tamilnadu epaper

"அவளுக்கென்று ஒரு மனம் "

"அவளுக்கென்று ஒரு மனம் "

உங்க அம்மாக்கு எதுக்கு இப்ப டச் போன் என்று காலையிலேயே ஆனந்தி ஆரம்பித்தாள் அவள் ஆலாபனையை,

 

மோகன் எப்பொழுதும் அவள் பேச்சுக்கு மறு பேச்சு பேச மாட்டான். ஆனால் இந்த விஷயத்தில் அப்படி இல்லை,

 

உனக்கு என்ன பிரச்சனை, அப்பா இறந்து ஒரு மாதம் தான் ஆகிறது ஒரு வருஷத்துக்கு வெளியே போகக்கூடாது என்கிறாய் எவ்வளவு நேரம் தான் உனக்கே வேலை செய்வாள்.

 

ஏன், அக்கம்பக்கத்து மனுஷா இல்ல,அவங்களிடம் பேசிகிட்டு டி.வி பார்த்துகிட்டு சிவனேன்னு பொழுது கழிக்க வேண்டியது தானே ,எங்கள பத்தி உங்களுக்கு அக்கறை கிடையாது.இந்த போனால இன்னும் எத்தனை பிரச்சனை வருமோ ?

 

ஆமா நீ ஊருகதைப் பேசி வம்பு பண்ணுவது பத்தாதுன்னு எங்க அம்மாவையும் அதுல இழுத்து விடுரயா என்று கூறிக் கொண்டே, 

 

ஆனந்தியின் பேச்சை சட்ட செய்யாமல் மகன் வருணை அழைத்து, ஆச்சிக்கு வாட்ஸ் அப், இ மெயில் எப்படி என்று சொல்லிக் கொடு என்று தன் ரூமுக்கு சென்றான் மோகன்.

 

திலகாம்மா, மருமகள் கூறும் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வேலைகளை முடித்துவிட்டு தான் உண்டு தன் போன் உண்டு என்று உட்கார்ந்து விடுவாள் .

 

மூன்று மாதம் இவ்வாறு உருண்டோடியதுவாசலில் தபால் தோழி அழைத்த சத்தம் கேட்டு ஆனந்தி வாங்க சென்றாள்.

 

திலகா என்ற பெயருக்கு ஆயிரம் ரூபாய் மணியாடர் வந்திருக்கு அவங்கள வர சொல்லுங்க என்று கூறியதும்,

 

திலகாம்மா வந்து கையெழுத்திட்டு பணத்தை பெற்றுக் கொண்டார்.

 

ஆனந்தி மாலை மோகன் ஆபீஸ்லிருந்து வீடு வந்ததும் ஆரம்பித்தாள்

உங்க அம்மாவுக்கு யாருக்கிட்ட இருந்து பணம் வந்து இருக்கு என்னன்னு விசாரிங்க ,

 

மோகன் புன்னகைத்துக் கொண்டே எங்க அம்மா கதை, கவிதை எழுதிக்கிட்டு இருக்காங்க அதுக்கு சன்மானமா தமிழ்நாடு இ பேப்பரிலிருந்து பரிசு தொகை வந்து இருக்கு.

 

எங்க அம்மாவோட நெடுநாள் ஆசை,எங்க அப்பா தான் எழுதவே விடல இப்போதுதான் நிறைவேறி இருக்கு.

 

எந்த பொருளையும் நம்ம எப்படி கையாளுகிறோம் என்பதை பொறுத்து இருக்கு. நன்மை, தீமை என்று சொல்லியதும் மாமியாரை மனதார பாராட்ட ஆனந்தி உள்ளே சென்றாள். 

 

 

சங்கரி முத்தரசு, கோவை