இப்போதெல்லாம் எங்கே சென்றாலும் தெருவில் நடந்துச் சென்றாலும், ஷாப்பிங் செய்ய சென்றாலும், ஹோட்டலுக்குச் சாப்பிட சென்றாலும் யாரோ நம்மை கவனித்துக்கொண்டே இருப்பது போல ஒரு உணர்வு ஏற்படுகிறது. இப்போது எங்கும் சிசிடிவி கேமராக்கள் கவனித்துக்கொண்டே இருக்கின்றன. கவிஞர் பாலசந்தர் 'சிசிடிவி கேமரா' என்ற சிறுகதை மூலம் இந்த காலத்தில் வியாபார நிறுவனங்கைளுக்கு சிசிடிவி கேமரா எவ்வளவு அவசியம் என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார்.
பிரபாகர்சுப்பையாவின் 'காதல் டுடே' எந்தவித பிரச்சனையும் இல்லாத காதல் கதையாக இருந்தது. சிலருக்குதான் இப்படி எளிதான காதல் வெற்றிகள் கிடைக்கும்!
சசிகலா திருமாலின் 'சப்தமிடும் மௌனங்கள்...' தொடர்கதை அப்படியே காதல் பரவசத்தில் மிதந்துப் போகிறது. இலக்கியா தீபக்கின் காதல் இப்படியேதான் இனிய தென்றலாக போகுமா, அல்லது ஏதாவது புயல் வருமாயென்று தெரியவில்லை.
ப.சரவணனின் 'பாத தரிசனத்தின் பலன் என்ன?' என்ற ஆன்மிக கட்டுரை அற்புதம். கடவுள்களில் ஒவ்வொரு கடவுள்களுக்கும் கைகளின் எண்ணிக்கையும் தலைகளின் எண்ணிக்கையும் மாறுபடும். ஆனால் பாதம் இரண்டு மட்டுமே இருக்கும். நான்கு முகம் கொண்ட பிரம்மனுக்கு எட்டுக் கால்களும், ஐந்து முகம் கொண்ட சிவபெருமானுக்கு பத்து கால்களும், ஆறுமுகம் கொண்ட முருகப்பெருமானுக்கு பன்னிரு கால்களும் இருப்பதில்லை. கடவுளுக்குக் கருணை அதிகம். இதுதான் பற்றுக்கோடு என்று பற்றிக்கொள்ளும் பக்தர்களுக்கு இரண்டு கைகள் என்பதால் இரு கால்களுடன் அருளுகிறார் என்ற ஆன்மிக உண்மையை இப்போதுதான் இந்த கட்டுரை மூலம்தான் உணர்ந்து தெளிந்தேன்.
பூலித்தேவனின் வீரத்தீர போராட்ட வரலாறு மெய்சிலிர்க்க வைக்கிறது. நமது சுதந்திரத்திற்காக உயிரைக்கொடுத்து போராடிய இப்படிப்பட்ட மாவீரர்களை பற்றி நினைக்கும்போதே சுதந்திர இந்தியாவின் பெருமையை நன்கு உணர முடிகிறது. அதைப் பேணி காக்கவேண்டியது ஒவ்வொரு இந்தியர்களின் கடமையாகும்.
புதுக்கவிதை பகுதியில் வெளிவந்திருக்கும் 35க்கும் மேற்பட்ட கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் என்றாலும், முகில் தினகரனின் 'கூட்டாஞ்சோறு' என்ற கவிதை குதூகலத்தில் ஆழ்த்தி, என்னை எனது சிறுவயது காலத்திற்கே கொண்டு சென்றது. இது மலரும் நினைவுகளில் ஆழ்த்தும் மறக்க முடியாத கவிதை!
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.