tamilnadu epaper

*பயிற்சி*

*பயிற்சி*

இது... இப்படி செஞ்சு வச்சியிருக்கீங்க... இது அடுக்குமா... உங்க கிட்ட ஒரு வேல சொன்னா... இப்படித்தான்..." என்று முகத்தினை காட்டமாக வைத்துக் கொண்டு, கண்களால் கத்தி போல் பார்த்துக் கொண்டு கத்தினாள் சுமதி...

 

         திருமணமாகி இரண்டு வருடங்கள் கூட இன்னும் ஆகவில்லை. குமாரும் மனைவி சுமதியை எந்த குறையும் இல்லாமல்தான் பார்த்துக் கொள்கிறான். அலுவலகம் சென்று வந்ததும் வீட்டுக்கு வேண்டிய காய்கறிகள், ரேசன் சாமான்கள், கரண்ட் பில், குடிநீர் வரி, வீட்டு வரி என வெளி வேலைகள் அனைத்தும் பார்த்துக் கொள்வான்.வாரம் இருமுறை சினிமா, பார்க், பீச் எனச் சுற்றுவார்கள். 

 

           குமாருக்கு ஒன்னுமே புரியல... மகிழ்ச்சியாக இருந்தவள் ஏன் இப்படி கத்துகிறாள்... தானும் ஒன்றும் சொல்லவில்லையே.. என ஒரே யோசனை. உடனே எதுவும் கேட்க வேண்டாம் என முடிவுக்கு வந்த குமார், அலுவலகம் சென்று திரும்பிய கலைப்பை போக்க குளிக்கச் சென்றான்.

 

         இருவரும் சாப்பிட்டுவிட்டு படிக்கச் சென்றார்கள்... மெதுவாக கேட்டான் குமார், "என்ன கோபம் என் மேல்... அப்படி கத்தின... அவ்வளவு சத்தம் போட்டு..."

சுமதி சிரித்தாள்..

என்னடா இது சிரிக்கிறாள்.. மனதுக்குள் பல எண்ணங்கள் ஓட 'என்ன...' என்றான் குமார்.

 

            "இல்லீங்க... கத்தி சண்ட போடுறது... கண்ணால கத்தி போல கூர்மையாக பார்க்கிறது... தேவப்பட்டா அடிக்க கைய ஓங்கிறது... இதுக்கெல்லாம் இப்பவே பயிற்சி எடுத்துக்கிறேன்... பின்னாடி உதவியா இருக்குமில்ல..." என்றாள். குமாருக்கு தூக்கிவாரி போட்டது...

"அடக் கடவுளே... இதற்கு பயிற்சியா..."

என வினவியவாறே, "அப்ப நானும் பயிற்சி எடுத்துகிறேன்" என்ற குமார், "என்ன நினச்சிகிட்டு இருக்க..

அம்மா வீட்டுக்கு அனுப்பிடுவேன்... ஜாக்கிரதை.. தெரியுமா... அப்புறம்... " என, அடுத்து என்ன பேச வேண்டும் எனத் தெரியாமல் இழுத்தான்.

"ஏங்க...சிரமப் படுறீங்க... உங்க குணத்துக்கு இது செட் ஆகாதுங்க..." என்றவாறே நகைத்தாள் சுமதி...!

 

 *துரை சேகர்*

 *கோவை.*