பேருந்தில் அமர்ந்திருந்த எனக்குக் கீழே தெரிந்த அந்தக் காட்சி ஒருவிதக் கோபத்தையே உண்டாக்கியது.
அந்தச் சிறுவனுக்கு ஒரு மூணு வயது இருக்கும். பக்கத்தில் நின்று கொண்டிருந்த அவனுடைய தாய் அவனை எதற்கோ தாறுமாறாய் அடித்துக் கொண்டிருந்தாள்.
அவன் காலை உதறி உதறி அழுவதையும் அதைக் கண்டு மேலும் கோபமாகி அவன் தாய் இன்னும் அதிகமாக அடிப்பதையும் பார்த்துப் பொறுக்க முடியாத நான் பஸ்ஸை விட்டுக் கீழிறங்கி வந்தேன்.
"இரும்மா.... இரும்மா எதுக்கு நீ பையனை இப்படி அடிக்கறே?".
"என் மகன்... நான் அடிப்பேன் அதைக் கேட்க நீங்க யாரு?".
"நீ அடிம்மா... நான் வேண்டாங்கலை... எதுக்காக அடிக்கிறேன்னு காரணத்தைச் சொல்லிட்டு அடி" என்றேன்.
"காலை உதறி உதறிக் காட்டிட்டு அழறானே அதிலேயே தெரியலையே உங்களுக்கு?". என்னையே கேட்டாள்.
"தெரியலையே?".
"நிற்க முடியல...கால் வலிக்குது...என்னையத் தூக்கிக்கோ!ன்னு அழறான்".
அவன் ஒரு காலை மட்டும் எடுத்து உதறி உதறி காட்டியபடி அழுவதை கண்ட எனக்கு அவன் கால் வலிக்காக அழுவது போல் தெரியவில்லை. வேறு ஏதோ காரணம் இருப்பது போல் தோன்றியது.
என் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளும் விதமாய் அவன் அருகில் சென்று கீழே குனிந்து அவன் உதறிய காலைத் தூக்கி பார்த்தேன்.
எவனோ அணைக்காமல் போட்ட சிகரெட் அவன் காலுக்கு அடியிலிருந்து அவன் பாதத்தில் நெருப்பு காயத்தை ஏற்படுத்தி விட்டிருந்தது.
அந்தக் காயத்தின் வலி தாங்காமல் தான் அவன் காலை உதறி உதறி அழுது கொண்டிருந்தான்.
"அம்மா கொஞ்சம் இங்க வந்து பாரும்மா."
அவள் நெற்றியைச் சுருக்கியபடி வந்து கீழே அமர்ந்து, அவன் காலை தூக்கிப் பார்த்து விட்டு "அய்யய்யோ இது என்ன தீக்காயம்?" பதறினாள்.
"எவனோ அணைக்காமல் போட்ட சிகரெட்டை மிதிச்சிட்டு அந்த வலி தாங்காமல் தான் உன் மகன் காலை உதறி உதறி அழுதிருக்கான் ....அதை புரிஞ்சிக்காம அவன் தூக்கிக்கச் சொல்லித்தான் அழறான்னு நெனச்சிட்டு நீங்களும் அடிக்கறீங்க... ஒரு மகனுடைய அழுகைக்கான காரணத்தைக் கூட புரிஞ்சுக்க முடியாத தாயாய் இருக்கியே நீ?.
அவள் வெட்கித் தலை குனிய, நான் திரும்பி அங்கே புகைத்துக் கொண்டிருந்த ஆசாமிகளை முறைப்பாய்ப் பார்க்க, அவர்கள் அனைவரும் சட்டென்று தங்கள் கையிலிருந்த சிகரெட்டை கீழே போட்டு செருப்புக் கால்களால் அதை தேய்த்து அணைத்து விட்டு, " ஹி..ஹி" வழிந்தனர்.
முற்றும்
முகில் தினகரன், கோவை