லதாங்கி, தர்ம ராஜையும்; தேவகியையும் பாதம் தொட்டு, வணங்கி எழுந்தாள்.
தர்ம ராஜ் அவள் தந்தை சுதாகரிடம் சில காசோலைகளையும், வங்கியின் வைப்பு பத்திரங்களையும், கொடுத்தார்." இதெல்லாம் நாராயணன் பெயரில் இருந்தவை. இது லதாங்கிக்கு சேர வேண்டியது. இன்னும் எல். ஐ. சி பணமும் போஸ்ட் ஆஃபிஸ் வைப்பு நிதியும் வர வேண்டியுள்ளது. எங்கள் இருவருக்கும் பென்ஷன் வருகிறது. எங்களுக்கு அதுவே போதும். இந்த வீடு எங்கள் காலத்திற்கு அப்புறம் நாராயணனுக்கு என்று நாங்கள் நினைத்திருந்தோம். அது லதாங்கி பெயரில் எழுதி இருக்கிறோம். அது காலத்தில் அவளுக்கு வந்து சேரும். அவளது நகைகளை அவள் தாயாரிடம் , நாராயணனின் அம்மா சேர்த்து விட்டாள்.
எங்கள் மகன் நாராயணன் இப்படி திருமணம் ஆகி ஆறே மாதங்களில் அவனுக்கு புற்றுநோய் வரும் என்று, யாருக்குத் தெரியும்? தெரிந்திருந்தால்; எத்தனை நன்றாக இருந்திருக்கும். பல சங்கடங்களை தவிர்த்து இருக்கலாம். எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள்." என்று கை கூப்பினார். சுதா கருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மௌனம் சாதித்தார்.
" இன்னும் ஒன்று; சுதாகர். லதாங்கி மேலே படிக்க விரும்பினால், படிக்க வையுங்கள். அதற்கான செலவு யாவற்றையும் நாங்கள் ஏற்கிறோம். இதற்கிடையே அவளுக்கு தகுந்த வரன் பார்த்து திருமணம் செய்விக்க வேண்டுகிறோம். எங்கள் ஆசி அவளுக்கு எப்போதும் உண்டு" என்று தர்ம ராஜ் கூறியதும் சுதாகருக்கு பொங்கிவரும் கண்ணீரை அடக்க முடியாமல் திணறினார். லதாங்கியின் பக்கமாக திரும்பி, "லதா! இனி எங்களை பார்க்கவோ, ஃபோன் பேசவோ செய்யாதே. எங்களைப் பற்றி ஏதும் முக்கியமாக உனக்கு சொல்லும்படியான தகவல் இருந்தால், உன் தந்தைக்கு தெரிவிக்கப்படும். அவர் உனக்குத் தெரிவிப்பார். இந்த ஆறு மாத வாழ்க்கை யை நீ ஒதுக்கி மறந்து விடுவதே, உன் வருங்காலத்திற்கு நல்லது. உன்னை பலப்படுத்திக் கொண்டு, வாழ்க்கையில் நல்லபடியாக முன்னேறி வா." என்று அன்புடன் கூறியதும் லதாங்கி மௌனமாக தன் பெற்றோருடன் புது வாழ்க்கை தேட கிளம்பினாள்.
சசிகலா விஸ்வநாதன்