ஏ... கழுத...எவ்வளவு நேரமா தட்டுறன்...
என்னடி பண்ணுற... கதவ தொறடி நாயே...
'புல்' போதையில் கதவில் சாய்ந்தவாறே
கதவை தட்டிக்கொண்டேயிருந்தான் தாண்டவராயன். பத்து நிமிடம் கழித்து
கதவை திறந்தாள் வள்ளி. உடலில் சிறிதும் தெம்பில்லாதவளாய்.
"ஒரு வாரமா எங்க போயி தொலைஞ்ச...
பொண்டாட்டி புள்ளைங்க இருக்காங்களா...
செத்துட்டாங்களான்னு பாக்க வந்தியா...
உனக்கெல்லாம் எதுக்குடா குடும்பம்
சனியனே... இன்னமும் திருட்டு தொழில விடலயா... அஞ்சாறு வாட்டி ஜெயிலுக்கு
போயும் உனக்கு புத்தி வரல...திருந்தவே மாட்டியா...அடுத்தவங்க பாவத்தை கொட்டிகிறியே...அந்த பாவமெல்லாம் உன்ன சும்மா விடாது... இதுக்கு மேல நீ
திருட போன எங்கள பொணமாத்தான் பாப்ப..." பொண்டாட்டி இவ்வளவு நேரமா
கத்தியும் அவன் காதில் விழுந்ததாக
தெரிய வில்லை. கையில் வைத்திருந்த
டிபன் பொட்டலத்தை கீழே போட்டுவிட்டு தரையில் சாய்ந்தான்.
ஒரு வருடமாக அவனும் அவன் நண்பன் குருவும் பெண்களிடம் செயின் பறிக்கும் திருட்டு வேலையை செய்து வந்தனர்.பல முறை ஜெயிலுக்கு போய் வந்துள்ளனர் .
பொண்டாட்டி சத்தம் போட்டதால்,ஒரு மாதமாக அமைதியாக இருந்தவன்.
மீண்டும் தொழிலில் ஈடுபட்டான்.
அன்று இரவு எட்டு மணி.காந்தி நகர்
பட்டேல் தெருவில் அதிகம் ஆள் நடமாட்டம்
இருக்காது.ஒருபக்கம் 'கவர்மெண்ட் ஸ்கூல்
காம்பவுண்ட் ' மறுபக்கம் கார் கம்பெனி
காம்பவுண்ட் . அந்த தெருவில் இரண்டு பெண்கள் துர்கா கோவிலுக்கு போய்விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பின்னால் அந்த இரண்டு திருடர்களும் பைக்கில் வந்தனர். தாண்டவராயன் பைக்கை ஓட்ட குரு பின்னால் அமர்ந்திருந்தான். பெண்களுக்கு அருகில் வந்தவுடன், குரு ஒரு பெண்ணின்
கழுத்தித்திலிருக்கும் செயினை பறித்தான்.
பைக் பறந்தது. செயினை பறி கொடுத்தவள் நிலை தடுமாறி கீழே விழுந்தாள். விழுந்த வேகத்தில் தலையில் அடிபட்டு அதே இடத்தில் மரணித்தாள்.
மரணம் அடைந்தது தன் தங்கை என்ற விஷயம் ஒரு மணி நேரத்திற்கு பிறகுதான் தெரிந்தது தாண்டவராயனுக்கு. "ஐயோ...
என் தங்கச்சிய நானே கொன்னுட்டேனே..."
தலையில் அடித்துக்கொண்டான். ஒரு மாதத்திற்கு முன் அவன் மனைவி சொன்னது நினைவுக்கு வந்தது.
' நீ. செய்ற பாவம் உன்ன சும்மா விடாது...'
சுகபாலா,
திருச்சி.