நேற்று அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியை படுக்கையில் கிடந்தவாறே நினைத்துப் பார்த்தான் முரளி. ' "அந்த எம்.டி... ராஸ்கல்.... அத்தனை பேர் முன்னாடி வெச்சு கொஞ்சம் கூட யோசிக்காமல்... என்னைத் திட்டிட்டானே!... அதான் நானும் பதிலுக்குத் திட்டி... அவன் மூக்கை உடைக்கிற மாதிரி, "போடா நீயுமாச்சு உன் வேலையுமாச்சு"ன்னு ஜாப்பைத் தூக்கி எறிஞ்சிட்டு வந்துட்டேன்!... வேற வேலையா கிடைக்காது எனக்கு?"
அடுத்து வந்த மூன்று மாதங்கள் கம்பெனி கம்பெனியாக ஏறி.. இறங்கிய முரளிக்கு எல்லா இடத்திலும் நெகட்டிவ் பதில்களே கிடைக்க நொந்து போனான்.
காலை ஒன்பதரை மணி,
வேலைக்குப் போகாத காரணத்தால் நிதானமாய் எழுந்து காலை டிபனுக்காக பக்கத்து ,மெஸ்ஸுக்குப் புறப்பட்டான்.
அறைக் கதவைப் பூட்டிவிட்டுத் திரும்பியதும், காலடியில் படுத்துக் கிடந்த தனது வளர்ப்பு நாய் டைகரைக் கவனிக்காமல் அதன் முன்னங்காலைத் தனது பூட்ஸ் காலால் மிதித்து விட, அது மரண ஓலமிட்டது.
என்ன செய்வதென்று தெரியாமல், "ஸாரி... ஸாரி... டைகர்" என்று சொல்லி விட்டு மெஸ்ஸை நோக்கி நடந்தான்.
அதுவும் நொண்டி நொண்டி அவன் பின்னாடியே வந்தது.
மெஸ்ஸிற்குள் சென்று சாப்பிட்டு விட்டு வெளியே வந்தான் முரளி. அது மெஸ் வாசலில் இவனுக்காகக் காத்திருந்தது.
இவன் வீட்டை நடந்த போது அதுவும் பின் தொடர்ந்தது.
வீட்டுக்கு வாசலுக்கு வந்ததும் குனிந்து அதனிடம், "ஸாரி டைகர்... உன்னோட காலை தெரியாமல் மிதிச்சிட்டேன்..." என்றான் முரளி.
அது வாலாட்டியது. முரளி அதன் தலையைத் தடவி கொடுக்க, அது தன் உடம்பை இவன் மீது உரசி மகிழ்ந்தது.
அறைக்குள் வந்தவன் அப்படியே படுக்கையில் விழுந்து யோசிக்க ஆரம்பித்தான்.
"எங்கிருந்தோ வந்து... வெறும் ஆறு மாசம் மட்டுமே என் கூட வாழ்ந்த இந்த நாய்... நான் பூட்ஸ் காலால் மிதித்து அதன் காலை உடைத்து மரண வலியை ஏற்படுத்தியும் கூட அதை மறந்துட்டு எனக்குப் பாதுகாவலாய் என் கூடவே மெஸ் வரைக்கும் வந்து... வெளியே காத்திருந்து, நான் திரும்பிய போது என் கூடவே திரும்பி... நான் ஸாரி கேட்டதையும் புரிஞ்சுக்கிட்டு வாலை ஆட்டுது.... ஆறு மாசமே என்னோட சோத்தைத் தின்ன இந்த அஞ்சறிவு பிராணிக்கு இத்தனை விசுவாசம் இருக்கும் போது... ஆறு வருஷமா அந்த முதலாளியோட சம்பளத்தில் தானே நானும் சாப்பிட்டுட்டு... ஊருல இருக்குற என் குடும்பத்தாருக்கும் அனுப்பறேன்... ஆறறிவு மனிதனான எனக்கு ஏன் விசுவாசம் இல்லை?"
படுக்கையில் எழுந்து அமர்ந்த முரளி அப்போதே தீர்மானித்தான், "நாளைக்கே போய் முதலாளி கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு அவர்கிட்டயே வேலைக்கு சேரணும்... அவர் மறுத்தாலும் கெஞ்சிக் கூத்தாடியாவது என்னோட விசுவாசத்தை காட்டணும்!"
ஐந்தறிவு மிருகத்திடமிருந்து கூட ஆறறிவு மனிதன் பாடம் கற்க முடியும்.
(முற்றும்)
முகில் தினகரன். கோயமுத்தூர்.