டைனிங் டேபிள் மீது மாமிச துண்டங்கள் சில துண்டங்கள் தரையில் விழுந்து கிடந்தது அவைகள் மீது ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தது புழுக்கள் நெளிந்தது ஆங்காங்கே ரத்தக் கரைகள் திட்டு திட்டாய் இருந்தது.
ரகுவும், அவன் மனைவி பத்மாவும் தங்கியிருக்கும் அந்த வாடகை வீடு நான்கு நாட்களாக பூட்டப்பட்ட நிலையில் இருந்தது.
வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்ற வாசனை வெளியே எல்லா வீடுகளிலும் அதன் வாசத்தை பரப்பிக் கொண்டிருந்தது.
போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கே இன்ஸ்பெக்டருடன் ஒரு போலீஸ் வந்தார்.
அங்கே விசாரிக்கப்பட்டது ரகுவும் அவன் மனைவி பத்மாவும் எப்பொழுதும் தினம் ஓயாத சண்டைகள் போட்டுக் கொள்வார்கள்.
பக்கத்து வீட்டினர்கள் எவ்வளவு புத்திமதி சொல்லி ஒரு பிரயோஜனம் இல்லை "சார் உள்ளே யாருக்கு என்ன ஆனதோ பேச்சு மூச்சே இல்ல சார் அவங்க வீட்டுக்காரன் கோபக்காரன் அவளை ஏதாவது செஞ்சுட்டு வீட்டை பூட்டிட்டு போயிட்டானோ என்னவோ" என்றார்கள்.
"வீடுன்னா சண்டை இருக்கதான் செய்யும் ஆனா இப்படி ஒரு குடும்பத்த நாங்க பார்த்ததே இல்ல"என்றார் ஒருவர்.
வீட்டு ஓனர் குறைந்தபட்சம் ஒரு நூறு தடவையாவது சொல்லியிருப்பார் "இது சரியில்ல சீக்கிரம் வீட்டை காலி பண்ணிடுங்க" சொல்வார் கண்டு கொள்ள மாட்டார் காரணம் அவர் ரெண்டு தெரு தள்ளி வசித்து வருகிறவர்.
பக்கத்து வீட்டுக்காருங்க "ஏங்க சார் நீங்க ஏதும் கண்டுக்க மாட்டீங்களா" என கேள்வி கேட்பதால் அவர்கள் மனங்களை அந்த நேரத்தில் சமாதானப்படுத்த இப்படியாக பேசி நடிப்பார்.
மத்தப்படி மாதம் முதல் தேதியில் சரியாக வீடு தேடி வந்து வாடகை தரும் ரகுவை வீட்டை காலி செய்து விட்டு போ என்று சொல்ல மனதளவில் விருப்பமில்லை.
ஓனர் சும்மா பேச்சுக்குதான் சொல்கிறார் மத்தப்படி தான் வீட்டை காலி செய்வது வீட்டு ஓனருக்கு விருப்பமில்லை என்பது அவனுக்கும் தெரியும்.
இருந்தாலும் அக்கம் பக்கத்தினர் திருப்திக்காக "சரி சார் இந்த மாசம் காலி செய்திடறேன்" என்பான்.
இது தொடர் கதை இந்த நாடகம் எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்தது.
இப்போதெல்லாம் பக்கத்து வீட்டினார்கள் அந்த ஓனரிடம் புகார் செய்வதில்லை காரணம் சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை எல்லாம் நம்ம தலையெழுத்து என்று சொல்லி காலத்தை ஓட்டிக்கொண்டு இருந்தார்கள்.
நான்கு நாட்களுக்கு முன்பு இருவருக்கும் கடுமையான சண்டை அடிதடி வீடு பூட்டப்பட்ட நிலையில் இருந்தது உள்ளே என்ன ஆனது என்று தெரியவில்லை துர்நாற்றம் வீசியது.
இது ஓனருக்கு தெரிவிக்கப்பட்டது என்ன ஏது என வீட்டின் கதவை உடைத்து போலீசுடன் உள்ளே போய் பார்த்தார்கள்.
ஆம் நான்கு நாட்களுக்கு முன்பு சமைப்பதற்கு ஒரு கிலோ சிக்கன் ரகு வாங்கி வந்திருந்தான் இருவருக்கும் சண்டை சச்சரவு ஏற்பட்டு அடிதடி உண்டாகி அவன் மனைவி கோபித்துக் கொண்டு அவளின் அம்மா வீட்டிற்கு சென்று விட்டாள்.
சமைக்கப்படாத அந்த சிக்கனின் துர்நாற்றம் தான் அந்த இடத்தில் தேவையில்லாத கூட்டத்தை சேர்த்திருந்தது.
அந்த சமயத்தில் ரகுவோ தன் மனதை அமைதிப்படுத்த ஒரு யோகா மையத்திற்குள் நுழைந்து அங்கே மூன்று நாட்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தான்.
ரகுவின் மனைவி தன் சொந்த பந்த உறவினர்களுடன் கவலை மறந்து சிரித்து பேசிக் கொண்டிருந்தாள்.
வீட்டு ஓனரோ இவர்கள் எப்பொழுது வருவார்கள் வந்த உடனே வீட்டைக் காலி செய்ய சொல்ல வேண்டும் என கொலைவெறியோடு காத்துக் கொண்டிருந்தார்.
பிறகு ரகு தன் மனைவி வீட்டிற்கு சென்று பெரியோர்கள் முன்னிலையில் அவளை சமாதானப்படுத்தி மன்னிப்பு கேட்டான்
இருவரும் புறப்பட்டு மீண்டும் தங்களின் வாடகை வீட்டிற்கு வந்தார்கள் ஓனர் கோபத்தோடு அங்கே வர
ரகு அவரிடம் சார் உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ் நான் புது வீடு வாங்கிட்டேன் அந்த வீட்டை நீங்க தான் திறந்து வைக்கணும் எங்கள எத்தனையோ பேர் அக்கம் பக்கம் திட்டும் போதும் ஒரு மகனா மகளா எங்கள பார்த்து இந்த வீட்டை காலி பண்ணனும்னு சொல்லாம வச்சிருந்தீங்க அதற்கு நன்றி என்றான்
வீட்டு ஓனரின் கோபம் தணிந்து போய் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது என்ன சொல்வதென்று தெரியாமல் தலையாட்டினார்.
-கவிமுகில் சுரேஷ்
தருமபுரி