெரியும்.  'வானில் நீந்தும் நிலவில் நாளை பள்ளிக்கூடம் நடக்கும்' புலமைப்பித்தன் அவர்கள் எழுதியதை பாடி நடித்தார் மக்கள் திலகம்.சற்றே மாற்றி 'வானில் நீந்தும் நிலவில் நாளை இ பேப்பரும் இருக்கும்...'பாட தோன்றுகிறது. 

 

பட்டிமன்றம் கேட்டு ரசித்த நாமே அந்த பட்டிமன்ற தலைப்புகளை தேர்ந்தெடுத்து 'அடுத்ததாக இந்த தலைப்பில் தனது ஆணித்தரமான கருத்துளை முன்வைக்க வருகிறார்'...  வழிமொழிய பண்பலை கலைமகள்....அட  நானா இப்படிபேசுகிறேன்....நம்ப முடியவில்லை.  என்னுள் இருக்கும் அந்த இன்னொருவனை பேச வைத்தது பண்பலை.

 

ஒரு ஆறு தனது பாதையில் சில இடங்களில் வேகமாகவும், சில இடங்களில் மெதுவாகவும், சில இடங்களில் தேங்கியும் பயணம் செய்யும். அது பயணிக்கும் இடங்களில் கரையோர மரங்களில் இருந்து அழகான பூக்கள் விழுந்து, கலந்து பயணிக்கும்.  ஒரு சில பறவைகள் அருகே வந்து தொட்டுவிட்டு செல்லும். சில மரங்கள் தங்கள் கிளைகள் மூலம் நீரைத் தொட்டு தொட்டு விளையாடும்.சாதாரண கண்களினால் பார்க்கும் போது இருப்பதை விட ஒரு கேமிராவில் படம் பிடித்து பார்க்கும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்.  ரசனை குறைவாக இருப்பவர்கள் கூட அழகான கேமிரா மூலம் எடுத்த படத்தை ரசித்து பார்ப்பார்கள்.நாமெல்லாம் ஒரு ஆறு போல...பயணம் செய்து கொண்டே இருக்கிறோம். நம் மேல் விழும் பூக்களை, தொட்டுச் செல்லும் பறவைகளை, மழையை 'இ பேப்பர்' என்ற கேமிரா படமெடுத்து தருகிறது. வேறு வேறு கோணங்களில் நாம் எப்படி இருக்கிறோம் என்று உலகத்திற்கு காட்ட.

 

'நான் பாடும் பாடல் நலமாக வேண்டும். இசை வெள்ளம் நதியாக ஓடும். அதில் இளநெஞ்சம்  படகாக ஆடும்.'  பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்'  என்று எம்.ஜி.ஆர்.  அவர்கள் பட பாடல்களை  பாடுவதும், பாட வைப்பதும் இ பேப்பரே. இன்னும் மென்மையாக  சொன்னால்  இசைஞானியின் மனதை மயக்கும் இனிமையான பின்னணி இசை போல   அது இன்றும் என்றும் நம் நெஞ்சை கொள்ளை கொண்டு கொண்டே...

                                                      

திருமாளம் எஸ். பழனிவேல்