tamilnadu epaper

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு)-12.04.25

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு)-12.04.25


  காய்கறிகளுள் மிகவும் சிறிய காயான சுண்டைக்காயில் இவ்வளவு பயன்களாயென்று ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை! வைட்டமின் ஏ.சி.இ போன்ற சத்துகளை எக்கச்சக்கமாக உள்ளடக்கிய சுண்டைக்காய் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும், நீரிழிவு, இதயநோய் உள்ளவர்களுக்கு பலவீனத்தைப் போக்கி பலமளிக்கும் என்றெல்லாம் படித்தபிறகு, 'இதென்ன சின்னஞ்சிறிய சுண்டைக்காய்தானே' என்று நான் அலட்சியப்படுத்தியது தவறென்று தெரிகிறது!


  சீர்காழி ஆர்.சீதாராமனின் 'வாழ்வியல் பாடம்' என்ற சிறுகதையில் ரோபோ ஜான் 'உணர்வுகளை புரிந்து பரிமாறும் திறன் வேண்டும்' என்று கேட்டபோது, இப்போது முடியாமல் வானதி கண்ணீர் சிந்தியிருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் மனிதனைவிட நன்கு சிந்திக்கக்கூடிய, உணர்வுகளை புரிந்துக்கொள்ளக்கூடிய ரோபோக்களை, மனிதனே தயாரித்து, அதன்பிறகு தனக்குத்தானே சிந்திக்கும் அந்த ரோபோக்களுக்கு அவனே அடிமையாகும் பரிதாபநிலைகள் வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!


  எப்போதும் இளம் ஆண் பெண் நட்பு என்றாலே கடைசியில் காதலில் வந்துதான் முடியும் என்ற நிலையில், ஆண் பெண் நட்பை நட்பாக மட்டுமே தொடர்வது நாகரீகம் என்பதை வலியுறுத்திய நா.பத்மாவதியின் 'மஞ்சம்' என்ற சிறுகதை நெஞ்சத்தில் நிற்கிறது. மிகவும் நல்ல சிறுகதை.


'வாழ்ந்தே தீருவோம்' என்ற ஹரணியின் 'காதல் பயணம்' என்ற தொடர்கதை இனி வேகமாக'ஓட' ஆரம்பித்து விடும் என்று நினைக்கிறேன். சரவணன், வள்ளியம்மை ஆகிய இந்த இருவரின் வாழ்க்கைப் பபயணம் அடுத்தடுத்து எப்படியிருக்குமோயென்று இப்போதிலிருந்தே மனசுக்கிடந்து அடித்துக்கொள்கிறது!


  சசிகலா திருமால் சித்திரையின் சிறப்புகளை பட்டியலிட்டிருந்த விதம் அற்புதமாக இருந்தது. இந்த கட்டுரையில் அவர் சித்திரை மாதத்தின் ஆன்மீக விவரங்களை அழகாக தந்திருக்கிறார். சித்திரையின் சீறப்பை நான் முழுமையாக உணர்ந்துக்கொண்டேன்.


  தலைவர் நீலகண்ட பிரம்மச்சாரியை தமிழ்நாடு இ. பேப்பரில் மீண்டும் சந்தித்தேன். பல வருடங்கள் சிறையிலிருந்த தீவிரமான இந்திய சுதந்திரப்போராட்ட தியாகியான இவரை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சிதான்!


  இப்போது நிறையபேர் வீட்டில் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளை வளர்க்கிறார்கள். அவைகளிடம் குழந்தைகள் எப்படி பழகவேண்டும் என்று சொல்லப்பட்ட அறிவுரைகள் பயனுள்ளவை.


  'ஏதோ டாக்டர் மாத்திரைகள் கொடுத்தார், அதை டபக்கென்று எதனோடாவது விழுங்கித் தொலைப்போம்' என்று விழுங்காமல், ' மாத்திரைகளை எப்படி எடுத்துக்கொள்வது என்ற குறிப்புகள் எல்லோரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய ஒன்றாகும். தமிழ்நாடு இ.பேப்பரில் வெளிவரும் ஏராளமான விஷயங்கள், ஏதாவது ஒருவகையில் பயன்தருவதாக இருக்கிறது!


-சின்னஞ்சிறுகோபு,

 சிகாகோ.