"இந்த மனுஷனை எப்படித் திருத்தறது?... ராத்திரி பூராவும் "லொக்கு... லொக்கு"ன்னு இருமறாரு!.. அப்பவும் அந்த பீடிச் சனியனை விட மாட்டேங்கறார்.... என்னமோ பீடி குடிக்கிறதுதான் பிறவிக்கடமை என்கிற மாதிரி எந்நேரமும் குடிச்சுக் குடிச்சு உடம்பைக் கெடுத்துகிறார்" பக்கத்து வீட்டுக்காரியிடம் புலம்பினாள் ஆட்டோக்கார கோபால் மனைவி பங்கஜம்.
"என்ன பண்றது பங்கஜம்?.. பழகும் போது ஈசியா பழகித் தொலைச்சிடறாங்க.. அப்புறம் விட முடியாமல் தவிக்கிறாங்க!" என்றாள் பக்கத்து வீட்டுக்காரி.
"நானும் சண்டை போட்டுப் பார்த்துட்டேன்... கெஞ்சி... அழுதும் பார்த்துட்டேன்!... ஒண்ணும் பிரயோஜனமில்லை!" கரகரத்த குரலில் சொன்னாள் பங்கஜம்.
மாலை 4 மணி வாக்கில் பள்ளிக்குச் சென்ற கோபால் தனது வாடிக்கைக் குழந்தைகள் வழக்கமாய் நிற்கும் இடத்தில் இல்லாது போக தேடினான்.
ஒரு மரத்தடியில் அந்த ஆறு குழந்தைகளும் அமர்ந்து விளையாடிக் கொண்டிருக்க மரத்தின் பின்னால் நின்று அதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
ஒரு குழந்தை 'நான் தான் டீச்சர்' என்று சொல்லியபடி பாசாங்காய்ப் பாடம் நடத்தியது.
இன்னொரு குழந்தை 'நான் தான் பிரின்ஸ்பால்' என்று அவரை இமிட்டேட் செய்தது.
மூன்றாவதொரு குழந்தை "நான் கேம்ஸ் மாஸ்டர்" என்று சொல்லி எக்சர்சைஸ் செய்தது.
கடைசியாய் ஒரு குழந்தை "நான்தான் ஆட்டோ அங்கிள்" என்று சொல்லிக் கீழே கிடந்த ஒரு சிறு குச்சியை எடுத்து தன் வாயில் வைத்து பீடியை பற்ற வைப்பது போல் பற்ற வைத்தது. அடுத்த வினாடியே அதை கீழே போட்டுவிட்டு இன்னொன்றை எடுத்துப் பற்ற வைத்தது.
ஆடிப் போனான் கோபால். "எனக்கே தெரியாமல் நான் இந்தக் குழந்தைகளை கெடுத்து வச்சிருக்கேனே' முன் நெற்றியில் அடித்துக் கொண்டான். குற்ற உணர்ச்சி அவனை ஆட்டிப் படைக்க அப்போதே முடிவெடுத்தான்.
அடுத்த வாரத்தில் ஒரு நாள் கோபால் மனைவி பங்கஜம் பக்கத்து வீட்டுக்காரியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். "வருஷக் கணக்குல சொல்லி பார்த்தேன்... என்னென்னமோ செஞ்சு பார்த்தேன்... அப்பெல்லாம் அந்த பீடியை விடாத மனுஷன் என்ன காரணமோ தெரியல இப்பெல்லாம் பீடியைத் தொடுவதேயில்லை"
(முற்றும்)
முகில் தினகரன், கோவை