தினமும் அலுவலகத்திலிருந்து திரும்பவே லேட் ஆகி விடுவதாலும், அதீத களைப்பின் காரணமாகவும் டி.வி.யில் படம் பார்க்கும் சந்தர்ப்பமே வாய்ப்பதில்லை எனக்கு.
அதிசயமாய் இன்று வேலை சீக்கிரம் முடிய மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்து படம் பார்க்க அமர்ந்தேன் மனைவியோடு.
ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த படம் இருபத்தைந்து வருடங்களுக்கு முன், அதாவது என்னுடைய வாலிப காலத்தில் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிய ஒரு உருக்கமான காதல் படம்.
அந்தக் காலத்தில் என்னை வெகுவாக பாதித்த படம். என் அக்கால காதலி ரேவதியும் நானும் சேர்ந்து பார்த்த முதல் திரைப்படம்.
திரையில் வந்து போகும் ஒவ்வொரு காட்சியும்.. ஒவ்வொரு வசனமும். மனதைப் பிழிந்து எடுக்க, நினைவுகள் முழுவதையும் அவளே ஆக்கிரமித்துக் கொள்ள, எனக்கே தெரியாமல் என்னுள் புதைந்து கிடந்த சோகம் விஸ்வரூபம் எடுத்தது.
ஆறிப் போயிருந்த காதல் தோல்வி ரணம் கிளறப்பட்டு விட, கண்களில் கண்ணீர் அருவி.
"அவள் இப்போது எங்கே.. எப்படி... இருக்கிறாளோ?... ஒருவேளை அவளும் இப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தால் என்னை நினைப்பாளா?.. நிச்சயம் நினைப்பாள்... நினைக்காமல் இருக்க முடியுமா?".
சோகத்தில் தத்தளித்த எனக்கு படம் முடிந்ததும் 'அப்பாடா' என்றிருந்தது.
அவசரமாக கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எழுந்து லைட்டை போட்டேன்.
சற்றுத் தள்ளி அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்த என் மனைவியின் முகத்தை எதேச்சையாகப் பார்த்து திடுக்கிட்டேன்.
அவள் கண்களிலும் ஈரக் கசிவு.
"ஒருவேளை அவளுக்கும்.... என்னைப் போலவே.... ஒரு.....?"
என் மனம் வேறொரு சோகத்திற்கு தாவியது.
(முற்றும்)
முகில் தினகரன், கோயமுத்தூர்.