tamilnadu epaper

வில்வம் - ஒரு மகத்துவம்

வில்வம் - ஒரு மகத்துவம்


இதன் மறு பெயர்கள்: கூவிளம், சரபீதலம், அலுவீகம், அல்லூரம், ஆலூகம், சட்டாம், சிறிய பலகியம், திரிபத்ர, பில்வம், பூவிதாத, சலய, மாங்கல்ய, சாண்டல்லியம், கற்கடக நிலை மல்லிகம், குசாபி, வில்வை


வளரும் இடங்கள்: இலங்கை, இந்தியா மற்றும் அயனமண்டலத்தை சேர்ந்த ஆசிய நாடுகளில் காணப்படும் ஒரு தாவரமாகும்.


பயன் தரும் பகுதிகள்: இலைகள், கொட்டைகள், பட்டை, மலர், பழம் மற்றும் குச்சி ஆகிய இவை அனைத்துமே பயன் தரும் பகுதிகள் தான்.


பொதுவான தகவல்கள் : வில்வம் அல்லது வில்வை அல்லது குசாபி அல்லது கூவிளம் (Bael, Aegle marmelos) இலங்கை, இந்தியா மற்றும் அயனமண்டலத்தை சேர்ந்த ஆசிய நாடுகளில் காணப்படும் ஒரு தாவரமாகும். சைவ சமய மரபுகளில் வில்வ மரத்திற்கு முக்கிய பங்கு உண்டு.


கூவிளம் என்னும் சொல் வில்வ மரத்தைக் குறிக்கும். சங்ககால மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் கூவிளம் என்பதும் காட்டப்பட்டுள்ளது.


கடையெழு வள்ளல்களில் ஒருவனான எழினியின் குடிப்பூ கூவிளம். தமிழில் 'கூவிளம்' , 'இளகம்' எனப்பல பெயர்களில் வழங்கப்படும் இது தமிழ் சித்த மருத்துவத்தில் பல்வேறு பயன்களைக் கொண்டது. மூக்கடைப்பு, செரியாமை, காசம் முதலான நோய்களுக்கு இதன் இலை, பழம் என்பன மருந்தாகப் பயன்படுகிறது. வில்வ வேர் சித்தமருத்துவத்தில் கூறப்பட்டுள்ள பெரும்பஞ்ச மூலங்களுள் ஒன்றாகும்.


ஆன்மீகத்தில் வில்வ மரம் :-


இந்து மதத்தில் வில்வ மரம் மிகப் புனிதமானது.சிவ வழிபாட்டில் வில்வ பத்திர பூசை முக்கியமானது. முக்கூறுகளைக் கொண்ட வில்வ இலை திரிசூலத்தின் குறியீடாகக் கொள்ளப்படுகிறது. இது இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியா சக்தி என்பதைக் குறிக்கின்றது. நேபாளத்தில் கன்னிப் பெண்களின் கருவளத்தைக் காக்கவேண்டி வில்வம் பழத்திற்கு திருமணம் செய்து வைக்கும் சடங்கு பிரபலமானது.


சிவபெருமானுக்கு வில்வம் ஒன்று சாத்தினால் சிவலோக பதவியும், இரண்டு சாத்தினால் சிவன் அருகில் இருக்கும் பாக்கியம் கிட்டும். மூன்று சாத்தினால் அவனின் அருள் பெறலாம், நான்கு வில்வ இதழ்கள் சாத்தினால் அவனுடன் ஐக்கியமாகலாம் என்பது ஐதீகம்.


வில்வம், கிளுவை, விளா, வெண்ணொச்சி, மாவிலங்கை. இவைகளை ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் பெளர்ணமியில் சிவனுக்குச் சாத்தினால் மெய்ஞ்ஞானம் ஏற்படும். வில்வம் பக்தியையும், முக்தியையும் அளிக்கக்கூடியதாகும்.


வில்வமரத்தை வளர்ப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். ஒரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிப்பதால் சகல பாவங்களும் நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும்.


ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும்.


கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.


108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும்.


இம் மரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல் எமது சரீரத்தில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும்.


