அந்த ஜவுளி கடையில் சேல்ஸ்மேனாக பணி புரியும் ரகுவின் மொபைல் அதிர, சக ஊழியரிடம் சொல்லிவிட்டு டாய்லெட் பக்கம் சென்று பேசினான்.
"ம்மா.... நானும் எவ்வளவோ முயற்சி பண்ணி பார்த்துட்டேன்... என்னால பணம் புரட்டவே முடியல,!... நீ அப்பாவோட ஆபரேஷனை அடுத்த மாசத்துக்கு தள்ளிப் போட்டுடு...."
'அய்யய்யோ... அது முடியவே முடியாதுப்பா!... டாக்டர் உடனடியா ஆபரேஷன் பண்ணியே தீரணும்... இல்லேன்னா உயிருக்கே ஆபத்தாக முடிஞ்சிடும்!"ன்னு சொல்றாரு!... நீ வேலை செய்யுற ஜவுளிக்கடை முதலாளிகிட்ட அட்வான்ஸ் கேட்டுப் பாரேன்!" எதிர்முனையில் அம்மா சொல்ல
"யாரு எங்க முதலாளியா?... எச்சில் கையால காக்கையைக் கூட ஓட்ட மாட்டாரு!... ஒவ்வொரு அசைவிலும் தனக்கென்ன லாபம்?ன்னு பார்ப்பாரு!. யாருக்கும் பத்துப் பைசா கூட உதவி செய்ய மாட்டார்!... பயங்கர கறார்ப் பேர்வழி... இல்லை... இல்லை கஞ்சப் பேர்வழி!"
"சரி என்னதான் பண்ணலாம்கிறே?"
"இப்போதைக்கு ஆபரேஷன் வேண்டாம்.... நடக்கறது நடக்கட்டும்!" மறுமுனையில் அம்மா கத்துவதை காதில் வாங்கிக் கொள்ளாமல் இணைப்பை துண்டித்தான்.
மீண்டும் தன் கௌண்டரில் வந்து நின்றவனை நோக்கி வேகவேகமாக வந்த சூப்பர்வைசர், "ரகு... உன்னை முதலாளி கூப்பிடறார்!" என்று சொல்ல சப்தநாடியும் ஒடுங்கிப் போனான்.
"போச்சு... நான் போன்ல பேசியதை யாரோ ஒட்டுக் கேட்டுட்டுப் போய் முதலாளி கிட்ட பத்த வெச்சுட்டாங்க போலிருக்கு!... அவ்வளவுதான் இன்னிக்கு எனக்கு வேலை போகப் போகுது!" நடுங்கிக்கொண்டே சென்றான்.
முதலாளியின் ஏ.சி. அறைக்குள்ளும் வியர்த்தது இவனுக்கு.
"அப்பாவோட ஆபரேஷனுக்கு எவ்வளவு வேணும்?" கனிவோடு கேட்டார் முதலாளி.
"முதலாளி அது வந்து..."
" இங்க பாருப்பா நான் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டானவன்தான்!... கரடு முரடான ஆளுதான்!... ஆனா எனக்குள்ளும் கொஞ்சம் ஈரம் இருக்குப்பா!... நீ போன்ல பேசியதை கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு வந்த நான் கேட்டேன்!... தயவு செய்து என்னைப் பற்றி உன் மனசுல இருக்கிற எதிர்மறை எண்ணத்தை மாற்றிக்கோ!"
மேஜை டிராயரைத் திறந்து பணக்கட்டை எடுத்துப் போட்டவர், "இதுல ஒரு லட்சம் இருக்கு... எடுத்துட்டு போய் உடனே அப்பாவோட ஆபரேஷனுக்கு ஏற்பாடு பண்ணு!" என்றார்.
ரகு தயங்க,
"யோசிக்காதப்பா!... இது சமயத்தில் செய்கிற உதவி!... மனுஷனுக்கு மனுஷனுக்கு உதவி செய்யலைன்னா அப்புறம் மனுஷனா பொறந்ததுல அர்த்தமே இல்லைப்பா!... எடுத்துட்டுப் போப்பா!"
மெல்ல அதை எடுத்த ரவி, 'ரொம்ப நன்றிங்க முதலாளி!" என்று கை கூப்பிச் சொல்ல புன்னகையோடு அவனை அனுப்பி வைத்தார் முதலாளி.
(முற்றும்)
------
முகில் தினகரன், கோவை