தன் மனைவி வேலை பார்க்கும் அதே அலுவலகத்தில் அவளுடன் பணிபுரியும் கவிதா சொன்ன விஷயம் பாலனை மனம் நோகச் செய்தது
"என்னவொரு அநியாயம்?... ராதா மேனேஜரா ப்ரமோஷன் ஆகி.... சம்பளம் அம்பதாயிரம் ஆகி... ஆறு மாசமாச்சாம்!.. ஆனா ராதா இதுவரைக்கும் அதைப் பற்றி என்கிட்ட சொல்லவே இல்லையே?... இப்பவும் கூட தன்னோட சம்பளம் இருபத்தஞ்சாயிரம்தான்னு சொல்லிட்டிருக்காளே.. ஏன்?" யோசித்து யோசித்து தலையே வலித்தது பாலனுக்கு.
"எதுக்காக என்கிட்ட உண்மையை மறைக்கணும்?... மீதி இருபத்தஞ்சாயிரம் எங்க போகுது?" குழப்பத்தில் தவித்தான்.
"என்ன ஆனாலும் சரி.... இன்று கேட்டே விடுவது!" என்கிற தீர்மானத்தோடு முன் ஹாலில் காத்திருந்தான்.
ராதா வந்ததும் வராததுமாய் மெல்ல ஆரம்பித்தான்.
அவள் மழுப்பலாய் பதிலளிக்க, கோபமானான். "உண்மையைச் சொல்லுடி... நீ ஆபீசுக்கு மட்டுந்தான் போறியா இல்ல. வேற எங்காச்சும் போறியா?"
சுயமரியாதை சுள்ளென்று பாதிக்கப்பட, முறைத்தாள் ராதா.
"என்னடி முறைக்கறே?... ஐம்பதாயிரம் சம்பளம் வாங்கிட்டு. என்கிட்ட இருபத்தஞ்சாயிரம்னு பொய் சொல்லிட்டு மீதிப் பணத்தை எவனுக்குடி கொண்டு போய்க் கொடுக்கறே?".
மெலிதாய்ச் சிரித்த ராதா, அமைதியாய் உள் அறைக்குச் சென்று தபால் ஆபீஸில் தன் கணவன் பெயரில் தான் ஆரம்பித்த சேமிப்புக் கணக்கில் அத்தொகையை டெபாஸிட் செய்திருப்பதற்கான பாஸ் புத்தகத்தை காட்டி விட்டு, "ஆறு மாசம் முன்னாடி வரைக்கும் என் சம்பளம் உங்களை விடக் குறைச்சலா இருந்தது!.. இப்ப திடீர்னு ப்ரமோஷன் ஆனதால் என் சம்பளம் உங்களை விட அதிகமாயிடுச்சு. அது உங்களுக்கு தெரிஞ்சா நீங்க மனசு வருத்தப்படுவீங்க!ன்னு... அடுத்த இன்கிரிமெண்ட்ல உங்க சம்பளம் என்னை விட அதிகமானதும் இதைச் சொல்லிக்கலாம்... அதுவரைக்கும் எக்ஸ்ட்ரா பணத்தை போஸ்ட் ஆபீஸில் சேமித்து வைக்கலாம்னு முடிவு பண்ணி போட்டிருக்கேன்....உங்களுக்கு மனசு வலிச்சா அதை என்னால தாங்கிக்க முடியாதுங்க!"
உண்மையை புரிந்து கொண்ட பாலன் வேகமாய் வந்து ராதாவை இறுக அணைத்துக் கொண்டான்.
(முற்றும்)
முகில் தினகரன், கோவை