சிவனிற்கு பிரியமான வில்வர்ச்சினை மூலம் சிவனின் திருவருட் கடாச்சத்தைப் பெறமுடியும். வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.


வீட்டில் துளசி மாடம் போல் வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு ஒருபோதும் நரகமில்லை.


ஒரு வில்வதளம் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் ஸ்வர்ண புஷ்பங்களால் இறைவனை அர்ச்சிப்பதற்கு சமன். வில்வப் பழத்தின் மகத்துவம்:-


வில்வப்பழம் இருதயத்துக்கு வலுவூட்டுகிறது. சுவாசத்தில் நல்ல வாசனையை உருவாக்குகிறது. நெஞ்சில் பாரத்தைக் குறைக்கிறது. வில்வப் பழத்தை வெறும் வயிற்றில்தான் சாப்பிட வேண்டும். வில்வப்பழம் மாரடைப்பு நோயைத் தடுக்கிறது. கர்ப்பிணிப் பெண்கள் வில்வப்பழத்தைச் சாப்பிட்டால் பிறக்கும் குழந்தை அழகாக இருக்கும்.


வில்வப்பழம் பல வியாதிகளுக்கும் சிறந்த மருத்தாகும். இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும். சிறுநீர் கோளாறுகளை நீக்கும். தாய்ப்பாலை பெருக்கும். மாதவிடாய்க் கோளாறுகளைக் குணமாக்கும். சிறுநீரகத்தில் உண்டாகும் கற்களைக் கூடக் கரைக்கும். இதை ஊறுகாய் போட்டுச் சாப்பிட்டால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.


15 அடி முதல் 25 அடி வரை உயரமுள்ள இம்மரத்தின் இலைகளில் முள் இருக்கும். ஒவ்வொரு கிளையிலும் 3 இலைகள் இருக்கும். வில்வப் பழம் பார்ப்பதற்கு ஆப்பிள் வடிவில் இருக்கும். அரபு மொழியில் பிஹி, சபர்ஜல் என்று அழைப்பார்கள். யுனானி மருத்துவர்கள் இதை பேல்கிரி என்றும், நாட்டு மருத்துவர்கள் வில்வப் பழம் என்றும் அழைப்பார்கள். கோடைக்காலத்தில் பழுக்கும் வில்வப்பழங்களின் தோல் வழவழப் பாகவும், கெட்டியாகவும் இருக்கும். அதற்குள் கெட்டியான சதைப்பகுதி இருக்கும். பழமாக மாறும் போது சதைப்பகுதி மெதுவாகவும், இனிப்பாகவும் மாறிவிடும். கோடைக்காலம் ஆரம்பம் ஆகும் முன்பே மரத்தின் அனைத்து இலைகளும் உதிர்ந்து விடும். மீண்டும் தோன்றும் புதிய இலைகள் சிவப்பாக இருக்கும். நாளடைவில் பச்சை நிறத்தில் மாறிவிடும். நம் நாட்டில் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் காகித வில்வம் என்ற பெயரில் கிடைக்கின்ற வில்வப் பழம் தான் மிகவும் உயர்ரக பழமாகக் கருதப்படுகிறது. இப்பழத்திற்குள் விதைகள் குறைவாக இருக்கும். இதன் பூக்களில் தேனைப்போன்ற வாசனை இருக்கும்.


மருத்துவ விஞ்ஞானிகள் வில்வப்பழத்தை ஆய்வு செய்து பார்த்தனர். இதில் டேனிக் ஆசிட், பேக்டீன் மற்றும் வழவழப்பான சத்துக்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இப்பழத்தில் மார்மெலோசின் என்ற சத்தும் இருப்பதைத் தெரிவித்துள்ளனர். வில்வ மரப்பட்டையிலிருந்து பகாரின், பூமாரின் பிஸ்கிமானின் சத்துக்களும் தனியாகப் பிரித்து எடுக்கப்பட்டுள்ளன. விதைகள், இலைகள் மற்றும் தண்டுகளிலிருந்தும் ஒருவிதமான எண்ணெய்ப் பசையைப் பிரித்தெடுத்திருக்கின்றார்கள். இதைப் பூச்சிகள், ஈக்கள், எறும்புகள் மற்றும் விஷ ஜந்துக் களைச் சாகடிப்பதற்குப் பயன் படுத்துவார்கள். கிராமங்களில் இம்மரத்தின் இலைகள் மற்றும் தண்டுகளை எரித்துக் கொசுக்கள், எறும்புகள், தேனிக்கள் மற்றும் விஷப்பூச்சிகளை விரட்டுவார்கள்.


