புதுடில்லி:
மத்திய வெளியுறவு செயலரை ‘ட்ரோல்’ செய்வதற்கு பல கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்ட பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்கியது. அதனை இந்தியா வழிமறித்து தாக்கி அழித்தது. இந்த தாக்குதல் துவங்கியது முதல் தினமும் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி , ராணுவ கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் தினமும் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமளித்தனர். போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை விக்ரம் மிஸ்ரி அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு பிறகு, அவரை சமூக வலைதளங்களில் விமர்சிக்க துவங்கினர். இதற்கு பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் ஓவைஸி விக்ரம் மிஸ்ரி நேர்மையான மற்றும் நாகரீகமான கடுமையாக நாட்டிற்காக உழைக்கும் அதிகாரி. நிர்வாகத்தின் கீழ், நமது அதிகாரிகள் பணியாற்றுகின்றனர் என்பதை அனைவரும் நினைவில் வைக்க வேண்டும். நிர்வாகம் அல்லது அரசியல் தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு அதிகாரிகளை விமர்சனம் செய்யக்கூடாது இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரசின் சல்மன் அனீஸ் சோஸ் விக்ரம் மிஸ்ரி, காஷ்மீரி. நாட்டிற்கு பெருமை சேர்த்தவர். எவ்வளவு தான் ட்ரோல் செய்தாலும் நாட்டிற்காக அவர் செய்த சேவையை யாராலும் மறைக்க முடியாது. பாராட்ட முடியவில்லை என்றால் அமைதியாக இருங்கள் எனக்கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்நவீன காலத்தில் உயர் மட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்காக யாரையும் கேலி செய்யும் மக்கள் நம் நாட்டில் உள்ளனர். நாம் போருக்கு ஆதரவானவர்கள் அல்ல. நாங்கள் அதன் உரிமைகள் மற்றும் இறையாண்மையை பாதுகாப்பதில் நம்பிக்கை கொண்ட நாடு. அதிகாரிகள் மீது அழுத்தம் கொடுப்பது வருத்தமாக இருக்கிறது.
யார் இவர்
*விக்ரம் மிஸ்ரி 1964 நவ.,7 ல் ஸ்ரீநகரில் பிறந்தார்.
*குழந்தை பருவத்தை காஷ்மீரில் கழித்த இவர், படிப்புக்காக ம.பி., குவாலியர் பகுதிக்கு குடிபெயர்ந்தார். அங்கு சிந்தியா பள்ளியில் படித்தார்.
*டில்லி பல்கலையின் ஹிந்து கல்லூரியில் வரலாற்று பாடத்தில் பட்டம் பெற்றார்.
*ஜாம்ஷெட்பூரின் எம்பிஏ டிகிரி பட்டம் பெற்றார்.
*ஆங்கிலம், ஹிந்தி, காஷ்மீரி மொழிகளிலும் பேசும் புலமை பெற்றவர். பிரெஞ்ச் மொழியும் அறிந்துள்ளார்.
*1989 ல் ஐஎப்எஸ் பணியில் இணைந்தார். வெளியுறவு அமைச்சகத்தில் பாகிஸ்தான் பிரிவில் பணியாற்றினார்.
*ஐகே குஜ்ரால், பிரணாப் முகர்ஜி ஆகியோர் வெளியுறவு அமைச்சர்களாக இருந்த போது அவர்களுடன் இணைந்து பணியாற்றினார்.
*பிரதமர்களாக இருந்த குஜ்ரால், மன்மோகன் சிங்கிற்கும், பிரதமர் மோடிக்கும் தனிச்செயலாளராக இருந்துள்ளார்.
*ஸ்பெயின், மியான்மர், சீனாவில் தூதராக பணியாற்றி உள்ளார்.
*இலங்கை மற்றும் முனிச்சிலும் அவர் பணியாற்றி உள்ளார்.
*இவர் 2022 ஜன., முதல் 2024 ஜூன் வரை தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக பணியாற்றி உள்ளார். தொடர்ந்து ஜூலை 15 2024ல் நமதுநாட்டின் 35வது வெளியுறவு செயலராக நியமிக்கப்பட்டார்.