பூபாலன் சுட்டிப் பையன். தனது கோடை விடுமுறைக்காக தாத்தா வீட்டிற்குச் சென்று விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்து வந்தான். பல புதுப்புது தகவல்களை தாத்தா பாட்டியிடம் கேட்டு தெரிந்து கொண்டான். ஒரு நாள் தாத்தாவுடன் தாத்தாவின் நண்பரை பார்க்க இவனும் சென்றான். தாத்தா அவர் நண்பருடன் மிகவும் உற்சாகமாக பேசி மகிழ்ந்தார். இருவரும் பேசி முடித்தவுடன் கிளம்பும்போது தாத்தாவின் நண்பர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான் பூபாலன். அப்பொழுது அந்த தாத்தா வாழையடி வாழையாக வாழ்வாங்கு வாழ வேண்டும் என வாழ்த்தினார்.
பிறகு பூபாலன் தன்னுடைய தாத்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான். வீட்டிற்கு வந்த அவன் மனதில் எத்தனையோ மரங்கள் இருக்க தாத்தாவின் நண்பர் ஏன் வாழை மரத்தை மட்டும் குறிப்பிட்டார் என்ற கேள்வி எழுந்தது. உடனே தன் ஐயத்தை போக்கிக் கொள்ள தனது தாத்தாவிடம் சென்று, தாத்தா எனக்கு ஒரு ஐயம் ஏற்பட்டுள்ளது என்றான்.
தாத்தாவும் உடனே ஆர்வமாக உன்னுடைய ஐயத்தை கூறு தெளிவுபடுத்துகிறேன் என்றார். தாத்தா உங்கள் நண்பர் என்னை வாழ்த்தும் போது வாழையடி வாழையாக வாழ்க என்று வாழ்த்தினாரே... அதற்கு என்ன அர்த்தம் தாத்தா என்றான். அதாவது பூபாலா... வாழைமரம், தான் வாழ்ந்து கொண்டு இருக்கும் பொழுதே இன்னொரு வாழைக்கன்றை உருவாக்கி விடும். தன் வேரிலிருந்து இன்னொரு மரத்தை உருவாக்கும் தன்மை கொண்டது வாழை. அதனால் ஒரு வாழை வைத்தாலே நிறைய வாழைகள் எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கும் அதனால் தான் வாழையடி வாழையாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறார்கள் என்றார்.
அது சரி தாத்தா... எவ்வளவோ உயர்ந்த மரங்கள் இருக்கிறது.. பனைமரம்.. மாமரம்... தென்னை மரம்.. விலை உயர்ந்த மரமான தேக்கு மரம்...என எவ்வளவோ மரங்கள் இருப்பினும் ஏன் வாழை மரத்தை மட்டும் குறிப்பிடுகிறார்கள் என்று ஆவலோடு கேட்டான்.
அதாவது....வாழைமரம் இருக்கும் போதும் எல்லோருக்கும் உதவியாக இருக்கும். யோசித்துப் பார் பூபாலா... தேக்கு மரம் அதை வெட்டிய பின் தான் உபயோகப்படும். வாழை இருக்கும்பொழுதே பயன்படும்.புரியும்படி கூறுகிறேன் கேள். வாழையின் தண்டு.. இலை.. பூ..பழம்.. பட்டை...நார்... என அத்தனையும் பிறருக்கு பயன்படும். அதுமட்டுமல்ல தான் இறக்கும் தருவாயில் பல வாழைக்கன்றுகளை உருவாக்கி விட்டுச் செல்லும். அதுமட்டுமல்ல தேக்கு மரத்தை அனைவராலும் வளர்க்க முடியாது..ஆனால் வாழைமரம் அப்படியல்ல. பண வசதியோ, இடவசதியோ அதற்கு பெரிது இல்லை. எந்த இடத்தில் வைத்தாலும்..வாழ்ந்து காட்டும் தன்மையுடையது வாழை. அதுபோல் நாமும் இருக்கும் இடத்திற்கு ஏற்றார் போல் வாழ்ந்து பிறருக்கும் உதவி செய்து தானும் தன் குலத்தையும் உயர்த்த வேண்டும்.அதனால் தான் நாம் அப்படி வாழ்த்துகிறோம் என்றார். இப்பொழுது புரிகிறதா என்றார் தாத்தா.பூபாலனும் நன்றாக புரிந்து கொண்டேன் தாத்தா என்று கூறி மகிழ்ச்சியுடன் வாழைமரம் இருக்கும் திசை நோக்கி ஓடினான்.
-முனைவர் உமாதேவி பலராமன்,
117 பைபாஸ் சாலை,
திருவண்ணாமலை.
606601.