அடிக்கடி பேதியும், சீதபேதியும் ஆகுதல், இறைச்சி, மீன், முட்டை,பிரியாணி, வடை, எண்ணெய்ப் பலகாரங்கள், ரொட்டி போன்ற தாமதமாக ஜீரணமாகும் உணவுப் பொருட்களால் ஏற்படும் வயிற்றுவலி-பேதி, கல்லீரல், மண்ணீரல், இரைப்பை மற்றும் குடல் பலவீனத்தால் ஏற்படும் வியாதிகளைக் குணமாக்க வில்வப்பழம் மிகவும் பயன்படுகிறது. நாட்டு மருந்துக் கடைகளில் உலரவைத்து விற்கப்படும் வில்வப்பழத்தை வாங்கி 5 கிராம் அளவில் ஒரு துண்டை எடுத்துக் கஷாயம் போட்டுக் காலை, மாலை இரண்டு வேளைகள் குடித்தால் அடிக்கடி ஏற்படும் சீதபேதி குணமாகும். அத்துடன் உடல் உள்ளுறுப்புகளுக்கும் சக்தி தரும்.


வில்வப் பழம் மன இறுக்கத்தையும் போக்க வல்லது. இன்னும் சொல்லப் போனால் கடந்த கால சம்பவங்களையே நினைத்து நினைத்து வேதனையில் மூழ்கியிருப்பவர்களுக்கு நிவாரணமளிக்கும் ஓர் அமுதம் என்றே வில்வப் பழத்தைச் சொல்லலாம். அவர்கள் இரண்டு கிராம் அளவில் கஷாயம் தயாரித்து தினசரி ஒருவேளை குடிக்கலாம். இதனால் மனம் நிம்மதி அடையும். மனம் ஒரு ஆலயமாக மாறும். இதனை இன்னொரு சிவ மூலிகை என்று சொன்னாலும் அது மிகையாகாது.


வில்வ மரத்தைப் பற்றிய மேலும் சில பொதுவான தகவல்கள்:-


மணமுடைய இலைகளைப் பெற்ற முட்களுள்ள பெரிய மரம் வில்வம். மாற்றடுக்கில் மூன்று கூட்டிலைகளைக் கொண்டது. ஐந்து கூட்டிலைகளைக் கொண்ட மரத்தை மகாவில்வம் என்பர். ஆனால், மகா வில்வம் மிகவும் அரிதாகக் காணக் கிடைக்கிறது.


பொதுவாக வில்வ இலை மலத்தைக் கட்டுப்படுத்தும். வயிற்று வலியைப் போக்கும். கபவாதங்களைத் தணிக்கும். காமத்தை விருத்தி செய்யும். எல்லாவிதமான மேக நோய்க்கும் வில்வம் அரும் மருந்தாக உள்ளது. இது அனைத்து வகையான காய்ச்சலையும் போக்கும் தன்மை கொண்டது. வில்வப் பழம் பித்த சம்மந்தமான நோய்களுக்கு நல்ல மருந்தாகும்.


வில்வத்தின் மேலும் பல மருத்துவப் பயன்கள்:


* வில்வத்தின் தளிர் இலைகளை வதக்கி இளஞ்சூட்டில் ஒத்தடம் கொடுக்கக் கண்வலி, கண் சிவப்பு, அரிப்பு என அனைத்தும் நீங்கும்.


* வில்வ இலைகளை சுத்தம் செய்து தினமும் மென்று தின்று வந்தால் நல்ல செரிமானம் ஏற்படும். உண்ட உணவில் உள்ள சத்துக்கள் இரத்தத்தில் கலந்து உடல் வலுப்பெற உதவும்.


