நாம் இப்போது பார்க்க இருப்பது 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்னும் கருத்தைத்தான். 'ஆடியில் விதைச்சாதான் தையில அறுவடை' எனும் பழமொழி உண்மையா? கடுமையான கோடை காலத்தை ஒழித்துவிட்டு பிறக்கும் ஆடி மாதம் விவசாயிகளுக்கு முக்கியமான மாதமாக உள்ளது. இந்த மாதத்தில் வயலில் வேகமாக விதைக்கும் பணியைத் தொடங்கி விடுவார்கள்
உழவர் ஏன் ஆடியில் விதைக்க வேண்டும்? கடும் கோடையில் இறுகி காணப்படும் மண், ஆனி மாத மிதமான மழையால் இளகத் தொடங்கிவிடும். ஈரமான வயல் மண்ணில் நுண்ணுயிரிகளும், மண்புழு, நத்தைகளும் உருவாகத் தொடங்கும். இதனால் மண் செழிப்பை பெறத்தொடங்கி விடும். புதிதாக முளைத்த சிறு செடிகளை மேய வரும் கால்நடைகளின் கழிவுகளும் மண்ணில் சேர்ந்து உரமாகும். இதனால் செழிப்பான மண் உழவுக்குத் தயாராகும்.
ஆடிமாதத்தில் சூரியன் பூமியை நோக்கி மிக அருகில் இருக்கும். எப்படி என்றால், பூமியின் வடக்கு முகமானது சூரியனிடமிருந்து விலகி இருப்பதுதான் காரணம் எனப்படுகிறது. பூமிக்கு நெருக்கமாக இருக்கும் சூரியன் அதன் வெப்பமான கதிர்களை எங்கும் விரவியபடி அனுப்பும். இதனால் இந்தக் காலகட்டத்தில், பூமியின் மீது செயல்படும் சூரிய ஈர்ப்புத்திறன் உச்ச நிலையில் செயல்படுகிறது. இந்தச் சூழலால் பூமியின் மண்வளம் சிறப்பானதாக மாறுகிறது.
மேலும் தமிழகத்தில் ஆனி, ஆடி, ஆவணி என்ற மூன்று மாதங்களே மிதமான மழை பொழியும் மாதம் என்பதால், இவைதான் வேளாண்மைக்கான மாதங்கள் எனப்படுகிறது. அந்த மாதங்களில் பெரும்பாலும் நீர்ப்பற்றாக் குறை இருக்காது என்பதால்தான். ஆடியில் விதை விதைப்பது அற்புதமான விளைச்சலைத் தரும் என்பது பன்னெடுங்காலமாக விவசாயிகளிடையே இருந்து வரும் நம்பிக்கை.
ஆடியில் விதைக்கப்படும் காய்கறிகள், கீரைகள், பழச்செடிகள் நல்ல விளைச்சலைத் தருகிறது. என்பது கண்கூடாகப் பார்க்கிறோம். பூச்சிகள், நோய்க்கிருமிகளின் தாக்கம் குறைவாக இருக்கும் இந்த மாதத்தில் விதைத்தால் பிந்தைய மாதங்களில் அதிக செலவோ, இழப்போ இருக்காது என்பதும் ஒரு காரணம். கறையான்கள் அதிகம் உண்டாவதும் இந்த மாதத்தில் என்பதால், மண் அரிக்கப்பட்டு மென்மையாகி வளம் பெறுகிறது. விட்டு விட்டுப் பெய்யும் ஆடிமாத மழை விதைகள் வளர நல்ல சூழலை உருவாக்குகிறது.
குறிப்பாக சிறப்பான ஆடி 18-ம் நாளும் அதன் பின்னர் வரும் நாள்களும் [விதை] விதைப்பதற்கு ஏற்ற காலமாக இருக்கிறது. எனவே, இந்த நாள்களை பெரியோர்கள் ஆடிப்பட்டம் என்றே அழைத்தனர் . அதனால்தான் ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழி உருவானது ஆடியில் பெய்யும் மழையால் ஊரெங்கும் செழித்து குளுமை பரவி இருக்கும்.
இது பாம்புகளுக்கு ஏற்ற காலநிலை என்பதால் அவை வயல்களுக்குள் புகுந்து வசிக்கத் தொடங்கும். இதனால் விளைச்சலை கெடுக்கும் எலிகள் அழிந்து போகும். இப்படி சூரியனில் தொடங்கி, சிறு புழு பூச்சிகள் வரை ஆடியில் பெரும் தாக்கத்தை உருவாக்கி விதைகளை நன்கு வளரச்செய்யும் என்பதாலேயே பழந்தமிழர்கள் ஆடியில் விதைப்பதை பழக்கமாக கொண்டிருந்தனர்.
இன்று மழை குறைந்து, நீர் அரிதாகி மண் வளம் குறைந்து மாறிப்போனாலும், அசைக்க முடியாத நம்பிக்கையோடு இன்னமும் ஆடியில் விதைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் விவசாய மக்கள். அவர்களின் நம்பிக்கை நிஜமாகவும், நம் தேசம் செழிப்பாகவும் இறைவனிடம் வேண்டுவோம். ஆடியில் விதைக்கப்படும் எல்லா பயிர்களும் நன்கு வளர வாழ்த்துவோம்..