எக்ஸ்னோரா அமைப்பை சேர்ந்த பா.சீனிவாசன் எழுதிய 'உலக பூமி தினம்: சிறப்பு பார்வை' என்ற கட்டுரையை படித்தேன். சுற்றுசூழல் பாதுகாப்பிற்கான ஆதரவை காட்டுவதற்காக உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22-ந்தேதி உலக பூமி தினம் அனுசரிக்கப்படுகிறது என்பதை இந்த கட்டுரை மூலம் அறிந்தேன். 'நாம் இங்கு நன்றாக வாழ வேண்டும் என்றால் பூமியை பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும். மாற்றம் என்பது ஒவ்வொரு தனிநபராலும் முன்னெடுக்கப்பட வேண்டும்' என்ற இந்த கட்டுரையாசிரியரின் கருத்து, நாம் எல்லோரும் மனதில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
பி.பழனி எழுதிய 'இறைவன் ஒரு நாள்...' என்ற சிறுகதையை படிக்கவே உற்சாகமாக இருந்தது. கொஞ்சம் சிரிப்பாகவும் இருந்தது. கடவுளே நேரில் வந்தால் கூட, அவர், தான் கடவுள் என்று மனிதனிடம் நிரூபிக்க எவ்வளவு பாடுபடவேண்டும் என்பது புரிந்தது. கடைசியில் அந்த மனிதனுக்கு, 'கடவுளிடம் ஏதாவது வரம் கேட்டிருக்கலாமோ' என்று அலைப்பாயுதே அந்த மனம், பெரும்பாலான மனிதர்களுக்கு இருக்கும் ஒன்றாகும்.
அரும்பூர் க.குமரகுருவின் 'முற்பகல் செயின்' என்ற சிறுகதை கிராமிய மணத்துடன் அசரடித்தது. கதையில் பேச்சு... பேச்சு.. மாறி மாறி பேக்கொண்டேதான் இருக்கிறார்கள். ஏதோ ஒரு குக்கிராமத்தில் கொஞ்சநாள் இருந்து வந்ததைப்போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியது இந்த சிறுகதை.
நிரஞ்சனாவின் 'யாதுமாகி நின்றவள்' தொடர்கதை ஒரு ஆவலையும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியபடி தொடர்கிறது. நானும் யாழினியை போல, நாளை என்ன நடக்கப் போகிறது என்பதை தெரிந்துக்கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறேன்.
சிவ. முத்து லட்சுமணனின் அட்சய திருதியை பற்றிய கட்டுரையை படித்தேன். இந்த புனித நாளைப் பற்றி முழுமையாக தெளிவாக இந்த கட்டுரை மூலம் அறிந்துக்கொண்டேன்.
'அட்சயா' சமசுகிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக மங்களகரமான நீண்டகால சொத்துக்களான தங்கம், வெள்ளிப் போன்ற பொருள்களை வாங்க அட்சயதிருதியை நாள் மிக நல்ல நாளாக நம்பபடுகிறது.
தென்னாட்டு திலகர் என்று புகழப்படுகின்ற பெ.வரதராஜுலு நாயுடு அவர்களைப்பற்றிய கட்டுரை அவரின் சிறப்பை பற்றி தெரிந்துக்கொள்ள உதவியது. சிறந்த ஆயுர்வேத மருத்துவராகவும், பத்திரிகையாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்த இந்த சுதந்திரப்போராட்ட வீரரின் வாழ்க்கை வரலாற்றை நான் முதன்முதலாக தமிழ்நாடு இ.பேப்பர் மூலம்தான் தெரிந்துக்கொண்டேன்.
'பக்தி எப்படி இருக்க வேண்டும்?' என்பதை மாணிக்க வாசகரின் விருப்பத்தின்படியே அவரது பாடல்கள் மூலமே உணர்த்தியிருந்த நடேஷ் கண்ணாவின் கட்டுரை சிறப்பிலும் சிறப்பாக இருந்தது.
எல்லாமே சிறப்பாக இருக்கும் ஒரு பத்திரிகை என்றால் அது தமிழ்நாடு இ.பேப்பர்தான்!
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.