* வில்வ இலைச் சூரணம் ஒரு தேக்கரண்டியும், கரிசலாங்கண்ணி இலைச்சாறு ஒரு தேக்கரண்டியும் கலந்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை விரைவில் குணமாகும்.


* வில்வ இலையை தினம் 5 முதல் 10 வரையில் தின்று வந்தால் ஆஸ்த்மா நோயின் கடுமை குறையும்.


* வில்வத்தின் பழச்சதையை உலர்த்தி காய வைத்துப் பொடி செய்து அதில் ஒரு கிராம் எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து மூன்று வேளை சாப்பிட பேதி, சீதபேதி, பசியின்மை குணமாகும்.


* வில்வப்பிஞ்சை அரைத்துத் தயிரில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்றுக்கடுப்பு, சீதபேதி, புண் போன்றவை விரைவில் குணமாகும்.


* வில்வப்பூவையும், துளசி இலையையும் சமமாகத் தேவைக்கு ஏற்ப எடுத்து சிதைத்துச் சாறு எடுத்துக் கொண்டு, சிறிது தேன் கலந்து காலை, மாலையாக வேலைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் மிகக் கடுமையான அனைத்து வகைக் காய்ச்சலும் தணிந்து நோய் நீங்கும். அத்துடன் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்லது.


* வில்வ இலையைக் கைப்பிடி அளவு எடுத்து இரவு தண்ணீரில் குறைந்தது எட்டு மணி நேரம் ஊற வைத்து, தினசரி காலையில் வெறும் வயிற்றில் 30 மில்லியளவு இந்த ஊற வைத்த நீரை குடித்து வந்தால் - உடம்பில் ஏற்படும் கை, கால் வலிகள் கட்டுப்படும். அத்துடன் மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் இந்த நீரை குடித்து வர காலப்போக்கில் புத்தி தெளியும்.


* வில்வப் பழச் சதையை, காய்ச்சிய பாலில் கசக்கி விட்டு, திப்பி நீக்கி சாப்பிட்டால் கணைச் சூடு குறையும்.


* வில்வப் பழத்தைச் சேகரித்து அதிமதுரத் தூள், சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்த அதிகரிப்பால் ஏற்படும் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.


* வில்வக் காயுடன், வெள்ளைப் பூண்டு வைத்து அரைத்து, தேமல் மீது தடவி வர, தேமல் மறைந்து சருமம் இயல்பு நிலையைப் பெறும்.


* வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று தின்று தண்ணீர் குடித்து வந்தால் ஆஸ்துமா குணமாகும்.


* வில்வப் பழ ஓட்டை எடுத்துக் கடைந்து கஷாயம் வைத்து, தேன் கலந்து சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.


* வில்வப் பூக்களை புளி சேர்த்து ரசம் வைத்துச் சாப்பிட்டு வர குடல் வலிமை பெறும்.


* வில்வாதி குளிகை - நஞ்சு, காலரா, அஜீரணம், இடுவிஷம், காய்ச்சல், கை கால் வலி ஆகிய அனைத்தையும் நீக்கும்.


* வில்வாதி லேகியம் - வாந்தி, இருதய நோய், காமாலை, குன்மம், கிரஹனி, சுவையின்மை, பீனிசம், இருமல், இழுப்பு, மண்ணீரல் வீக்கம், இது விஷம், மூல நோய், பாண்டு ஆகிய அனைத்தையும் தணிக்க வல்லது.


* வில்வாதி தைலம் இருதய நோயைத் தணிக்கும்.


* வில்வ இலையை வதக்கி அதை போட்டு குடிநீர் செய்து 21 நாட்கள் தொடர்ந்து காலையும் மாலையும் அருந்தி வர எல்லா விதமான பித்த ரோகங்களும் குணமாகும்.


* வில்வ இலைப் பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வர குடல் புண், வாந்தி, மயக்கம் போன்ற அனைத்தும் தீரும்.


* வில்வ இலைச் சூரணம் காச நோய், வாய்ப்புண், குடற்புண் ஆகிய அனைத்தையும் நீக்கும் தன்மை கொண்டது.



-அரவிந்தன்

தஞ்சை.