மதிமுகவில் வைகோவின் மகன் துரை வைகோவுக்கும் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் நடந்து வந்த நிழல் யுத்தம் முடிவுக்கு வந்திருக்கிறது.
இருவரும் சமாதானத்திற்கு வந்திருக்கிறார்கள். சொந்தக்காலில் நிற்க முடியாமல் கூட்டணியை மட்டுமே கடைசி வரையில் நம்பி இருக்க வேண்டிய நிலையில் இருக்கும் ஒரு கட்சிக்குள் அதிகார போட்டி என்பது சிரிப்பை வரவழைக்கிறது.
சேலத்தில் கஞ்சாவை வீடுகளுக்கே சென்று சப்பளை செய்ததற்காக தாயையும் மகனையும் கைது செய்து இருக்கிறார்கள். இது தமிழக அரசுக்கு நிச்சயம் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
கஞ்சா மட்டும் இல்லாமல் தினசரி பத்திரிகைகளில் புது புது விதமான போதை பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தமிழகத்தில் கைப்பற்றப்படுவதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.
போதைப் பொருள் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்காமல் அலட்சியமாக இருந்தால் அது வரப்போகும் மாநில தேர்தலில் நிச்சயம் ஆளுங்கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
2026 தேர்தலில் நாங்கள் தான் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று தமிழக முதல்வர் மேடைக்கு மேலே முழங்கி வருகிறார். நம்பிக்கை இருக்கலாம். ஆனால் அசட்டு நம்பிக்கையும் அதீத நம்பிக்கையும் பலன் அளிக்காது.
நாம் எந்தெந்த காரணங்களுக்காக மக்களின் ஆதரவை இழந்து இருக்கிறோம் என்பதை ஆராய்ந்து அதை சரி செய்தால் மட்டுமே வெற்றிக்கனியை பறிக்க முடியும். எதிரியை அலட்சியமாக எடை போட்டு விடக்கூடாது.
தில்லியில் 4 மாடி கட்டிடம் ஒன்று தரைமட்டமாக இடிந்து விழுந்து பலர் இறந்து இருக்கிறார்கள். வசிக்க தகுதியற்ற பழைய வீடுகளை அடையாளம் கண்டு அவற்றை இடிக்க உத்தரவு இட வேண்டியது அரசாங்கத்தின் வேலையாகும். எனவே இறந்து போனவர்களின் மரணத்திற்கு அரசாங்கம் தான் தார்மீக பொறுப்பு.
கர்நாடகாவில் தேர்வு எழுத வந்த மாணவர்கள் இருவரின் பூணூலை வெட்டிவிட்டு பரீட்சை எழுத அனுமதித்திருக்கிறார்கள் அங்கிருந்து அதிகாரிகள்.
வடநாடுகளில் காப்பியடிக்கவே ஊக்குவிக்கிறார்கள். தென்னிந்தியாவில் அதற்கு மாறான நிலை நிலவுகிறது.
அதனால் தான் அரசுப் பணிகளில் வட இந்தியர்களின் ஆதிக்கம் தொடர்கிறது.
-வெ.ஆசைத்தம்பி
தஞ்சாவூர்